|
|
சிலரின் தாக்கம்...
“என்னடா பாலு முகம் ஒரே வாட்டமா இருக்குது” என்று கேட்டுக்கொண்டே தன்னுடைய
Cubicle-க்குச் சென்று அமர்ந்தான் வாசு.
“அப்படியெல்லாம் ஒண்ணுமில்லயே..எப்பவும் போலத்தான் இருக்கேன்” என்று
பதிலளித்த பாலு, மனிதனின் முகம் அப்படியே கண்ணாடியாக செயல்படுவதை தடுக்க
ஏதேனும் வழியிருந்தால் உடனடியாக அதனைக் கற்றுகொள்ள வேண்டும் என்று
நினைத்துக் கொண்டான்.
”ம்ம்.. ஒரு நூற்றாண்டு சோகம் முகத்தில அப்பிக்கிடக்குது. ஒண்ணுமில்லனு
சொல்றியே?!. சொல்ல என்ன பிரச்சனை?”
”இல்லடா. அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல. காலையில டிபன் சாப்பிடல. அதனால கொஞ்சம்
டயர்டா இருக்கு. அவ்வளவுதான். மத்தபடி நீ நினைக்கிற மாதிரி ஒண்ணுமில்ல”.
பெரும்பாலும் பாலு தன் தனிப்பட்ட விஷயங்களை அவ்வளவாக பகிர்ந்துகொள்வது
கிடையாது. அவன் எப்போதும் ஒரு மூடிய புத்தகம் தான்.சில பக்கங்களை மட்டும்
அதீத வற்புறுத்தலினால் குறிப்பிட்ட சிலர் படித்திருக்க முடியும்.
“என்னவோ இத்தன வருஷ பழக்கதில உரிமையா கேட்டேன்.. சொல்ல விருப்பமில்லைங்கிற
போது, நான் என்ன செய்யமுடியும்? ஏதோ உன்னோட பாரத்தை குறைக்கலாம்னு
பார்த்தேன். அவ்வளவுதான்.
இருவருக்குமிடையே ஒரு நீண்ட அமைதி. முகத்தைக்கூட பார்க்காது கணிப்பொறியின்
திரையையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தனர். மெல்ல பாலுவே ஆரம்பித்தான்.
”வாசு, இன்னிக்கு Evening நீ free ya? எங்காவது வெளியில போய் சாப்பிட்டு
வரலாம?”
”ம்ம். சரி. எனக்கு Allocation கிடையாது. Bench-ல தான் இருக்கேன். அதனால
அய்யா எப்பவுமே free தான்.”
நேரம்: 7.15 PM
“எங்க போகலாம்? ஏதாவது ஒரு அமைதியான இடத்திற்கு போனா நல்லா இருக்கும்னு
நினைக்கிறேன்”.
”அப்படி ஒரு இடம் இந்த உலகத்திலேயே கிடையாது பாலு. சரி, எனக்கு தெரிஞ்ச ஒரு
இடம் இருக்கு. என் Friend-டோட வீடு. Summer vacation-கு எல்லோரும் ஊருக்குப்
போயிருக்காங்க அவனும் இப்ப onsite இருக்கான். அதனால Key-ய எங்கிட்டதான்
கொடுத்துட்டு போயிருக்கான். நல்ல அமைதியான வீடு. சுற்றிலும் Garden அது
இதுன்னு பிரமாதமா இருக்கும். வா நாம அங்க போகலாம்.”
”அப்போ, சாப்பாடு எதுவும் Parcel வாங்கிட்டு போயிடுவோமா?”
”சாப்பாடு மட்டுமில்ல, கூட கொஞ்சம் எனக்கு உற்சாக பானம் வாங்கணும்.”
“இந்தப் பழக்கத்த விட முடியாதா? அவ்வளவு கஷ்டமா என்ன அத விடுறது?”
”பாலு, நான் அந்த Argument-க்கு எப்பவுமே வர்றது கிடையாது. So, please
அதப்பத்தி எதுவும் பேசவும் கேட்கவும் வேண்டாம்.”
எல்லா மனிதர்களிடத்தும் சில மறக்கமுடியாத சோகங்கள் இருக்கத்தான் செய்கிறது
போலும். நினைவுகளில் அதனை எப்போதும் சுமந்து கொண்டிருப்பதினால்தான் வாழ்க்கை
பல நேரங்களில் இறுக்கமாகத் தெரிகிறது.
“வீடு சும்மா சொல்லக் கூடாதுடா.. ரொம்பவும் பிரமாதமா இருக்கு. ஒரு ரசிகனின்
பார்வையோடும், மனோபாவத்துடனும் உன் Friend இந்த வீட்ட கட்டியிருக்கார்.”
“வீடு அவன் கட்டல. அவன் Wife கட்டினாங்க. அவங்க ஒரு Architect. M.Arch.,
Ph.D”
“பாலு நீ சாப்பிடறதா இருந்தா சாப்பிடலாம். நான் சாப்பிட்டு, சாப்பிடப்
போறேன்.”
”இல்ல வாசு, நான் சும்மா Side dish company கொடுக்கிறேன். நீ சாப்பிடு.
அப்புறம் ரெண்டு பேரும் சேர்ந்து சாப்பிடலாம்.”
முதல் ரெண்டு ரவுண்டு முடிந்திருந்தது. தொண்டையை கனைத்துக் கொண்டான் வாசு.
”சொல்லு, உன் பிரச்சனை என்ன? ஏன் முகம் ஒரு தெளிவு இல்லாம இருக்குது?
”நாம இதுவரைக்கும் சந்திச்சேயிராத, கொஞ்சம் கூட பழக்கமில்லாத ஒருத்தர்
நம்முள்ள ஏதாவது தாக்கத்தை ஏற்படுத்த முடியுமா?”
”அது ஒரு அழகான பொண்ணா இல்லாதவரைக்கும் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த
முடியாதுன்னு நினைக்கிறேன். ம்ம்……….. ஓரளவுக்கு விஷயத்தை ஊகிக்க
முடியுது.யாரந்த பொண்ணு? அந்த உள்ளம்கவர் கள்ளி யாரு?”
வந்து……… வந்து………
”தயங்காம சொல்லுடா.என்னால முடிஞ்ச Help பண்றேன்.”
”Shaadi.com-ல Register பண்ணியிருந்தேன். ரெண்டு நாளைக்கு முன்னாடி
பார்த்தேன். ஒரு Expression of Interest Accept ஆயிருந்தது. பொண்ணு யாருன்னு
பார்த்தேன். பார்த்தவுடனேயே ரொம்ப புடிச்சு போச்சு. ஏதோ ஒரு நீண்டகாலப்
பந்தம் இருந்த மாதிரியான உணர்வுன்னு சொல்லுவாங்களே அந்த மாதிரி ஒரு
இனம்புரியாத உணர்வு. இதுவரை அப்படிப்பட்ட ஒரு உணர்வு எனக்கு வந்ததேயில்ல.
முற்றிலும் மாறுபட்டதான ஒரு எண்ணம்.”
நிலைமை கொஞ்சம் முற்றிவிட்டது என்று நினைத்துக் கொண்டான் வாசு.
பாலு, மீண்டும் தொடர்ந்தான்.
”ஏன் பிடிச்சிருக்குன்னு தெரியல. ஆனா, அவ்வளவு பிடிச்சிருக்கு.
பார்த்தவுடனேயே ஒருத்தர் இவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்திட முடியும்னு
நினைக்கும்போது ரொம்ப ஆச்சரியமாகவும் அதிசயமாகவும் இருக்கு. இதுவரை யாரும்
ஏற்படுத்திராத ஒரு தாக்கம். எங்கும் அவளின் நிழல் பிம்பங்கள். வாழ்க்கை
நமக்காக பல சுவாரசியங்களை வைத்துக்கொண்டு, காத்துக் கொண்டிருக்கிறது
என்பார்கள். ஆனால், அந்த வாழ்க்கையையே சுவாரசியமாக்க முடியுமெனில் இனி
அவளால் தான் முடியும்.”
பாலு, தொடர்ந்து கொண்டே இருந்தான்.
”பாலு, அவங்களப்பத்தின வர்ணணைகள் போதும். சுருக்கமா சொல்லனும்னா, இதுக்கு
பேரு காதல் நோய். உன்னையும் அந்த வண்டு கடித்துவிட்டது.”
”இந்த கேள்விய எனக்கு நானே கேட்டுகிட்டேன் வாசு. ஒருவேளை இதுதான் காதல்
என்பதோன்னு நினைச்சாலும் மனசு சமாதானமா ஏத்துக்கிட மாட்டேங்குது.”
”அப்போ வேறென்ன இது?”
”அதையும் தாண்டியதான ஏதோவொன்னு மாதிரிதான் தோணுது.”
”சரக்கு நான் போட்டிருக்கேனா? இல்ல நீ போட்டிருக்கியா?”
”என்ன நீ புரிஞ்சிப்பன்னு நினைச்சு சொன்ன, நீயே என்னை கிண்டல்பண்றியே?”
“சரி.விஷயம் இன்னும் பாதிலதான் இருக்கு. இன்னும் நீ பிரச்சனை என்னன்னே
சொல்லல. Interst Accepted தானே, உடனே அவங்கள Contact பண்ண வேண்டியதுதானே?”
“அதுக்காக நான் என்னவெல்லாம் செய்தேன் தெரியுமா? முதல்ல எங்க Work
பண்றாங்கனு பார்த்தேன். IBM-ல் Work பண்றாங்கனு போட்டிருந்தது. உடனே என்
IBM Friend ஒருத்தனுக்கு Phone பண்ணி, நம்ம Sametime Masterfind மாதிரி
ஏதாவது இருக்கான்னு கேட்டேன். இருக்குன்னு சொன்னவுடனே, பேரு சசிகலா மாதவன்,
Bangalore Branch-னு சொன்னேன். சில பல Search and Filters-க்குப் பிறகு
Mail Id பிடிச்சாச்சு. உடனே Formal-ல ஒரு mail பண்னேன். அதுமட்டுமில்ல
Orkut-ல தேடின கூட கிடைக்கும் நினைச்சு அங்கேயும் தேடுன. உடனே கிடைச்சுது”
“உன்ன மாதிரி ஒருத்தன் இருந்தா போதும். Shaadi.com-ம மூடிட்டு போக
வேண்டியதுதான்.”
“விஷயத்தை கேளு.”
”பேரு- சசிகலா மாதவன், ஊர்-திருநெல்வேலி டவுண், திருநெல்வேலி. Scholl
படிச்சது- A U Chinmaya Vidyalaya Matriculation H Sec School,
Palayamkottai. B.E., படிச்சது- College of Engg, Guindy, Anna University.
இதர தகுதிகள்: Maths-ல புலி, நல்லா பாட்டு பாடுவாங்க. நல்லா சமைக்கவும்
தெரியும்னு சொல்லிக்கிறாங்க. ஒரே தங்கச்சினு நினைக்கிறேன். ஆளு ரொம்ப
கலகலப்பான ஆளா தெரியுது. நிறைய Friends போல. இப்போ Diet-ல இருக்கிறதாகவும்
காலையில Oats மட்டும் தான் குடிக்கிறாங்களாம். Harry potter கதையினா உயிர்.
அப்புறம் வழக்கம் போல SRK, ARR இந்த மாதிரி கொஞ்சம். வித்தியாசமா M.S அம்மா
பாட்டு புடிக்குமாம்.”
”ஏதேது, விட்டா அவங்களப் பத்தி ஒரு புக்கே எழுதிடுவே போல இருக்கே.”
”Add friend request கூட குடுத்தாச்சு. அது மட்டும் இல்ல, திருநெல்வேலி
BSNL Directory-ல போய் மாதவன் ,திருநெல்வேலி டவுண்னு Search கூட செய்து
பார்த்தேன்.”
“ஏதாவது Phone number கிடைச்சுதா?”
”நிறைய Phone numbers. Exact-ஆ புடிக்க முடியல”
”எதுக்கு இவ்வளவு கஷ்டம். நேரா பணம் கட்டி, Phone number வாங்கி Phone பண்ண
வேண்டியதுதானே?”
”நானும் அப்படித்தான் நினைக்கிறேன். ஆனா, இதுவரைக்கும் எதுக்குமே Reply
இல்லைங்கிறத நினைக்கும்போது, பணம் கட்டி, Phone number வாங்கி… இல்லைனு
சொல்லிட்டா?”
”Be positive. அது எப்படி இல்லைனு சொல்லிடப் போறாங்க. Interest Accept
பண்ணியாச்சு தானே?”
”ஆனா, Interest Accept பண்ணதுதானாலேயே சரின்னு சொல்லணுங்கிற அவசியமில்லையே!.”
“இப்போ என்ன சொல்ல வர? அந்தப் பொண்ணுகிட்ட இருந்து எந்த Reply-யும்
வர்ல.அதுதான் உன்னுடைய வாட்டத்துக்கு காரணம். Phone பண்ணி, பிடிக்கலைனு
சொல்லிட்டா அத உன்னால தாங்க முடியாது. அதானே?
“இங்கப்பார். நீ அனுப்பிச்ச mail id தப்பா கூட இருக்கலாம். இல்ல உன்னுடைய
mail-ல அந்தப் பொண்ணு பார்க்காம கூட இருந்திருக்கலாம். Friend Request
பார்த்து உன்ன Recognize பண்ண முடியாம கூட விட்டிருக்கலாம். இப்படி எத்தனையே
காரணம் இருக்கலாம். உனக்கு ஒண்ணு தெரியுமா? இந்த உலகத்திலேயே மிக வலிமையான
ஆயுதம் “அமைதி” தான். நமக்கு மிகவும் வேண்டப்பட்ட ஒருத்தர் திடிர்னு
நம்மகிட்ட பேசாம அமைதியா இருந்திட்டா, அத நம்மால தாங்கிக்க முடியறதில்ல.
நமக்குள்ளேயே பல கற்பனைக் காரணங்களை உருவாக்கிக் கொண்டு அவங்கள சமாதானப்
படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் கையிலெடுக்கறோம். மனித இயல்பு அது.”
வாசு, half தாண்டி போய்க் கொண்டிருந்தான்.
”பாலு, இதுவரைக்கும் எத்தனை Interest Accept ஆகியிருக்கு?.”
”Recent-ஆ தான் Register பண்ணேன்.ம்ம் 8-10 Accept ஆகியிருக்கும்னு
நினைக்கிறேன். ஏன் கேட்குற?”
“இல்ல, முதன்முதலா ஒரு பொண்ணு Accept பண்ணி. அதனால Excite ஆகிட்டியோன்னு
நினைச்சேன்.”
“அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல. எத்தனையோ அழகான+அறிவான பொண்ணுங்கள கடந்து
வந்தவன் தான். “இதுவரை யாரும் ஏற்படுத்திராத ஒரு தாக்கம், இனம்புரியாத
பாதிப்பு” அப்படிங்கிறதனால தான் மனசுக்கு கொஞ்சம் கஷ்டமாயிருக்கு.
வைரமுத்துவின் வார்த்தைகளிலே சொல்ல வேண்டுமானால், “விழியில் விழுந்து, இதயம்
நுழைஞ்சு, உயிரில் கலந்த உறவு”.
”பாலு, நீ “புல் தானாகவே வளருகிறது” புத்தகம் படிச்சிருக்கியா?”
”ஏன், திடிர்னு புத்தகம் பத்தி கேட்குற?”
”சும்மா சொல்லு. படிச்சிருக்கியா? இல்லியா?”
”படிச்சதில்ல.”
”அதுல, ஓஷோ சொல்லுவாரு, “மனிதன் அனைத்துச் செயல்களையும் தன் முனைப்போடு
செய்வதோடு மட்டுமில்லாமல், செய்கின்ற அனைத்து செயல்களிலும் தன்னை
அடையாளப்படுத்திக் கொள்கிறான். இந்த அடையாளங்களை பின்னிருந்து
செயல்படுத்துவது அவனுடைய மனமும் அகங்காரமும் தான்.அதனால் தான், திலோத்தப்பா
சொல்கிறார், “ மனதின் ஆணிவேரையே வெட்டிவிட வேண்டுமென்று. வெறும் கிளைகளை
வெட்டுவதினால் எவ்விதப் பயனும் ஏற்பட்டுவிடப் போவதில்லை. மீண்டும் மீண்டும்
அது துளிர்க்கவே செய்யும். ஆகவே தான் சொல்கிறேன், அதன் ஆணிவேரையே வெட்டிவிட
வேண்டுமென்று”. ஓஷோ தொடருகிறார், “உங்கள் மனம் சதா சர்வகாலமும் எதனையாவது
சுமந்துகொண்டும், சேகரித்துக்கொண்டும் தான் இருந்து கொண்டிருக்கிறது. அது
ஒரு குப்பைத் தொட்டி. இந்த சமுதாயம் உங்கள் மீது வீசியெறிந்து
விட்டுச்சென்ற குப்பைகள் தான் அவை. இதனால்தான், மனிதன் சிறிய விஷயங்களைக்
கூட பூதாகாரமாக பெருக்கிக் கொண்டு தன்னைத்தானே வருத்திக்கொள்கிறான்.
எந்தவித அடையாளமும் இல்லாத நிலையில் செயல்படும் போது, எந்தவொரு செயலும் அவனை
பாதிப்பதில்லை. ஆற்றுநீரின் மேற்பரப்பில் ஆகாயத்தாமரைகள் மிதந்து
செல்லுவதைப்போல.”
”வாசு, உனக்கு கொஞ்சம் அதிகமாயிடுச்சுன்னு நினைக்கிறேன்.”
“இந்த உலகம், எப்பவுமே இப்படித்தான். குடித்துவிட்டு ஒருவன் உண்மைகளையும்,
வாழ்க்கையின் எதார்த்தங்களையும் பேசினால் குடித்துவிட்டு உளறுவதாக
எண்ணிக்கொள்கிறார்கள். இதுவும் ஒரு விதத்தில், தான் என்கிற அகங்காரத்தின்
விளைவுதான்.”
சாரிடா. நான் சும்மா சாதாரணமா தான் சொன்னேன்.
ஒருமாதிரியான வெறுமை அந்த அறையை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது. ICE எடுத்து
வருவதற்காக உள்ளே சென்றான் வாசு”………………….நீயில்லாமல் என்ன நிம்மதி? நீதான்
என்றும் என் சந்நதி!” கண்ணதாசனின் இறுதி வரிகள் சூரியன் FM-ல்
ஒலித்துகொண்டிருந்தது. வாசு என்ன தீர்வு சொல்லப்போகிறான் என்று
நினைத்துக்கொண்டே சோபாவில் சாய்ந்தான் பாலு.
Ice கட்டிகளுடன் திரும்பிய வாசு, பாலுவை நோக்கி, ”Interest Accept
பண்ணப்பிறகும் ஏன் Respond பண்ணல?. ஒருவேள Interest-அ அவங்க Parents accept
பண்ணாங்களோ என்னவோ? இல்ல, அந்தப்பொண்ணு ரொம்ப Orthodox-ஆ அறிமுகமில்லாத
ஒருத்தருகிட்ட எப்படி பேசறதுன்னு நினைச்சதோடு மட்டுமில்லாம Mail பண்றது
Friend Request அனுப்புறது இதெல்லாம் கொஞ்ச அதிகபிரசங்கித்தனமா இருக்கேன்னு
கூட நினைச்சிருக்கலாம்.”
“..ம்ம். அதற்கும் வாய்ப்பு இருக்கிறது.
“சும்மாவா சொன்னாங்க. பெண் மனசு ஆழம்னு. அவங்க எப்போதுமே ஒரு புரியாத புதிர்
தான்”, வாசுவின் அனுபவ வார்த்தைகள்.
”உன் மனசுல இருக்கிற வெற்றிடத்த எப்படியாவது சீக்கிரமா நிரப்பிடம்னு உன்
அகங்காரம் நினைக்குது. அதுலேயும் இந்தப்பொண்ணு கொஞ்சம் அழகாகவும்
புத்திசாலியாவும் இருக்கிறதனால, இவள்தான் சரியான பொருத்தம்னு அவளைக் கொண்டு
அந்த வெற்றிடத்தை நிரப்பப் பார்க்குது. இது தற்காலிகமான எண்ணம் தான். சில
நாட்களிலேயே மறைஞ்சு போனாலாம் ஆச்சரியப்படுறதுக்கில்ல. Reply, வருதான்னு
இன்னும் கொஞ்ச நாள் wait பண்ணி பாரு. இல்ல, இதுக்கு உடனடியா முடிவு
கட்டணும்னா, பணத்தை கட்டி, Phone number வாங்கு. நானே கூட பேசுறேன்.
ரெண்டுல ஒண்ணு தெரிஞ்சிடும்.”
தீர்த்தக்கரையினிலே தெற்கு மூலையில் செண்பகத்தோட்டத்திலே
காத்திருந்தால் வருவேன் வெண்ணிலாவிலே பாங்கியோடென்று சொன்னாள்.
வார்த்தை தவறி விட்டாய் அடி கண்ணம்மா! மார்பு துடிக்குதடி!
பார்த்தவிடத்திலெல்லாம் உன்னைப் போலவே பாவை தெரியுதடி! ஆ... பாவை தெரியுதடி!
(தீர்த்த கரையினிலே)
மேனி கொதிக்குதடி; தலை சுற்றியே வேதனை செய்குதடி!
வானில் இடத்தையெல்லாம் இந்த வெண்ணிலா வந்து தழுவுது பார்!
மோனத்திருக்குதடீ; இந்த வையகம் மூழ்கித்துயிலினிலே
நானொருவன் மட்டிலும் பிரிவென்பதோர் நரகத்துழலுவதோ?
நானொருவன் மட்டிலும் பிரிவென்பதோர் நரகத்துழலுவதோ?
---- பாரதியின் அழியா வரிகளை தாங்கிக்கொண்டு வந்த தென்றல் காற்று
அவர்களிருவரையும் தாண்டி சென்று கொண்டிருந்தது.
|
|