Can't view the contents correctly? Click Here >>

புதிய தமிழ் புத்தகங்கள் இணைக்கப்பட்டுள்ளன

மனைவி அமைவதெல்லாம்...

சமீபத்தில் எனக்கு அறிமுகமான இரண்டு மாந்தர் என்னை மிகவும் அதிகமாகவே பாதித்துவிட்டனர். திருமணம் என்னும் பந்தத்தில் நமக்கு அறிமுகமாகும் மனைவியென்பவள், நம்மோடு இறுதிவரை பயணிக்கிறாள்.அப்படி பயணிக்கும் அவள்தான், நம் வாழ்க்கையின் போக்கை தீர்மானிப்பவள். அத்தகையவள், எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு பல உதாரணங்களில் இந்த இருவர்தான் என்னை பாதித்தவர்கள்.

தமிழ்தாய் தாங்கி நிற்கும் அணிகலன்களுள் முக்கியமான சிலப்பதிகாரத்தின் கதாநாயகி கண்ணகி, மாந்தர்குலம் மனைவி எப்படி அமையவேண்டும் என்பதற்கு சிறந்த இலக்கணமாக திகழ்கிறாள். இதோ ஒரு சம்பவம்.

மாதவியை பிரிந்து வந்த கோவலன், கண்ணகியுடன் பிழைப்பைத் தேடி மதுரை மாநகருக்கு வருகின்றனர். கவுந்தி அடிகள் அவர்களை மாதரியின் வீட்டில் தங்க வைக்கிறார்.கண்ணகி, கோவலனுக்கு உணவு சமைத்து பரிமாறுகிறாள். எப்படி?

”குமரி வாழையின் குறுந்தகம் விரித்து
தண்ணீர் தெளித்து தன்கையால் தடவி”

ஆம், அந்த தலைவாழை இலையை தன் கையாள் நீர் தெளித்ததோடு தடவியும் நீவிவிட்டும் அன்னத்தை பரிமாறுகிறாள். தன்னைப்பிரிந்து பல காலம் வேறொருத்தியுடன் உறவுகொண்டிருந்தவர் என்றாலும் அவர்மீதான அன்பில் சிறிதும் குறைபாடில்லாமல், மாற்றமில்லாமல் உணவு பரிமாறுகிறாள். இதனைக் கண்ட கோவலன், மனம் தீயினிலிட்ட புழிவாக துடிக்கிறது. இப்படிப்பட்ட குலக்கொழுந்தை, மாதர்குல அணிவிளக்கை பிரிந்திருந்தேனே என்று எண்ணியதோடு தன் தவற்றுக்காகவும் வருந்துகிறான். அவள் கண்ணீர்விட  தான் காரணமாகிவிட்டதை எண்ணி மனம்வருந்தி அழுகின்றபோது, கண்ணகி உரைக்கிறாள்: “எனக்காக அழ வேண்டாம், உங்கள் பெற்றோர் மனம் வருந்தும்படி, அவர்கள் அழும்படி செய்துவிட்டீர்களே” என்கிறாள்.

”அவர்தம் உள்ளம்தாம் போற்றா
ஒழுக்கம் புரிந்தீர்”

தனக்கு துரோகம் செய்ததைக்கூட பெரிதாக எண்ணிக்கொள்ளாமல், தன் மாமனார், மாமியார் மனம் வருந்தும்படி நடந்துகொண்டதை கண்டு அவள் மனம் நோகிறாள்.

அடுத்ததாக, என்னை பெரிதும் பாதித்த, கவர்ந்த பெண்மணி ஜெனிபர். ஆம், பொதுவுடைமை தத்துவத்தினை உலகுக்கு அளித்து, உழைப்பவனுக்கே நிலம் சொந்தம் என்பதை வலியுறுத்திய காரல்மார்க்ஸின் மனைவி தான் ஜெனிபர்.

காரல்மார்க்ஸ், மிகவும் கோரமான முகத்தையும், முரட்டுத்தனமான நடவடிக்கையையும், கொண்டவர். மற்றவர்களைப்பற்றி பகடி பாடுவதில் வல்லவ்ர். ஆனால், ஜெனிபர் இவருக்கு முற்றிலும் மாறுபட்டவர். பார்ப்பதற்கு மிகவும் அழகானவர். எழில்கொஞ்சும் இந்த முகத்தை கட்டிக்கொள்ளும் அந்த அதிர்ஷ்டசாலி யாரோ என்று அவ்வூரே ஆச்சரியப்பட்ட அழகு. இவர்களிருவரும் பக்கத்து வீட்டுக்காரர்கள். வேறு வேறு மதத்தைச் சார்ந்தவர்கள். காரல்மார்க்ஸை விட ஜெனிபர் நான்கு வயது மூத்தவள். இருப்பினும், சிறுவயது முதலே இருவரும் காதல் கொண்டதினால், ஜெனிபர் தன் குடும்பத்தை எதிர்த்து காரல்மார்க்ஸை திருமணம் செய்து கொண்டார். அதுமட்டுமல்ல, காரல்மார்க்ஸ் படிக்க வெளியூர் சென்றுவிட்டதினால் அவருக்காக சுமார் 9 ஆண்டுகள் காத்திருந்து அவரை திருமணம் செய்து கொண்டார். இதுவன்றோ உண்மைக் காதல்!!!

காரல்மார்க்ஸின் வாழ்க்கை தொடர் போராட்டமாகவே இருந்தது. ஒரு ஊரில் குட ஆறு மாதத்திற்கு மேல் தங்கமுடியாத நிலை மட்டுமல்ல, காவல்துறையினரின் தொடர் கண்காணிப்பும் கூட. நாடு கடத்தப்படும் சம்பவங்களெல்லாம் இவர்கள் வாழ்க்கையில் வெகு சாதாரணம்.வறுமையின் கோரப்பிடியில் வாழ்க்கையை நடத்த வேண்டிய சூழ்நிலை. ஒரு கட்டத்தில், ரொட்டிக்காரனுக்கும், இறைச்சிக்காரனுக்கும் கூட பணம் கொடுக்க முடியாத நிலை. வீட்டைக்காலி செய்யுமாறு வீட்டின் உரிமையாளர் தினமும் சத்தம் போடுகிறார். வீட்டில் சாப்பிட எதுவுமேயில்லாத சூழ்நிலையில் அவர்களுடைய மூன்றாவது குழந்தை பட்டினியால் இறந்துவிடுகிறது......

எந்நிலையிலும், காரல்மார்க்ஸை, ஜெனிபர் கடிந்து கொண்டதே கிடையாது. எல்லா கொடுமையான தருணங்களிலும் காரல்மார்க்ஸிற்கு பக்கபலமாகவும், உறுதுணையாகவும் இருந்து, அவரை மறைமுகமாக வழிநடத்திச் சென்றதினால் தான், “மூலதனம்” என்னும் அரிய பொக்கிஷத்தை பெறமுடிந்தது.

மனைவி என்பதற்கு இவர்களிருவரும் மிக சிறந்த உதாரணங்கள். ஆம், மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்......

 

free hit counters

பதிப்புரிமை © TAMILCAFE. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை / IP கொள்கை 
Disclaimer: This site does not store any files on its server. We only index and link to content provided by other sites.