|
தமிழ்நாட்டின்
இருநூறு ஆண்டுகால பிரச்சனையான காவிரிப் பிரச்சனை, தற்போது வழக்கம் போல
மீண்டும் தலைத் தூக்கியுள்ளது. வரவிருக்கும் கர்நாடகத் தேர்தலில் மக்களை
தமக்கு சாதகமாக திசை திருப்பிக் கொள்ள பா.ஜ.கவும், காங்கிரசும் முழுவீச்சில்
இறங்கியுள்ளன.
தமிழகத்தின்
வளர்ச்சியை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவியலாத கன்னட வெறியர்கள், அமைதி வழியை
கனவிலும் விரும்பாத கன்னட வெறியர்கள் கர்நாடகத்தில் இருக்கும் நம் தமிழ்
சகோதரர்களுக்கு ஊறுவிளைவிக்கத் தொடங்கியுள்ளனர். அங்குள்ள திரையரங்குகளை
தாக்குவதும், தமிழ் பலகைகளை அடித்து நொறுக்குவதும், பேருந்துகளை
சிறைப்பிடிப்பதும் கல்வீசி சேதம் விளைவிப்பதும் தொடர்கதையாக நடைபெற்று
வருகின்றன. அதற்கு பதிலடி தரும்விதமாக நம்மவர்களும் கன்னட வெறியர்களுக்கு
இணையாக தமிழ்நாட்டிலும் செயல்பட்டு வருகின்றனர்.
தமிழ்நாட்டிலிருந்து
பெங்களூரு வழியாக கர்நாடக செல்லும் அனைவரின் அனைவரின் மனதிலும் தற்போது ஒரு
கேள்வி எழுந்துள்ளது. அது, நாம் இருப்பது இந்தியாவில் தானா? அல்லது வேற்று
நாட்டிலா? சொந்த நாட்டை விட்டு வேறு நாடுகளுக்குச் அகதிகளாக செல்வதைப்போல
தமிழ்நாட்டிலிருந்து கர்நாடகாவிற்கு செல்ல வேண்டியுள்ளது. ஆம்,
தமிழ்நாட்டின் எல்லைக்கு சிறிது தூரம் முன்பாகவே பேருந்துகள் நிறுத்தப்படும்.
அங்கிருந்து நடைப்பயணமாக 3 கி.மீ சென்று கர்நாடக பேருந்தில் ஏறி பயணத்தை
தொடர வேண்டும். வாகா எல்லையை கடப்பதைக் காட்டிலும் மோசமானதாக தெரிகிறதல்லவா?
என்ன அவலமான நிலை?. சுதந்திர இந்தியாவில் மாநிலம் விட்டு மாநிலம் செல்ல
முடிவதில்லை. வெள்ளையர் ஆட்சிகாலத்தில் கூட இப்படிப்பட்ட கொடுமையான
சம்பவங்கள் நடைபெற்றிருக்காது போலும். நாட்டின் ஒருமைப்பாடு, இறையாண்மை
என்பதெல்லாம் கேலிக்கூத்தாகிவிட்டது. ”மராத்தியர்களுக்கே மகாராஷ்டிரா
சொந்தம்”, ”அஸ்ஸாமியல்லாதவர்களை அஸ்ஸாமை விட்டே வெளியேற்ற வேண்டும்” என்ற
குரல்கள் மிக வேகமாகவும், உரக்கமாகவும் ஒலிக்கத் தொடக்கியுள்ளன. மண்ணின்
மைந்தர் கொள்கை என்றுமில்லாத அளவிற்கு தீவிரமாக தலைத்தூக்கத் தொடங்கியுள்ளது.
பிரிவினை வாதத்தை
ஊக்குவித்து நாட்டைத் துண்டாக்கி ஆட்சியைப் பிடித்த வெள்ளையர்களைப் போல,
குறுகிய அரசியல் நோக்கம் கொண்ட இன்றைய அரசியல்வாதிகள் மண்ணின் மைந்தர்
கொள்கைக்கு நெய்வார்ப்பதின் மூலம் ஆட்சியைப்பிடித்துவிட முடியும் என்று
எண்ணுகின்றனர். ஜனநாயகத்தை கேள்விகுறியாக்கும் இத்தகைய அடாவடி செயல்களுக்கு
பலியாவது அப்பாவி தமிழ் மக்களே. பெங்களூரில் இருக்கும் பெரும்பான்மையான
தமிழ்மக்கள் வியாபாரத் தொழிலில் ஈடுபட்டவர்களாகவும், பிழைப்புத்தேடி
குடிபெயர்ந்தவர்களாகவும் இருக்கின்றனர். தமிழகத்திற்கும் கர்நாடகாவிற்கும்
பிரச்சனை ஏற்படும்போதெல்லாம் இவர்களின் வாழ்க்கை பாதுகாப்பற்றதாகிவிடுகிறது.
எந்த நேரத்திலும் தம்மீது தாக்குதல் நடத்தப்ப்டலாம் என்கின்ற அச்ச
உணர்விலேயே இவர்கள் இருக்கவேண்டியுள்ளது.
ஒகேனக்கல் கூட்டுக்
குடிநீர்த்திட்டத்திற்கு முந்தைய ஆட்சியின் போதே அனுமதி வழங்கிவிட்ட
கர்நாடக அரசு, தற்போது இந்த பிரச்சனையை கையிலெடுத்திருப்பது அப்பட்டமான
அரசியல் இல்லாமல் வேறென்ன? மத்தியில் ஆட்சியில் இருக்கும் காங்கிரசு அரசோ,
கர்நாடகாவில் எப்படியாவது இம்முறை ஆட்சியைப் பிடித்துவிட வேண்டுமென்பதற்காக
கண்மூடி, வாய்பொத்தி மெளனம் காத்துவருகிறது. இத்தகைய சுயநல அரசுகள்
இந்தியாவின் சாபக்கேடு போலும். ஆட்சியைப் பிடித்துவிட வேண்டுமென்பதில்
மட்டும் குறியாக இருக்கும் சோனியா காந்தி மக்கள் நலனை எப்போதுதான் கருத்தில்
கொள்வாரோ? திரைமறைவிலிருந்து ஆட்சியை நடத்தும் இவர், ஒகேனக்கல் பிரச்சனையில்
தற்போதைக்கு எந்தவொரு முடிவும் எடுக்கப் போவதில்லை. ரோம் நகரம்
பற்றியெறியும் போது, அதன் மன்னன் நீரோ பிடில் வாசித்துக் கொண்டிருந்தானாம்.
இதுதான் மன்மோகன் சிங் அரசின் தற்போதைய நிலை.
உச்சநீதிமன்றமும்
இம்மாதியான விஷயங்களுக்கு வெறும் வார்த்தைகளில் சில கண்டனங்களை
தெரிவித்துவிட்டு மீண்டும் தம் உறக்கத்தில் மூழ்கிவிடுகின்றது. முல்லைப்
பெரியாறு பிரச்சனையில் உச்சநீதிமன்றம் கேலி கூத்தாகப்பட்டது. காவிரி
நடுவர்மன்ற தீர்ப்பினை அமுல்படுத்தவதில் உச்சநீதிமன்றம் கேலி
கூத்தாகப்பட்டது. இம்மாதிரியான தொடர் சம்பவங்களை பார்த்துக்கொண்டு
உச்சநீதிமன்றம் என்ன செய்துகொண்டிருக்கிறது?
ஒகேனக்கல்
பிரச்சனையில் தமிழகமும் கர்நாடகமும் அல்லோலப்பட்டுக் கொண்டிருக்கும்
சூழ்நிலையில் குடியரசுத்தலைவர் பிரதிபா பாட்டில் தம் கண்டனத்தை
தெரிவிக்காதது ஏன்?
பா.ஜ.கவும் அந்தந்த
மாநில மக்களுக்கு சாதகமாக செயல்படுவதுபோல இரட்டைவேடம் போட்டுவருகிறது.
கருணாநிதி தன்
பங்கிற்கு பேச்சுவார்த்தை, பொதுக்குழு, கமிட்டி என்று பேசிப்பேசி ஒகேனக்கல்
திட்டத்தை கிடப்பில் போட அச்சாரம் போட்டுவிட்டார். இரண்டு நாட்களுக்கு முன்,
தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டப் போராடுவதாக அறிவித்த கருணாநிதி, திடிரென
‘கர்நாடக தேர்தலுக்குப்பின் பேச்சுவார்த்தையை வைத்துக்கொள்ளலாம்.அதுவரை
திட்டம் நிறுத்தி வைக்கப்படுகிறது’ என்று அறிவித்திருப்பது வைகோவின்
வார்த்தைகளிலே சொன்னால் தமிழர்களுக்கு இழைக்கப்படும் பச்சைத் துரோகம்.
கர்நாடகத் தேர்தலில் வெற்றி பெறும் கட்சி தமிழகத்தின் உரிமையில் தலையிடாது
என கருணாநிதியால் உறுதியளிக்க முடியுமா? அப்படி அந்தக் கட்சி தமிழகத்திற்கு
எதிராக செயல்படும்போது கருணாநிதி சாகும் வரை உண்ணாவிரதமிருந்தோ அல்லது
கல்லகுடி போராட்டத்தில் இரயில் தண்டவாளத்தில் தலையைவைத்துப் போராடியதைப்போல
இன்னுமொரு கல்லகுடி போராட்டத்தை நடத்துவதற்கோ தயாரா? ஒகேனக்கல் கூட்டுக்
குடிநீர்த் திட்டம் ஏற்கெனவே குறிப்பிட்டபடி உரியகாலத்திற்குள்
முடிக்கப்படவில்லையென்றால் தானோ அல்லது இத்திட்டம் தொடர்பாக ஜப்பான்
சென்றுவந்த உள்ளாட்சித்துறை அமைச்சர் ஸ்டாலினோ அரசியலில் இருந்து முழுமையாக
ஓய்வுபெற்றுக்கொள்வதாகவோ மக்கள் முன் உறுதியளிக்க முடியுமா?
கர்நாடகாவில் தமிழ்
திரைப்படங்களுக்கு தடைவிதிக்கப்பட்டுவிட்டது என்றவுடன் தம் தொழில்
பாதிக்கப்பட்டுவிட்டதினால் தமிழ்திரையுலகம் உண்ணாவிரதம் என்கிற பெயரில் தம்
எதிர்ப்பைக் காட்டிவிட்டது. ஒரு நால் உண்ணாவிரதமும் முடிந்தது. வழக்கம்போல,
தம் பணிகளை தொடரச் சென்றுவிட்டனர். ஆனால் தினமும் தமிழகத்திலிருந்து
கர்நாடகாவிற்கும், கர்நாடகாவிலிருந்து தமிழகத்திற்கும் சென்றுவந்து
கொண்டிருக்கும் தமிழர்களின் நிலையென்ன? நாட்டைத் துண்டாட நினைக்கும் இததகைய
அரசியல்வாதிகளுக்கு மக்கள் கற்பிக்கப் போகும் பாடமென்ன?
“செப்புமொழி
பதினெட்டுடையாள் எனினும் சிந்தனை ஒன்றுடையாள்” என்ற பாரதியின் வாக்கு
பொய்யாக்கப்பட்டுவிடுமோ அன்ற அச்சம் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
”இந்தியாவில்
பிறந்த எவரும், இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் சுதந்திரமாக சென்று வரலாம்”
என்கின்ற அடிப்படை உரிமையை இந்தியா திரும்பப் பெற்றுக்கொண்டுவிட்டதா?
“இந்தியா என்
தாய்நாடு. இந்தியர் யாவரும் என் உடன்பிறந்தோர்…..” இது நான் பள்ளியில்
படிக்கும் காலத்தில் தினமும் காலை இறைவணக்கத்தின்போது எடுத்துக்கொள்ளும்
உறுதிமொழியின் தொடக்கவரிகள். அவ்வுறுதிமொழியினை தகர்த்தெறிய துடிக்கும்
அரசியல்வாதிகளுக்கு மக்களாகிய நாம்தான் உரிய பாடம் கற்பிக்க வேண்டும்.
|