|
|
பீகாரா? தமிழகமா?
தேர்தல்
திருவிழா ஒருவழியாக தமிழகத்திலும் முடிந்துவிட்ட நிலையில் அடுத்து
துவங்கயிருப்பது பொறியியல் கல்லூரி கலந்தாய்வுத் திருவிழா. என்ன படிக்கலாம்?
எங்கு படிக்கலாம்? என்பதுதான் தற்போது பெரும்பாலான குடும்பங்களில் பேச்சு.
ஓரளவிற்கு குறிப்பிடத்தகுந்த மதிப்பெண் என்றாலே நிச்சயம் அந்த வீட்டில்
பொறியியல் பற்றியதான பேச்சுதான் அதிகமிருக்கும்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை “பெரியண்ணன்” அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும்
பொறியியல் கலந்தாய்வும் அதன் கீழ் செயல்படும் அரசு மற்றும் தனியார்
பொறியியல் கல்லூரிகள் தான், ஒட்டுமொத்த பொறியியல் படிப்பிற்கான வழிமுறை.
தற்போது நுழைவுத்தேர்வும் ரத்து செய்யப்பட்டுவிட்டமையால் தமிழக மக்கள்
கொஞ்சம் கூட அசைந்துகொடுக்காமல் முரட்டுத்தனமாக அதே எல்லையில்தான் இன்றளவும்
சுற்றிவருகின்றனர். அதைத்தாண்டி திணையளவு கூட வெளியே வருவதில்லை.
இந்திய
தொழில்நுட்ப கல்லூரிகளுக்கான IIT-JEE நுழைவுத்தேர்வு பற்றிய விழிப்புணர்வும்,
தேசிய தொழில்நுட்ப கல்லூரி(NIT) மற்றும் மற்ற மாநில உயர் பொறியியல்
கல்லூரிகளுக்கான அகில இந்திய பொறியியல் நுழைவுத்தேர்வு(AIEEE) பற்றியதான
விழிப்புணர்வும் தமிழகத்தில் சிறிதும் கிடையாது. படித்தவர்களுக்குக் கூட
முன்கூறிய, எல்லைக்குட்பட்ட பார்வைதான் இருக்கிறதே தவிர, அதைத்தாண்டி பார்வை
கொஞ்சம் கிடையாது. மிக மெத்தப்படித்தவர்கள் சிலருக்கு மட்டுமே இத்தேர்வுகளை
பற்றியதான பார்வையும், விழிப்புணர்வும், அறிவும் இருக்கிறது. காரணம்,
அவர்கள் இம்மாதிரியான உயர்கல்வி நிறுவனங்களில் பயின்றவர்கள். நகரங்களில்
உள்ள படித்தவர்களுக்குக் கூட இதைப்பற்றி தெரியாதபோது, கிராமத்து மாணவர்களைப்
பற்றி சொல்லவே வேண்டாம். உதாரணத்திற்கு என்னையே எடுத்துக்கொள்வோம். நான் +2
படித்தது மிகவும் பின்தங்கிய மாவட்டத்திலுள்ள கிராமமொன்றின் அரசு
மேல்நிலைப்பள்ளியில் கணிதப்பிரிவு. ஆசிரியர்கள் கூட மிகவும் சொற்பம்.அந்த
சொற்பமானவர்கள் கூட அங்கொன்று இங்கொன்றுமாக
பாடத்தை
எடுத்தனர். அப்பொழுது நுழைவுத்தேர்வு இருந்தது. ஆனால், அதைப்பற்றியெல்லாம்
யாரும் எங்களுக்கு அப்பொழுதி விவரிக்கவில்லை. நுழைவுத்தேர்வு எழுத வேண்டும்
என்று மட்டும்தான் தெரியுமே தவிர, கேள்விமுறைகள், தயார்படுத்திக்கொள்ள
வேண்டிய வழிமுறைகள் என்பதெல்லாம் தெரியாது. பள்ளியிறுதித் தேர்வு
முடிந்தபிறகு நுழைவுத்தேர்வுக்கான பயிற்சி மையமொன்றில் சேர்ந்த பிறகுதான்
தெரிந்தது, அதில் பெரும்பான்மையானவை கணிதக் கேள்விகளாகவே (இயற்பியல்+வேதியியல்
கூட) இருக்குமென்று. இந்தநிலையில் தான் நுழைவுத்தேர்வை எதிர்கொண்டேன். இதே
நிலைமைதான் IIT-JEE, AIEEE நுழைவுத்தேர்வைப்பற்றி இன்னமும் அனைத்து
கிராமத்தும் மாணவர்களிடத்தே தொடருகிறது. அவர்கள் யாவரும் IIT-JEE, AIEEE
போன்ற வார்த்தைகளை கூட கேட்டிலர்.
மிகவும்
பின்தங்கிய மாநிலம், அடிக்கடி புயல் மழையால் பெரும் சேதங்களை எதிர்கொள்ளும்
மாநிலம்,
நக்சலைட், மாவோயிஸ்டுகளின் ஆதிக்கம் அதிகம்பெற்ற மாநிலம், வறுமையின்
கோரப்பிடியில் வாழும் குடும்பங்கள் அதிகம் கொண்ட மாநிலம் என்று பலவாறாக
அழைக்கப்படும் பீகார் மாநிலம் கல்வி விஷயத்தில் நம்மைவிட பன்மடங்கு
உயர்ந்துள்ளனர். நம்மைப்போன்று அந்த மாநிலத்தில் 360 பொறியியல் கல்லூரிகள்
கிடையாது. ஆம், அங்கு இவ்வளவு உப்புமா கல்லூரிகள் தேவையில்லை. காரணம்,
பெரும்பான்மையான மாணவர்கள், உலகளவில் தனியிடம் பெற்று விளங்கும் இந்தியாவின்
அனைத்து IIT-களிலும் உள்ளனர். ஆம், இந்த ஆண்டு பீகார் மாநில மாணவர்கள் JEE
தேர்வில் மற்ற மாநில மாணவர்களைக் காட்டிலும் அதிக தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதே நிலைமைதான் AIEEE தேர்விலும்.
கலை,
அறிவியல் பாடங்கள் என்றாலே மூன்றாம் தரப்பார்வையை செலுத்தும் நம்மக்கள்
இந்த விஷயத்தையும் பீகார் மாநில மக்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும்.
அங்கு B.A பொருளாதாரம் படித்த மாணவர்கள் கூட தற்போது மென்பொருள்
நிறுவனங்களில் அதிகசம்பளத்தில் பணியாற்றுகின்றனர். மேலும், ஒரு முக்கிய
செய்தி, சிவில் சர்வீஸ் தேர்வில் அதிகம் வெற்றிபெறுவதும் இம்மாதிரியான கலை,
அறிவியல் பாடங்களை தேர்ந்தெடுத்த பீகார் மாணவர்கள் தான். வாய்ப்புகளை
சரியாகப் பயன்படுத்திக்கொள்ளும் அவர்களின் புத்திசாலித்தனம் நம்மக்களுக்கு
இல்லாமற்போனது வருத்தத்திற்குரியது.
தமிழக
பெற்றோர்கள் தம் எல்லையை உடைத்துக்கொண்டு வெளியே வரவேண்டும். தம்
பிள்ளைகளுக்கு சிறப்பான கல்வியை அளிக்கவேண்டுமென விரும்புபவர்கள் அகில
இந்தியு தேர்வுகளில் அவர்களை வெற்றிப் பெறச்செய்ய ஆவன செய்யவேண்டும்.
தமிழகம் குண்டுசட்டியில் குதிரை ஓட்டுவதை இவ்விஷயத்திலாவது கைவிட வேண்டும்.
|
|