நீர் ததும்பிய கண்கள்
திடிரென
அவளை சந்திக்க நேரிட்டது. பல ஆண்டுகளுக்கு பிறகான சந்திப்பு இது.
வெளிநாட்ட்டிலிருந்து ஊருக்குத் திரும்பியிருந்த வேளையில் ஏதேச்சையாக
பேருந்தில் அவளை பார்க்க நேர்ந்தது. அவளிடம் பேச வேண்டும் என திடிரென
பீறிட்ட ஆவல் தோன்றிய கணத்திலேயே மறைந்தது. ஆம், அவளுக்கு சமீபத்தில் தான்
திருமணம் நடந்திருப்பதை தடித்த மஞ்சள் கயிறு உணர்த்தியது. 10 ஆண்டுகளுக்கு
ம்ஜுன்பு வெறும் பார்வையில் மட்டுமே இருவரும் பேசிக்கொண்ட அந்நாட்கள் மனதில்
ஓடத்தொடங்கியது.
தன்னிடம் அவள் பேச முயற்சிப்பதை அறிந்திருந்தும் இளவயது காரணமாக
உருவாகும்/முதல் அனுபவத்தால் உருவாகும் அச்சத்தாலும், நடுக்கத்தாலும்
அவளிடமிருந்து விலகியிருந்த அந்நாட்களை எப்பொழுதுமே நினைத்து
சிரித்துக்கொள்ளும் அவன், இன்று அதே நாட்கள் பெரும் வலியை
உண்டாக்குவதை உணர்ந்தான். காலையிலும், மாலையிலும் காட்சி தந்துவிட்டு
மெல்லிய புன்னகையை வீசிவிட்டுச் செல்லும் அவளின் அழகு முகம் வாழ்க்கையில்
எந்த தருணத்திலும் மறக்க முடியாதது. கண்களால் கவிதை பாடும் அவளின் கண்களைப்
போல இதுவரையிலும் எந்த பெண்ணிடமும் அவன் கண்டதில்லை. ஒளிமிகுந்த அந்த கண்களை
எதிர்கொள்வது சூரியனை எதிர்கொள்வதைக் காட்டிலும் கடினமானது. தனித்துவமிக்க
அந்தக்கண்களின் சொந்தக்காரியை தனக்கு சொந்தமாக்கிக்கொள்ளும் நாளுக்காக அவன்
ஏங்காத நாட்களில்லை. ஆனால், இன்றோ அவள் வேறொருவரின் உரிமையாகிவிட்டதனால்,
அவனால் எதுவும் பேச முடியவில்லை.
பீறிட்டுக்கொண்டு
கிளம்பிய ஆர்வத்தை அடக்கிக்கொண்டு இருக்கையிலேயே அமர்ந்துகொண்டான். காதல்
மொழிகளை கண்களால் அன்று இருவரும் பேசிக்கொண்டனரென்றாலும், வெளிப்படையாக
காதலை இருவரும் ஒத்துக்கொள்ளவில்லைதான். இருப்பினும், இன்று அவளின் திருமணம்
தனக்கு பெருத்த வலியைக் கொடுப்பது ஆச்சரியமாகத்தான் இருந்தது அவனுக்கு.
பார்த்தமாத்திரத்திலேயே அவனை கண்டுகொண்டாலும், அதிர்ச்சி கலந்த
பார்வையையே அவளின் மீது செலுத்தினாள். கண்களில் அன்றிருந்த குறுகுறுப்பும்,
அழகும் இன்றோ எங்கோ ஓடி ஒளிந்துகொண்டிருந்தன. விருப்பமில்லாத திருமணங்களும்,
ஏற்கப்படாத காதலர்களும் நடைபிணங்கள் தான் என்பதைத்தான் அவளின் கண்கள்
உணர்த்துவதாக இருந்தன. தன்மீது சுமத்தப்பட்ட திருமணத்தில் அவளுக்கு
விருப்பமில்லையா அல்லது இத்தருணத்தில் தன்னை சந்திக்க நேர்ந்ததே என்பதால்
ஏற்பட்ட மிரட்சியா என்பதை அவனால் புரிந்துகொள்ள முடியவில்லை.
கணவனுக்கு
அருகில் இருக்கையிருந்தும் தன் இருக்கைக்கு பின்னால் அவள் உட்கார்ந்து
கொண்டது அவனது வலியை பன்மடங்காக்கியது.இதயம் அசாதாரணமாக துடிப்பதை அவனால்
நன்றாகவே உணரமுடிந்தது. பேசிய காதலைவிட பேசா காதல் ஆழமானது.அங்கே
பேசிக்கொள்வது உதடுகள் அல்ல; இதயங்கள். அங்கே பரிமாறிக்கொள்ளப்படுவது
வார்த்தைகளல்ல;அன்பு. அங்கே மலருவது காமமல்ல; காதல். காதல் மட்டும் தான்.
அதிக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய இத்தகைய காதல் பெரும்பாலும் மொட்டாகவே
உதிர்ந்துவிடுகின்றன. அப்படித்தானே இன்று அவனுடைய காதலும்
உதிர்ந்துவிட்டிருக்கிறது.
தன்பின்னால் அமர்ந்திருக்கும் அவளின் கண்கள் தன்னை மட்டுமே
நோக்கியிருப்பதை உணர்ந்த கணம், புழுவாக துடித்தான். பாதியிலேயே
உதிர்ந்துவிட்ட இக்காதல் இந்தளவுக்கு வலி ஏற்படுத்துமெனில் அக்காதல்
உண்மையில் இன்னும் உதிரவில்லை, தன் முகத்தை சிலகாலம் மறைத்து வைத்திருந்த்து
என்றுதானே பொருள்.
கீழிறங்கும் முன்பாகவே அவள் தன்னிடம் பேசுவாளா அல்லது தானே அவளிடம்
பேசிவிடலாமா என்ற சிந்தனையிலேயே மூழ்கியிருந்தான். ஆனால் தான் பேசி அவளின்
வருத்ததை அதிகப்படுத்துவதைவிட அவளிலிருந்து விலகியே இருப்பதென
முடிவெடுத்தான். அவளின் அருகாமைக்கு அந்நாட்களில் ஏங்கிய அவன் மனம் இன்றைய
அருகாமையை எதிர்த்தது-வலி தாங்கமுடியாமல். அவளின் காதல், தன் இதயத்தில்
ஆழமாக செதுக்கப்பட்டிருப்பதை இன்றுதான் உணரமுடிந்தது. அவனை பார்த்துக்கொண்டே
அவள் கீழிறிங்கிக் கொண்டிருந்தாள். அவளின் கண்களில் நீர் ததும்பி
நின்றது.அந்தக்கணம் அவனின் வாழ்க்கையில் மிகவும் துயர்மிகு கணம்.நீர்
ததும்பி நிற்கும் அந்தக் கண்களைக காண்பதைக் காட்டிலும் தான்
இறந்துவிட்டிருக்கலாமே என்று எண்ணினான். அன்பினால் கூட ஒருவரைக்
கொல்லமுடியும் என்பதை இன்று அவள் உணர்த்தினாள்.
|