தமிழ் வாழ்கிறதா? வீழ்கிறதா?
சமீபத்தில்
என்னைப்போலவே தமிழின்மீது அதிகப்பற்றும், ஆர்வமும் கொண்ட நண்பரிடத்து
பேசிக்கொண்டிருக்கும்போது, அவர் தெரிவித்தது, “தமிழ் வாழவில்லை; தமிழால்தான்
பலரும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்” என்றார். ஆம், இதில்தான் எததனை உண்மை
பொதிந்துகிடக்கிறது. தமிழகத்தலைவர்களில் பெரும்பாலானோர், குறிப்பாக திராவிட
பரம்பரையில் வந்த அனைவருமே தமிழை வியாபார பொருளாக்கி தம் வங்கிக்கணக்கினை
பன்மடங்கு உயர்த்த்திக்கொண்டனர். தமிழை செம்மொழியாக்கினோம்,
ஆட்சிமொழியாக்கினோம் என வறட்டு வாதங்களை உதிர்த்துக்கொண்டிருக்கின்றரே தவிர,
உண்மையில் தமிழின் வளர்ச்சிக்கு இவர்கள் எந்தக் காலகட்டத்திலும் எதுவுமே
செய்யவில்லை.
யுனிசெப் வெளியிட்ட அழிந்துவரும் மொழிகளின் பட்டியலில் தமிழும் உள்ளதை கண்டு,
என் இதயம் உறைந்தே போனது. என் தாய்தமிழ் அழிந்துபோகும் மொழிகளுள் ஒன்றா?
இலங்கையில் ஒட்டுமொத்த தமிழினமே அழிந்துவிடக்கூடிய நிலையிலிருக்கும்போது
தமிழ்மட்டும் எப்படி உயிர்வாழ முடியும்? கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்
தோன்றிய மூத்தக்குடியினரான் பேசப்பட்ட மொழி என்பதெல்லாம் இனி வறட்டு
வார்த்தைகளா? காற்று இல்லாத இடத்தில் கூட தமிழன் இருப்பான் என்பதன் அர்த்தம்
தமிழ் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறது என்பதுதான். ஆனால், இன்று தமிழ்
மறைந்து வருகிறது என்றால் தமிழனும் மறைந்து வருகிறான் என்பதுதானே பொருள்.
என்மொழி மட்டுமல்ல என் இனமும் அழிந்து வருகிறது.
தமிழை
வாழ்விக்கவோ, உயர்விக்கவோ தற்போது யாரும் கிடையாது. ‘ஆங்கிலம் மட்டுமே
ஆபத்பாண்டவன்’ என்கிற கருத்து தமிழக மக்களுடைய மனதில்
ஆழப்பதிந்துவிட்டமையால் பெரும்பாலான மாணவர்கள் ஆங்கிலவழியில்தான்
பயில்கின்றனர். வறுமைக்கோட்டுக்கு கீழிருக்கும் ஏழைகள் கூட எப்பாடுபட்டவாவது
தம் குழந்தைகளை ஆங்கிலவழி கல்விக்கூடங்களில் சேர்த்து
படிக்கவைத்துவிடுகின்றனர். இந்த மனப்பான்மை மற்ற மாநிலங்களைக்காட்டிலும்
தமிழகத்தில் மட்டும்தான் மிக அதிகமாக இருக்கிறது. தமிழகத்தின்
பட்டிதொட்டிகளிலெல்லாம் ஆங்கிலவழி கல்விக்கூடங்கள் இருப்பதற்கு வேறென்ன
காரணம்?
தமிழ்வழியில்
கலைப்பாடங்களை படித்தவர்களுக்கு வேலை கிடைப்பதென்பது பெரும்பாலும் பிரம்ம
பிரயத்தனம்தான். தமிழை வாழ்விப்பதாக பீற்றிக்கொள்ளும் தமிழக அரசு,
இவர்களுக்காக இதுவரை எடித்த நடவடிக்கையென்ன? ‘தாய்மொழியாம் தமிழ்மொழியில்
கற்றால் வேலைகிடைப்பதில்லை” என்ற செய்தியே மிகவும் வெட்கத்திற்குரியதாகும்.
இதைவிடவும் தமிழுக்கு வேறு இழிவு இருக்குமா என்பது சந்தேகம்தான்.
எங்களின் பல வெளிநாட்டு வாடிக்கையாளர்களுக்கு சுத்தமாக ஆங்கிலம் தெரியாது.
கோர்வையாக இரண்டு வாக்கியத்தை தொடர்ந்தாற் போல் அவர்களால் எழுதவோ, பேசவோ
முடியாது. நாம் அனுப்பும் மின்னஞ்சல்களை அவர்கள் மொழிபெயர்த்துக்கொண்டு பின்
அவர்களின் பதிலை அவர்களின் தாய்மொழியிலிருந்து ஆங்கிலத்திற்கு மாற்றி நமக்கு
அனுப்புவர். இருப்பினும், ஆங்கில்ம் தெரியாத காரணத்தால் பெரிதாக அவர்கள்
தற்போதைக்கு எதையும் இழந்திவிடவில்லை. வேண்டிய செய்திகள் அவர்களின்
மொழியிலேயே கிடைக்கப்பெறுவதுடன், மற்றமொழி செய்திகளை மொழிபெயர்க்கவும்
ஏராளமான மென்பொருட்களும் உள்ளன. ஆனால், நம் தமிழ்மொழியின் நிலைமையோ தலைகீழ்.
தமிழின் பயன்பாட்டை அதிகரிக்க இங்கு எத்தகைய வாய்ப்புகளும், வசதிகளும் அறவே
கிடையாது. தமிழ் பல்கலைக்கழகங்களும், தமிழ் இணையப் பல்கலைக்கழகமும் கரையான்
புற்றுளாகிவிட்டன போலும்.
தமிழீழம்
மட்டும் மலர்ந்திருப்பின், என் தாய்த்தமிழ் மொழி உலகின் ஒப்பற்ற மொழியென்பது
நிருபணமாகியிருக்கும். நான்காம் உலகத்தமிழ் மாநாட்டை நடத்தி தமிழுக்குச்
சிறப்பு சேர்த்த எம்மக்களால்தான் தமிழ் இன்னமும் உயிரோடு
இருந்துகொண்டிருக்கிறது. தமிழீழத்தின் வீழ்ச்சி எப்படி தற்காலிகமானதோ
அதைப்போல்தான் தமிழின் வீழ்ச்சியும். நாங்கள் எழுச்சிபெறும்போது தமிழும்
எழுச்சிபெறும். தமிழகமக்கள் அடிமைத்தனத்தில் ஊறித்திளைத்தவர்கள். அதனால்,
இவர்களைப் பார்த்துதான் ‘மெல்லத் தமிழினிச் சாகும்’ என்றான் பாரதி. நாங்கள்
அடிமைத்தனத்தை எதிர்ப்பவர்கள். எந்த மாற்றுமொழிக்கும், மாற்று
இனத்தாருக்கும் நாங்கள் அடிமையல்ல. ஆம், நாங்கள் மட்டுமே உண்மையான தமிழர்கள்.
எம் தாய்மொழியின் சிறப்பை தமிழீழம் உலகறியச்செய்யும் நாட்கள் வெகுதூரத்தில்
இல்லை.
|