|
|
கடவுளேயானாலும்….
தேர்தல்
திருவிழாவின் கடைசி நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது. அடுத்து ஆட்சியமைக்கப்
போவது யார் என்ற கேள்விதான் இன்று இந்தியாவிலுள்ள அனைவரின் கேள்வி.
தனிப்பெரும்பான்மை என்பது பழைய வரலாறாகிவிட்ட நிலையில், கூட்டணியாட்சி தான்
இனி இந்தியாவின் தலைவிதி. ஆனால இந்தக் கூட்டணியாட்சியை வழி நடத்தப்போவது
யார் தெரியுமா? பணம். ஆம், பணக்கட்டுகளும், பணக்குவியல்களும் தான் நம்
தலைவிதியை நிர்ணயிக்கப்போகின்றன. “ அதிகப் பணம் கொடுத்தால் உங்கள் பக்கம்.
இல்லையெனில் அதைக் கொடுப்பவர் பக்கம். இதுவே எங்கள் கொள்கை, வழி,
தாரகமந்திரம், எல்லாம்.” என்று வெளிப்படையாக அறிவித்துக்கொண்டுதான் அனைத்து
அரசியல் கட்சிகளும் இந்தத் தேர்தலை சந்தித்து வருகின்றன.
கங்கைபோல்,
காவிரிபோல் பணத்தை வாரியிறைத்தால் மட்டுமே தேர்தலில் வெற்றிக்கனியை பறிக்க
முடியும் அல்லது ஓரளவு நெருங்க முடியும் என்பது வெள்ளிடை மலை. அந்த அளவிற்கு
பணத்தின் கோரத்தாண்டவம் இந்தத் தேர்தலில் நடைபெற்று வருகிறது. சராசரியாக
சுமார் 15 முதல் 50 கோடிகள் ஒரு லோக்சபா தொகுதிக்கு செலவிடப்பட்டுள்ளதாக
அற்கிறேன். அப்படியெனில், இதுவரை சாமானியன் குரல்தான் இந்திய
பாராளுமன்றத்தில் ஒலித்ததில்லை. இனி அவனுக்கான குரலும் ஒலிக்கப் போவதில்லை.
கட்சி
பேதமின்றி வாக்காளர்களை விலைகொடுத்து வாங்கும் அரசியல் கட்சிகளை எதனை நம்பி
இந்த மக்கள் தேர்ந்தெடுக்கிறார்களே? அது அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்.
இந்திய ஜனநாயகத்தை பணநாயகமாக மாற்றிய பெருமை அரசியல்வாதிகளைச் சாரும்
என்றால் அதனை குழிதோண்டி புதைத்து அதன் மீது கான்கிரிட் எழுப்பிய பெருமை
அதன் மக்களையேச் சாரும். ஒரு ஓட்டின் விலை 2000 ரூபாயாம். எவ்வளவு
வெட்டக்கேடு. உன்னை ஆள்பவனை, உன்னை வழிநடத்த வேண்டியனை, உன் தலைவிதியை
நிர்ணயிப்பவனை எப்படி தேர்ந்தெடுக்க வேண்டும்? பணத்தைப் பெற்றுக்கொண்டா? இது
மிகவும் அருவருக்கத்தக்கது. விபச்சாரத்தைக் காட்டிலும் மோசமானது இது.
விட்டில் பூச்சிகளைப் போல பணத்திற்காக தம் ஓட்டுக்களை விற்பவர்களை
மனிதப்பிறவிகளாகவே ஏற்றுக்கொள்ள முடியாது.
சத்குரு அவர்கள் அடிக்கடி வலியுறுத்திக் கூறுவது “எல்லா மனிதரிடத்தும்
அடிப்படையான நேர்மை வேண்டும். அது இல்லாததினால்தான் இன்று பல துன்பங்களுக்கு
அவர்கள் ஆளாகின்றனர்.” என்று. ஆக, தேவை அடிப்படையான நேர்மை
அவ்வளவுதான்.ம்ஹிம். இமயத்தைக் கூட வளைத்துவிடலாம். ஆனால் நேர்மையான ஒரு
இந்தியனை பார்த்துவிட முடியாது என்பதுதான் தற்போது நிதர்சனமான உண்மை. “நான்
நேர்மையாக இருக்க வேண்டுமானால் அதற்கு நீங்கள் பணம் தர வேண்டும்” என்பதுதான்
இங்குள்ள அனைவரின் நிலைப்பாடு.
ஏழைகளுக்கும்
பணக்காரர்களுக்குமான இடைவெளி நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது
என்று மன்மோகன்சிங் எனும் பிரதமர் தன் இயலாமையை ஒப்புக்கொண்டுள்ளார். காரணம்,
அவர் சார்ந்திருக்கும் கட்சித்தலைமை உலகப் பணக்காரர்களுக்கே கடன் வழங்கும்
சக்தி படைத்தது. அவர்களின் வாரிசு, இன்னும் ஒருபடி மேலே போய், தான் ஏழைகளின்
கஷ்டத்தை புரிந்துகொள்ள முயற்சி செய்வதாக தெரிவிக்கிறார். பாருங்கள் எப்படி
இருக்கிறது என்று. இந்தியாவை அந்த ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது என்பது
இதனைத்தான் போலும். இதனை அறியாத இந்திய வாக்காளர்களும், வாக்களிப்பது என்பது
ஏதோ ஒரு சடங்குபோல எண்ணிக்கொண்டு பிரியாணிக்கும், மதுவுக்கும் விலைபேசி
விற்றுவிடுகின்றனர். இவர்கள் தங்களுக்குத் தாங்களே நிரந்தர சமாதியை
எழுப்பிக்கொள்வதோடு, இந்திய ஜனநாயகத்திற்கும் சேர்த்து சமாதி
எழுப்புகின்றனர்.
சமீபத்தில் நான் படித்த கதை இது. ஆனால், இதுவே அப்பட்டமான உண்மை.
”அந்த ஊரில் மிகப்பிரசித்தி பெற்ற சிவப்பு விளக்கு வீடு அது. ஒருநாள் கடவுள்
சிறிது உல்லாசமாக இருப்பதற்கு அந்த வீட்டிற்கு வந்து கதவை தட்டுகிறார்.
கதவைத்திறந்த பெண்மணி, யார் என்று கேட்டதற்கு, “தான் கடவுள் என்றும், சிறிது
உல்லாசமாக இருந்துவிட்டு போக வந்திருப்பதாகவும் தெரிவிக்கிறார். அதற்கு
அந்த பெண்மணி, பணம் எவ்வளவு இருக்கிறது என்று கேட்டதற்கு, அவசரத்தில் பணம்
கொண்டுவர மறந்துவிட்டதாக கடவுள் தெரிவிக்கிறார். இதனை பின்னாலிருந்து
கேட்டுக்கொண்டிருந்த தலைவி சொன்னாளாம் “கடவுளேயானாலும் காசு இல்லைனா கதவைச்
சாத்தடி” என்று.
|
|