|
|
என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்?
மேல்நிலைப்படிப்பு முடித்தவர்களும், அவர்தம் பெற்றோர்களும் பரபரப்பாக
இயங்கிக்கொண்டிருக்கும் நேரமிது. மருத்துவமா? பொறியியலா? அல்லது கலை மற்றும்
அறிவியல் படிப்புகளா? எந்த படிப்பைத் தேர்ந்தெடுப்பது? படிப்பைத்
தேர்ந்தெடுத்துவிட்டால் போதுமா இந்த காலத்தில்? சரியான கல்லூரியை
தேர்ந்தெடுக்காவிட்டால் படிப்பை முடித்தாலும் வேலை கிடைப்பது
குதிரைக்கொம்பாக மாறிவிடும் பேரபாயத்தை தவிர்க்க முடியாததாகிவிடுமே. எனவே
சரியான கல்லூரியை தேர்ந்தெடுப்பது மிக முக்கியமானதொன்று, சரி கல்லூரியும்
தயார். அடுத்து இருப்பது படிப்புக் கட்டணம். அரசு பல்கலை/கல்லூரிகளில் இடம்
கிடைத்தால் மட்டுமே கட்டணத்தைப் பற்றி கவலைப்படாமல் இருக்க முடியும். ஆனால்,
எல்லோருக்கும் அரசு பல்கலை/கல்லூரிகளில் இடம் கிடைக்காதே?
அப்படியிருக்கையில் அடுத்திருக்கும் ஒரே வாய்ப்பு தனியார் கல்லூரிகள் தான்.
எல்லாத்துறைகளைக் காட்டிலும், எல்லா காலகட்டங்களிலும் நிரந்தர வருமானம்
தருவது கல்வித்துறை மட்டும்தான் என்பதை தெளிவாக அறிந்திருக்கும்
அரசியல்வாதிகளும், பணமுதலைகளும் எண்ணிலடங்கா கல்லூரிகளை நாளும் தொடங்கி
வருகின்றனர். பணத்தை மட்டுமே குறியாக வைத்து செயல்படும் இத்தகைய
கல்லூரிகளில் நம்மைப்போன்ற ஏழை, நடுத்தர, மாதாந்திர ஊதியத்தினர் தம்
குழந்தைகளை படிக்கவைப்பது கனவிலும் இயலாதொன்று. அப்படியே வங்கிக்கடன் பெற்று
படிக்க வைத்துவிட்டாலும், ஓரளவிற்கு சிறப்பான கல்லூரியில் இடம் கிடைப்பதற்கு
தகுந்த மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். இப்படி ஏராளமான பிரச்சனைகளை ஏதேனும்
படிப்பொன்றில் சேரும்வரை எதிர்நோக்கிக்கொண்டே இருக்க வேண்டும்.
மனதில் இதைப்பற்றியதான எண்ணங்களே ஒலித்துகொண்டிருக்கும் வேளையில்
பக்கத்துவீட்டுக்காரரும், எதிர்வீட்டுக்காரரும், உறவினர்களும், நண்பர்களும்
அவரவர் பங்கிற்கு ஆலோசனைகள் என்கின்ற பெயரில் வேண்டாத அறிவுரைகளை அள்ளி
வீசுவதோடு நம்மை முழு குழபப்பத்திலும் ஆழ்த்திவிடுவர். இன்னும் சிலர்,
கண்ணில் படும் கல்லூரிகளிலெல்லாம் விண்ணப்பத்தை பெற்றிருப்பர். எதில்
சேருவது என்கின்ற தீர்க்கமான முடிவை அவ்வளவு சீக்கிரம் எட்டமாட்டர்.
சரி, இதற்கெல்லாம் தீர்வுதான் என்ன?
சாதனை படைத்துவரும் கணிப்பொறித் துறையில் கால்பதித்திட வேண்டுமென்பது தான்
இன்றைய பெரும்பான்மையான மாணவர்களின், பெற்றோர்களின் விருப்பம். படிப்பை
முடித்தவுடன் வேலை கிடைப்பதோடு, இலட்சங்களில் ஊதியமும் கிடைப்பதினால்
யாருக்குத்தான் ஆசை இருக்காது?! அந்தக் கணிப்பொறித்துறைக்கு கடும்போட்டி
நிலவுவதை நாமெல்லோரும் அறிந்ததே. ஏராளமான பணத்தை நன்கொடையாக
அள்ளிக்கொடுத்தாலும் இடம் கிடைப்பது அரிதாக இருக்கும் சூழ்நிலையில் நம்மை
ஆச்சரியப்படுத்தும், பரவசப்படுத்தும், மகிழ்ச்சிவெள்ளத்தில் மூழ்கடிக்கச்
செய்திடும் இன்பச்செய்தி ஒன்றிருக்கிறது. அதுதான் தமிழகத்தின் மிகச்சிறந்த
பல்கலைக்கழகங்களுள் ஒன்றான, தேசிய மதிப்பீட்டுக் குழுமத்தின் ஐந்து
நட்சத்திர அந்தஸ்து பெற்ற
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை வழங்கும்
மிகக்குறைந்த கட்டணத்திலான கணினி தொழில்நுட்பவியல் படிப்பு.
இதில் இன்னுமொரு இனியச்செய்தி இப்படிப்பு 5-ஆண்டு ஒருங்கிணைந்த முதுகலை
தொழில்நுட்பவியல் படிப்பாகும். ஆம், 5-ஆண்டுகளிலேயே M.Tech படிப்பை
அளிக்கும் ஒரே பல்கலைக்கழகம் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் தான்.
இத்தகைய தன்னிகரற்ற படிப்பினை சுந்தரனார் பல்கலையில் உள்ள ”தகவல் தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் மையம்” (Centre for Information
Technology & Engineering-CITE) வழங்குகிறது. ஏற்கனவே பல பேராசிரியர்களையும்,
விரிவுரையாளர்களையும் என் போன்ற கணினி வல்லுனர்களையும் உருவாக்கி வரும்,
இந்தத்துறை, 2007-ம் ஆண்டிலிருந்து இந்த 5-ஆண்டு ஒருங்கிணைந்த முதுகலை
தொழில்நுட்பவியல் படிப்பினை அளித்து வருகிறது.
இதற்கான தகுதிகள் :
மேல்நிலைத்தேர்வில் கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களை எடுத்து
குறைந்தது 55% பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பட்டயப்படிப்பு முடித்தவர்களும், கணிதத்தை ஒரு பாடமாகக்கொண்டு இளங்கலை
அறிவியல் முடித்தவர்களும், நேரடியாக இரண்டாமாண்டில் சேரலாம்.
வேலைவாய்ப்பு :
என்னுடன் படித்தவர்கள் மற்றும் மூத்த மாணாக்கர்கள் யாவரும் தற்போது
உயர்நிலையில் பணியாற்றி வருகின்றனர். ஆதலால் 100% வேலைவாய்ப்பு பெறமுடியும்
என்றே சொல்லலாம்.
பாடத்திட்டம் :
தன்னாட்சி அதிகாரம் பெற்ற, அரசு பல்கலை என்பதினால் காலத்திற்கேற்றவாறு
பாடத்திட்டங்கள் முழுமையாக மாற்றியமைக்கப்படுகின்றன. நிறுவனங்கள்
எதிர்நோக்கும் தகுதியினை வளர்க்கும் பாடங்கள் மட்டுமே இங்கு பாடத்திட்டமாக
அமைக்கப்பட்டுள்ளது. பாடத்திட்டத்தைக் காண
இங்கே சொடுக்கவும்.
விண்ணப்பங்கள் தற்போது அளிக்கப்பட்டுவருகின்றன. அவற்றைப் பதிவிறக்க
இங்கே சொடுக்கவும்.
தகவல் கையேட்டினைப் பெற
இங்கே சொடுக்கவும். மேலும் விவரங்களுக்கு
இங்கே சொடுக்கவும்.
வழக்கமாக முதுகலை தொழில்நுட்பவியல் படிப்பதற்கு, ஆறு ஆண்டுகள் ஆகும். ஆனால்,
ஒருங்கிணைந்த படிப்பாக வழங்கப்படுவதினால் 5-ஆண்டுகளிலேயே முதுகலை
தொழில்நுட்பவியல் பட்டத்தினை பெறமுடிகிறது. இத்தகைய அருமையான, பொன்னான
வாய்ப்பினை நழுவவிட்டு, சாதாரண உப்புமா கல்லூரிகளில் படிப்பினை முடித்து
வாழ்க்கையினை தொலைத்துகொள்வதை அறியாமையின் உச்சகட்டம் என்றால் அது
மிகையாகாது.
பெற்றோரே, மாணாக்கர்களே உங்களுடைய வாழ்க்கையைத்
தீர்மானிக்கப்போகும் முக்கிய கட்டத்தில் இருக்கின்ற நீங்கள், மிக்க
கவனத்துடனும், விழிப்புணர்வுடனும், பொறுப்புணர்வுடனும் படிப்பைத்
தேர்ந்தெடுக்க வேண்டும். அதன் சாதக, பாதகங்களை நடுநிலையோடு அலசி ஆராய்ந்து
தான் சேர வேண்டும். கல்லூரியைத் தேர்ந்தெடுப்பதில் அதிக கவனம் மேற்கொள்ள
வேண்டும். இவையெல்லாவற்றையும் சிந்தித்து தான், மனோன்மணியம் சுந்தரனார்
பல்கலையின் 5-ஆண்டு ஒருங்கிணைந்த முதுகலை தொழில்நுட்பவியல் பாடத்தினை உங்கள்
முன் வைத்துள்ளேன். என்ன படிப்பது, எங்கு படிப்பது என்பதற்கு ஏராளமான
வழிகாட்டுதல்களும், தீர்வுகளும் அளிக்கப்படலாம். அத்தீர்வுகளுள் ஒன்றாக நான்
படித்த பல்கலைகழகத்தினை இங்கு முன் மொழிந்துள்ளேன்.
குறிப்பு
:
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையின் மணிமகுடத்தில் ஒளிமிகுந்த வைரமாக
ஜொலிக்கும் CITE-ன் வளர்ச்சிக்கு ஆணிவேராக திகழ்ந்துவரும்
ஒரு மனிதரைப்
பற்றியதான அறிமுகம்
இங்கு தவிர்க்கமுடியாதது. அவர்தான் இத்துறையின் தலைவர்
முனைவர்.
பேராசிரியர் கிருஷ்ணன் நல்லபெருமாள். ஒவ்வொரு மாணாக்கரோடும் நேரடித்
தொடர்பினை ஏற்படுத்திகொள்ளும் 20-ஆண்டுகள் கல்வித்துறையில் அனுபவமிக்க இந்த
அற்புத மனிதரால்தான் இன்று நான் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமொன்றில்
பணியாற்றிவருகிறேன். என்போன்று ஏராளமானவர்களை ஆண்டுதோறும் உருவாக்கிவரும்
இவருடைய சாதனைகள் அளவிட முடியாதது. 10-க்கும் மேற்பட்ட புத்தகங்களை
எழுதியுள்ள இவரின், 36 அறிவியல்/பொறியியல் கட்டுரைகள் உலகப்பிரசித்திப்
பெற்ற IEEE போன்ற பன்னாட்டு இதழ்களில் வெளிவந்திருக்கின்றன. IEEE-ல் மூத்த
உறுப்பினராக உள்ள இவர், ஜப்பான், சிங்கப்பூர் போன்ற நாடுகளில் நடைபெற்ற
அறிவியல் மாநாடுகளில் பங்கேற்று பலரின் பாராட்டுதல்களை பெற்றுள்ளார்.
தென்தமிழத்தின் பொக்கிஷமாக திகழும் இவரின் தலைமையின் கீழ், CITE பல
திட்டங்களை வெற்றிகரமாக முடித்தும், புதிதாக தொடர்ந்தும் பீடு நடைபோட்டு
வருகிறது.
பொறியியலார்களுக்கு தொழில்நுட்ப பாடங்களுடன், சமுதாய மற்றும் மனிதநேயப்
பாடங்களும் கற்பிக்க வேண்டுமென வலியுறுத்தும் இவரின் வகுப்புகள் யாவும்
என்றும் மறக்க இயலாதவை. அதிலும் குறிப்பாக Image Processing (இதற்கு சரியான
தமிழ்வார்த்தை அறிந்திருப்பின் தயவுசெய்து தெரிவிக்கவும்) பற்றியதான
வகுப்புகள் என்றும் பசுமையானவை. மிக அற்புத தருணங்களான
அந்நாட்களை தொடர
மீண்டும் ஒரு வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது. ஆம்,
இவரின் தலைமையில், வழிகாட்டுதலில் ஆராய்ச்சி படிப்பினை மேற்கொள்ள வாய்ப்பு
கிடைத்துள்ளது.
என் போன்றே அவருக்கும் தமிழின்பால் அலாதியான காதலுண்டு. அவருடனான இந்த இனிய பயணத்தை நேரம் கிடைக்கும்போதெல்லாம்
உங்களுடன் நிச்சயம் பகிர்ந்துகொள்வேன்.
மாணவர் நலனில் TAMILCAFE!!!
|
|