|
எழுத்து மீதான ஆர்வம்
எழுத
வேண்டும் என்ற எண்ணம் மிகச்சிறிய வயதிலிருந்தே இருந்தது. அச்சிறு வயதில்
எண்ணற்ற காமிக்ஸ் கதைகளும், சிறுவர்மலர், தங்கமலர் போன்றவையும் தான் என்
நண்பர்கள். அக்கதைகளின் மூலமாகத்தான் என் தமிழ் வளர்ந்தது என்றும் கூறலாம்.
அதில் வரும் கதைகளை தழுவின மாதிரியே சில திகில்/மர்மக் கதைகளை எழுதி
பாதியிலேயே விட்டுவிட்ட பக்கங்கள் இன்றும் என்னிடம் உள்ளன.
பொறியியல் படிக்கும் போது மீண்டும் எழுத்தார்வம் துளிர்த்திடவே சில
கட்டுரைகளை எழுதினேன். குறிப்பாக சு.ப. வீரபாண்டியன் அவர்களின்
“பகத்சிங்கும் இந்திய அரசியலும்” என்ற புத்தகம் என்னை வெகுவாகவே பாதித்திடவே
அதைப்பற்றியதான என் விமர்சனங்களை முன்னிறுத்தியும் சில கட்டுரைகளை எழுதினேன்.
இவற்றை இணையத்தில் வெளியிட வேண்டும் என்ற ஆர்வம் இருப்பினும் அந்நாட்களில்
அவ்வளவாக முயற்சி எடுக்கவில்லை. மீண்டும் இடைவெளி.
திடிரென பீறிட்டுக் கிளம்பும் உணர்வாகத்தான் இந்த எழுத்தார்வம் இருந்துக்
கொண்டிருக்கிறது. இதோ ஓராண்டுக்குமுன் இந்த வலைத்தளத்தில் எழுதத்தொடங்கிய
நான் தொடர்ந்து எழுத முடியாமல் தொக்கி நிற்கிறேன். இதற்கான காரணங்களை
ஆராய்ந்தபோது, எனக்குக் கிடைத்த பதில்கள் சில
-
தட்டச்சு செய்ய இயலாமை
-
ஆர்வம் குறைதல்
-
வரவேற்பின்மை
நாஞ்சில
நாடன், எஸ்.ராமகிருஷ்ணன் போன்றவர்களின் புத்தகங்களையும், கட்டுரைகளையும்
படிக்கும்போதுதான் நாமும் எழுத வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி,
வலுப்பெறகிறது. ஆனால் எழுதிய பின் அதை தட்டச்சு செய்ய வேண்டும் என்று
எண்ணும் போது எழுத வேண்டும் என்ற ஆர்வம் மங்கிவிடுகிறது. மேலும்
வரவேற்பின்மையும் இதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. இணையதளம் என்றாலே
பொதுவாக சினிமா, விளையாட்டு, கவர்ச்சி, சிரிப்பு போன்றவைதான் முழுவதுமாக
ஆக்கிரமித்துள்ளன. இதற்குத்தான் எல்லா காலகட்டங்களிலும் பார்வையாளர்கள்
அதிகம். மேற்கூறிய எந்த பிரிவிலும் என் வலைத்தளம் கிடையாது. அது முழுக்க
முழுக்க அறிவுசார்ந்த, பொருள்சார்ந்த பிரிவைச் சார்ந்தது. இதற்கான வரவேற்பு
மிகவும் குறைவாக இருப்பதில் ஆச்சரியமில்லைதான். ஏனெனில் சிலரிடத்து மட்டுமே
விலைபோகக் கூடியவை அவை. இருப்பினும், தற்போது ஏராளமான தமிழ் வலைத்தளங்கள்
என் கட்டுரைகளை மீள் பிரசுரம் செய்திருப்பதினால் எழுத வேண்டும் என்ற எண்ணம்
மெல்ல மெல்ல மீண்டும் உருவெடுக்கிறது.
சமீபத்தில்
திருநெல்வேலிக்குச் சென்றிருந்த நான், என் பேராசிரியர் முனைவர் ந. கிருஷ்ணன்
அவர்களை சந்தித்து உரையாடிவிட்டு வந்தேன். என் இணையதளத்தைப் பார்த்துவிட்டு
அவரளித்த உற்சாகம் தான், இணைய முகவரியை புதுப்பிக்கச் செய்தது. அவர் போன்ற
தமிழ் ஆர்வலர்களின் வார்த்தைகள் தான் என் போன்ற வளரும் எழுத்தாளர்களுக்கு
உற்சாக மருந்து. எரிந்து கொண்டிருக்கும் விளக்கு அணையாமலிருக்க அவ்வப்போது
தூண்டிவிட்டுக் கொண்டிருத்தல் போல வாசகர்களின் வருகையும், வரவேற்பும் தான்
தொடர்ந்து எழுத வைக்கும். நான் படித்தது முழுக்க முழுக்க பொறியியல் தான்
என்றாலும் அடிப்படையில் நான் ஒரு தமிழ் மாணாக்கன் தான். அதன் மீதான ஆர்வம்
என் எழுத்துப்பயணத்தை தொடர்ந்து இட்டுச் செல்லும். இதோ அப்பயணத்தில்
மீண்டும் நான்….
|