தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களின்
எல்லைப்பகுதியிலிருக்கும் கிராமமொன்றில் 1983-ல் பிறந்த நான், பள்ளிப்பருவம்
முழுவதையும் அக்கிராமத்திலேயே கழித்தேன். ஐந்தாம் வகுப்பு வரை ஊராட்சி
ஒன்றிய துவக்கப்பள்ளியிலும் பின் ஆறு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை அரசு
மேல்நிலைப்பள்ளியிலும் படித்தேன். இளநிலை தொழில்நுட்பவியல் (B.Tech)
நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியிலும், முதுநிலை தொழில்நுட்பவியல் (M.Tech) திருநெல்வேலியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார்
பல்கலையிலும் படித்தேன்.
ஆராய்ச்சி படிப்பையும் (Ph.D) அதே பல்கலையில் பகுதி நேரமாக தொடர்ந்து
வருகிறேன். தற்போது உலகப்
புகழ்பெற்ற மென்பொருள் நிறுவனமொன்றில் பணியாற்றி
வருகிறேன்.
தமிழின்பால் எனக்கு சிறுவயதிலேயே அலாதியான பிரியமுண்டு. சிறுவயதில் என்னை
இரண்டு இடங்களில் மட்டுமே பார்க்க முடியும். ஒன்று பள்ளிக்கூடம், இன்னொன்று
நூலகம். இம்மாதிரியான புத்தகங்கள்தாம் என்றில்லாமல் எல்லா மாதிரியான
புத்தகங்களையும் படிப்பேன். இருப்பினும் அவை பெரும்பாலும் வரலாற்றுச்
சம்பவங்கள், அறிவியல் கதைகள், தலைவர்களின் வாழ்க்கை என்றுதான்
இருந்திருக்கின்றன. நாவல்கள், சிறுகதைகள் அவ்வளவாக படித்ததில்லை.
இதுவரையிலும் ‘அடுத்தவீட்டு ஜன்னலை எட்டிப்பார்ப்பது தான் நாவல்’ என்றொரு
எண்ணத்தால் அவற்றை படிக்காமல் இருந்த நான் தற்போது தேடித்தேடி
படித்துக்கொண்டிருக்கிறேன்.
மொழி ஆளுமையையும், வாழ்க்கையைப்பற்றிய புரிதலையும் அந்த கிராமத்து
நூலகத்தில்தான் கற்றுக்கொண்டேன். எண்ணிலடங்கா புத்தகங்களின் நடுவில் நானும்
ஒரு புத்தகப்புழுவாக இருந்திருக்கிறேன். எனக்கு படிப்பதைத் தவிர வேறொன்றும்
தெரியாது. நான் அதிகமாக விளையாடியது கிடையாது. திரைப்படத்திற்குக் கூட
ஆண்டிற்கு ஓரிருமுறை தான். அதுவும் அத்திரைப்படம் இதமான தென்றலைப்போல
இருந்தால் மட்டுமே.
அதிக நவீனத்துவத்தில் எனக்கு அத்துனை விருப்பமிருப்பதில்லை. அதில் நான் ஒரு
பழமைவாதி என்று கூட சொல்லலாம். தினமும் தொலைபேசியில் என் தந்தையிடத்தே
பேசினாலும், அவருக்கு கடிதம் எழுதுவதையே அதிகம் விரும்புகிறேன். தபால்
நிலையங்களே மறந்துபோய்விட்ட இந்த தகவல்தொழில்நுட்ப வேக உலகில் அஞ்சல்தலை
ஒட்டிய கடிதத்தை நான் எழுதுவதை எங்கள் அலுவலகத்தில்
பலர் ஆச்சரியமாகப்
பார்ப்பதுண்டு. உலகின் மறுமுனையைக்கூட நொடியில் தொடர்புகொள்ளும்
வசதியிருக்கும்போது இன்னும் இந்த பழைய கடிதமுறை வேண்டுமா என்று பலர்
கேட்பதுண்டு. ”தொலைபேசி வார்த்தைகளை விட பேனாவின் வார்த்தைகள் அதிக அன்பை
வளர்க்கிறது. அதிலிருக்கும் இன்பத்தை அனுபவித்து பாருங்கள்” என்பேன் நான்.
அவசியமல்லாத பொழுது எதற்கு நவீனத்துவம்?
சிறுவயதிலிருந்தே எழுத வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியிருந்தது. நான்
படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின்
வெளிப்பாடு தான் இந்த இணையதளம். 10-14 மணிநேர அலுவலக வாழ்க்கையாகிவிட்ட
போதிலும் இன்னொருபுறம் ஆராய்ச்சிப் படிப்பைத் தொடர்ந்திட்ட போதிலும் தமிழில்
எதையாவது படித்துக்கொண்டும் எழுதிக்கொண்டும் தான் இருக்கிறேன். இது
ஒருவிதமான காதல்.
”வாழ்க்கையை ஆழமாக உற்றுநோக்க வேண்டுமெனில் அவன் காதலித்திருக்க வேண்டும்”
என்று (காதலில் தோல்வியுற்ற) நண்பர் ஒருவர் அடிக்கடி கூறுவதுண்டு. காதல்
பற்றிய பார்வை மட்டுமே எனக்குண்டு. அனுபவம் கிடையாது. ஏனோ அதில் நான்
தீவிரம் காட்டியதில்லை. கற்பனைக் காதலியைக்கொண்டு கவிதைகளை
எழுதிக் கொண்டிருந்த நான்,
பேரழகும், பேரன்பும் ஒருங்கே கொண்ட தேவதையை சந்தித்த முதல் பார்வையிலேயே
முழுவதுமாக பிடித்துப்போக அவளை விரைவில் மணக்கிறேன்.