Can't view the contents correctly? Click Here >>

இலக்கற்ற பயணம்

இவை வெறும் வார்த்தைகளல்ல. மிகவும் ஆழமாக, உற்று நோக்க வேண்டியவை. வாழ்க்கையையே புரட்டிப்போட்டுவிடும் வலிமைமிக்க மந்திர வார்த்தைகள். ஆழப் பொருள் பொதிந்த வார்த்தைகளேயானாலும், தீட்டப்படாத வைரத்தைப்போன்று இதன் அருமையை புரிந்துக்கொள்ளாதவரை வாழ்கையில் எவ்வித மாற்றமும் இருக்கப் போவதில்லை.

மனிதரில் 98 சதவீதத்தினருக்கு, வாழ்க்கையில் எவ்வித இலக்கும் இருப்பதில்லை. காலத்தின் கையில் தம் வாழ்க்கையை ஒப்படைத்துவிட்டு, அதன் போக்கிலேயே வாழ்ந்து, மடிந்து விடுகின்றனர். ‘வாழ்கின்ற காலத்தில் அதன் இழதத இழப்புக்கு தன்னை உட்படுத்திக்கொள்ள வேண்டியதாகிறது’ என்பதை இவர்கள் இறுதிவரை உணர்வதில்லை. வெறுமனே பிறந்து, வெறுமனே வாழ்ந்து, வெறுமனே மடிந்தும் விடுகின்றனர். இவ்வுலகில் இவர்கள் வாழ்ந்தார்கள் என்று கூட சொல்ல முடியாது, வெறுமனே வசித்தவர்கள் என்று வேண்டுமானால் சொல்லலாம், சத்குருவின் வார்த்தைகளிலே சொன்னால் மனித உடம்பு இவர்களால் வீணடிக்கப்பட்டுவிட்டது.

எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம் என்கின்ற விழிப்புணர்வு இல்லாமல் வாழ்க்கையை தொடர்வது, துரதிருஷ்டவசமானது. மணம் பரப்பும் பூக்கள் கூட, தான் பிறந்ததின்/மலர்வதின் நோக்கத்தை பூர்த்தியடையச் செய்து விட்டுத்தான் மறைகிறது. ஆனால் மனிதன்?

இலக்கில்லாத ஏவுகணை எப்படி ஆபத்தானதோ, அதைப்போல, இலக்கில்லாத வாழ்க்கையும் ஆபத்தானதாகும் இளமையில் மனிதனுக்கு ஆயிரம் கனவுகளும், இலட்சியங்களும் இருப்பதுண்டு. ஆனால், அவற்றை அடைவதற்கான முயற்சியிலும், பயிற்சியிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்வதில்லை. விளைவு, கிடைத்த ஏதோவொன்றில், அப்படியே தொற்றிக்கொண்டு காலத்தை கடத்த வேண்டியதாகிறது. சராசரிக்கும் கீழேயான வாழ்க்கையேயானாலும், மனதை சுய சமாதானம் செய்து கொண்டு தொடர வேண்டியுள்ளது. இந்த அவலநிலைக்கான காரணத்தை அவன் ஒருநாளும் கண்டறிய முயற்சிப்பதில்லை. காலத்தின் மீதும், விதியின் மீதும், சூழ்நிலையின் மீதும் பழியை போட்டுவிட்டு சாமார்த்தியமாக தப்பிப்பதாக நினைத்துக் கொண்டு தன்னைத் தானே ஏமாற்றிக்கொள்கிறான்.

ஏதோ பிறந்துவிட்டோம். இனி வாழ்ந்து தானே ஆகவேண்டும், இறக்கும் வரையில் என்று மரணத்தை நோக்கியதான வாழ்க்கையிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள மனிதன் மிகுந்த தயக்கம் காட்டுவது, அறியாமையின் உச்சக்கட்டம்.

தீர்மானமான பாதையில் செல்வதென்பது அவ்வளவு கடினமான என்ன? இலக்கற்ற பாதையைக்காட்டிலும், தீர்மானமான, உறுதியான, தெளிவான பாதை எளிமையானதாகவே தான் கருதுகிறேன். வாழ்க்கையை நம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதொன்றும் அவ்வளவு கடினமானதல்ல.

சமீபத்தில் படிக்க நேர்ந்த நாஞ்சல் நாடனின் சதுரங்கக் குதிரை நாவலில் வரும் நாராயணன் கதாபாத்திரத்திற்கும், அவருடைய மற்றொரு நாவலான ‘எட்டுத்திக்கும் மதயானை’ -ல் வரும் பூலிங்கம் கதாபாத்திரத்திற்கும், எஸ்.ராமகிருஷ்ணனின் ‘உறுபசி’ நாவலில் வரும் ‘சம்பத்’ கதாபாத்திரத்திற்கும் உள்ள ஒற்றுமை, மூவருக்குமே சரியான இலக்குகென்று ஒன்றும் கிடையாது. அப்போதைகப்போதான செயல்களை மட்டும் செய்வதினால், வாழ்க்கை முழுவதும் மிகுந்த அலைக்கழிப்புக்கு ஆளாகி பின் இறுதியில் எவ்வித சாதனைகளுமின்றி இறந்துவிடுகின்றனர். பெரும்பான்னை மக்களின் பிரதிபலிப்புதான் இந்த கதாபாத்திரங்கள்.

வெற்றியென்பது சிலருக்கு மட்டுமே வாய்க்கப்பெறுவதன்று, அது பொதுவான ஒன்று. அதைப்பற்றியதான விழிப்புணர்வும், சிந்தனையும் தொடர்ந்து இருக்கும் பட்சத்தில் வாழ்க்கையை நம் கண்ணசைப்புக்கு ஏற்ப கொண்டு செல்லலாம்.


“தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலர்
தோன்றலின் தோன்றாமை நன்று”

என்று வள்ளுவரின் வாக்கை, இங்கு எடுத்தியம்புவது சாலத்தகும் என்று நினைக்கிறேன்.

ஏழையாக பிறப்பது தவறன்று, ஆனால் ஏழையாக இறப்பது மாபெரும் தவறாகும்.

திட்டமிடல் என்பது இங்கே மிக முக்கியமானதொன்று. ஒவ்வொரு செயலுக்கும், நடவடிக்கைக்கும் தெளிவான திட்டமிடல் இருப்பின், வெற்றி எப்பொழுதும் நிரந்திரமாக தங்கிவிடும். கடந்த காலத்தின் தவறுகனை களைந்து, புத்திக் கூர்மையுடன் திட்டமிட்டால் எத்தகைய சாதனையையும் எளிதாகப் புரியலாம். இங்கே வெற்றியென்பது, எதையோ சாதிப்பது தான் என்ற பொத்தாம் பொதுவான கருத்தை நான் இங்கு வலியுறுத்தவில்லை. அர்த்தமுள்ள செயல்கள் யாவுமே சாதனைதான், இந்த அர்த்தமுள்ள செயல்களின் அளவுகோல் வேண்டுமானால் மாறுபடலாம். இன்னும் சிலருக்கு இலக்குகள், இருக்கும். ஆனால் அவை, பலவாக இருப்பதினால் எதிலும் ஒருமுகப்பட்டு செயல்பட முடியாததினால் சக்தி விரயமாகிறது. இவர்கள் தம்முடைய இலக்குகளை கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும். ஒன்றின் பின் ஒன்றாக படிப்படியான முன்னேற்றத்தை நோக்கி காய் நகர்த்த வேண்டும். அதுவே புத்திசாலித்தனமும் ஆகும்.
 

free hit counters
பதிப்புரிமை © TAMILCAFE. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை / IP கொள்கை 
Disclaimer: This site does not store any files on its server. We only index and link to content provided by other sites.