Can't view the contents correctly? Click Here >>

 

கத்தி முனையில் ராஜினாமா

எல்லாம் சுமூகமாகத்தான் சென்று கொண்டிருந்ததது. திடிரென ஒருநாள் மனிதவளத்துறையிலிருந்து மின்னஞ்சல் வருகிறது “நாளை வந்து சந்திக்கவும்” என்று. என்ன விஷயமாக இருக்குமென்று தெரியாத காரணத்தால் ஒருவித கலக்கத்துடன் சென்று பார்த்தபோது அவர்கள் கூறியதாவது : “உங்களுக்கு இரண்டு வாய்ப்புகள் தரப்படுகின்றன. நீங்களாக ராஜினாமா செய்கிறீர்களா? அல்லது நிறுவனமே உங்களை பணிநீக்கம் செய்யட்டுமா?”. வார்த்தைகள் இடிபோல் இறங்கியது. எதற்காக ராஜினாமா செய்ய வேண்டுமென்று கேட்டதற்கு, ‘தங்களது திறன் மேம்பாடு திருப்தி அளிக்காதலால் நாங்கள் உங்களை வெளியேற்றுகிறோம்” என்றனர். என்னுடைய திறனை வெளிப்படுத்துவதற்கு எந்தவித வாய்ப்பும் தராமல் திடிரென வெளியேற்றுவது எந்தவிதத்தில் நியாயம்? சுமார் 6 மாத காலத்திற்கு காத்திருப்போர் பட்டியலில் வைத்திருந்தது உங்களது குற்றம். உங்களது திறனுக்கு எற்ற ப்ராஜெக்ட் இன்னும் வரவில்லை, சிறிது காலம் பொறுத்திருங்கள் என்று கூறிவிட்டு, எந்தவித முன்னறிவிப்பும் இல்லாம்ல், தற்போது திடிரென வெளியேறச் சொல்வது எவ்வகையில் ஏற்கத்தக்கது என்று பலவாறு விவாதித்தும் அவர்களிடமிருந்து வந்தது ஒரெ பதில்தான், முன்பு கூறிய ”உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள இரண்டு வாய்ப்புகளில் எதனை பயன் படுத்திக்கொள்ளப் போகிறீர்க்ள் என்பதைத்தான் கேட்க விரும்புகிறோம். வேறு எதனையும் நாங்கள் கேட்கத் தயாரில்லை”, என்பதுதான் அது.

நாமாக ராஜினாமா செய்ததாக எழுதிக்கொடுத்தால் வேறு நிறுவனத்தில் சேர முடியும். ஆனால் அதுவே நிர்வாகமே வெளியேற்றதாக இருந்தால் எந்த நிறுவனத்திலும் சாமானியமாக சேரமுடியாது. அதனால், நமக்க்கிருக்கும் ஒரே வாய்ப்பு. ராஜினாமா செய்வதுதான். ஆக அதைதான் செய்ய வேண்டியிருந்தது.

மேற்கூறிய சம்பவம் ஏதோ ஒரு சிறு நிறுவனத்தில் நடப்பதன்று. இந்தியாவின்/ஆசியாவிலேயே மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் அன்றாடம் நடக்கும் சம்பவம்தான். ஊழியர்களின் நலனில் சிறிதும் அக்கறையில்லாது, விட்டேற்றித்தனமாக நடந்துகொள்ளும் மனப்பான்மை இங்கு மிதமிஞ்சியிருக்கிறது. மனிதாபிமானம், மனிதநேயம் என்பதெல்லாம் இவர்கள் வாழ்க்கையில் எப்பொழுதுமே கேட்டிராத வார்த்தைகள் போலும். திடிரென பணி நீக்கம் செய்யப்படுபவரின் மனநிலை எப்படியிருக்கும், அவர் எத்தகைய மன உளைச்சலுக்கு ஆளாவார், அவரது குடும்பம் நட்டாற்றில் விடப்பட்டுவிடுமே என்பதைப்பற்றியெல்லாம் சிறிதும் கவலையல்லாத கல் நெஞ்சக்காரர்கள் இவர்கள்.

தனிமனிதனாக மிகப்பெரிய நிறுவனத்தை எதிர்ப்பதென்பது நடவாத காரியம்.மேலும், தகவல் தொழில்நுட்ப ஊழியர்களுக்கென்று எந்தவித சங்கமோ, அமைப்போ இல்லாததால், பணிநீக்கம் குறித்து எங்கும் முறையிட முடியாது.விதியை நொந்துகொண்டு மாற்று வேலைக்குத்தான் முயற்சிக்க வேண்டும்.

எவ்வித பணிப்பாதுகாப்பும் இல்லாத தனியார் நிறுவன வாழ்க்கை என்பது ஒவ்வொரு நாளும் கத்தி மீது நடப்பது போல்தான். “அரையணா காசு என்றாலும் அரசாங்க காசாக இருக்க வேண்டும்” என்பதில்தான் எவ்வளவு உண்மையிருக்கிறது. அரையணா காசு என்பதெல்லாம் மலையேறிவிட்டது. பன்மடங்கு ஊதிய உயர்வைப் பெற்று திக்குமுக்காடி போயிருக்கும் அரசு ஊழியர்களின் இடத்தில் நம்மையிம் நிலைநிறுத்திக்கொள்ள முயற்சிப்பதுதான் புத்திசாலித்தனமாகும்.(சம்பளத்திற்கு சம்பளமுமாயிற்று;கிம்பளத்திற்கு கிம்பளமுமாயிற்று). 8-மணிநேர வேலை, உள்ளுரிலேயே பணி என யாருக்கு கிடைக்குமிந்த அரியாசனம்?

மிகப்பெரிய கார்ப்போரேட் நிறுவனத்தை எதிர்க்க வேண்டுமெனில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பும், ஆதரவும் வேண்டும். ஆனால், அவர்களே துண்டைக் காணோம், துணியைக் காணோம் என்று ஓடிக்கொண்டிருக்கும் சூழ்நிலையில், ஆதரவு, போராட்டம் என்பதெல்லாம் வெறும் வறட்டு நிலைப்பாடி தான். ஊரைப்பார்த்து செல்வதுதான் உத்தமம்.
 

free hit counters
பதிப்புரிமை © TAMILCAFE. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை / IP கொள்கை 
 
Disclaimer: Most of the contents of this site are contributed by readers. TAMILCAFE.NET cannot be held responsible for authenticity of the contents or any copyright violation and views proposed by the author.
However, we are willing to take corrective actions.  This site also does not store any files on its server. We only index and link to content provided by other sites. Please send your queries to admin@tamilcafe.net