Can't view the contents correctly? Click Here >>

அனுபவத்திலிருந்து விடுதலை

முதன்முதலாக ஓஷோ அவர்கள், இவ்வார்த்தைகளை உலகிற்கு அறிமுகப்படுத்தினார். உண்மை நிலையை ஆராயாமல் வெறும் தன்னம்பிக்கையின் அடிப்படையில் வாழ்க்கை வாழ்வது வீணானது என்பதை வலியுறுத்தவே ஓஷோ இவ்வார்த்தைகளை பயன்படுத்தினார்.

தம் அனுபவத்தில் இல்லாத ஒன்றைப்பற்றி, மனிதன் பல கற்பனைகளின் அடிப்படையில் அதனை நம்பத் தொடங்குகிறான். எங்கே நம்பிக்கை வலுப்பெறுகிறதோ, அங்கே ஆராய்ச்சி முடிவு பெறுகிறது, அங்கே வளர்ச்சி தடைப்பட்டுப் போகிறது, முன்னேற்ற விதை மண்ணுக்குள்ளேயே முடங்கிப்போய்விடுகிறது. மனித வாழ்க்கையும் சிறு வட்டத்திற்குள்ளேயே அடங்கிப் போய் விடுகிறது. இந்த அறியாமையை அகற்றும் வழிதான் அனுபவத்திலிருந்து விடுதலை என்ற மாபெரும் உண்மையை ஓஷோ அவர்கள், உலகிற்கு எடுத்துக் கூறினார்.

உதாரணமாக, கடவுள் என்பது நம்பிக்கையா, அனுபவமா என்ற கேள்விக்கு பலரின் பதில் நம்பிக்கை தான். “கடவுள் நம்பிக்கை எனக்குண்டு” என்று தான் பலரும் கூறுகின்றனரே தவிர “கடவுளின் அனுபவம் எனக்குண்டு” என்று யாரும் கூறுவதில்லை. தம் அனுபவத்தில் இல்லாத கடவுளைப்பற்றி வெறும் நம்பிக்கையில் வணங்குவது, உண்மையில் அவரை இழிவுப்படுத்துவதாகும். இதற்குக் காரணம் நம்பிக்கை.

நம்பிக்கை நமது மூளை வளர்ச்சியை, அறிவு முதிர்ச்சியை தடுத்து நிறுத்தும் மாபெரும் தடைக்கல். நம்பிக்கையை விட்டொழியுங்கள், அனுபவத்தில் பாருங்கள், இது கடவுள் விஷயத்திற்கு மட்டுமன்று, வாழ்கையின் எல்லாவற்றுக்கும் இதனை பின்பற்றலாம். இதனை ஒரு அடிப்படை விதியாக எல்லாவற்றிலும் பொருத்திப் பார்த்தால், வாழ்க்கை இவ்வளவு அற்புதமானதா என்பதனை உணர்ந்து ஆச்சரியப்படுவீர்கள்.

பிரும்மாச்சாரி என்பவர்கள் காமத்தில் ஈடுபடக்கூடாது என்பது அக்காலத்திலிருந்து பின்பற்றப்படும் ஒரு வரைமுறை. இவாகளின் வரைமுறைகளுக்கு மதிப்பளிப்பதாக எண்ணிக் கொண்டு (நம்பிக் கொண்டு) காமத்தில் ஈடுபடாமல் கட்டுப்பாடு என்கின்ற பெயரில் வாழ்க்கையை தொடங்குகின்றனர். ஆனால் அதன் மீதான ஆவல் நாளுக்கு நாள் அதிகரித்து, அதனை தீர்த்துக் கொள்ளும் வழி தெரியாமல் வெதும்புகின்றனர். அமைதி நிலையில் இல்லாமல், காட்டாற்று வெள்ளம் போல் சீறிப்பாயும் மனதை கட்டுக்குள் வைக்க பெரும் போராட்டத்தை மனதுக்குள்ளே நடத்தும் இவர்களின் பிரச்சனை என்ன? இவர்களின் அனுபவத்தில் இல்லாத காமத்திலிருந்து இவர்கள் விடுதலைப் பெற்று விட்டதாக எண்ணிக்கொண்டதே.

காமத்தில் ஈடுபட்டு அதனை தம் அனுபவத்தில் முழுவதுமாக உணர்ந்து, பின் வெளிவருபவர்களே உண்மையான பிரம்மச்சாரிகளாக தொடர முடியும். இன்னொன்றையும் இங்கே வலியுறுத்திக் கூற வேண்டியுள்ளது. பிரம்மச்சாரிகள் என்பவர்கள், வெறும் செயல்களினால் தீர்மானிக்கப்படக்கூடாது. அவர்கள் எத்தகைய மனநிலையில் வாழ்வைத் தொடருகின்றனர் என்பதை வைத்தே தீர்மானிக்கப்பட வேண்டும்.

எதனையும் உங்கள் அனுபவத்தில் முழுவதுமாக கண்டு உணருங்கள். அதை ஆசை தீர அனுபவியுங்கள். நீங்கள் விடுதலையை மிக அருகில் நெருங்கி விட்டதை உணர்வீர்கள்.

குடிப்பது தவறு என்ற மூன்றாவது நபரின் கருத்தை அப்படியே ஏற்று, அதனையே தாங்களும் பரப்ப முயற்சி செய்யாதீர்கள். அவரின் அனுபவத்தில் இல்லாத ஒன்றினை பற்றி கருத்து வெளியிட அவருக்கு உரிமை கிடையாது. வாழ்க்கையை இன்னும் தொடக்க நிலையிலேயே பார்த்துக் கொண்டிருக்கும், அவரின் சிறுமைத்தனமாக கருத்துக்களை எப்படி நீங்கள் அங்கீகரிக்கலாம்? அப்படியானால் நாங்களும் குடிக்க வேண்டுமென்று வலியுறுத்துகிறீர்களா என்று பத்தாம் பசலித்தனமான கேள்வியை முன்மொழியாதீர்கள். கடவுளை கல்லாக பார்பதற்கும், கடவுளாக பார்பதற்கும் உள்ள வேறுபாட்டினை உங்கள் கண்கள் அறிந்திருக்குமாயின், நான் கூறவந்த கருத்தையும் நீங்கள் தெளிவாக அறிந்திருப்பீர்கள்.

ஆசையை அடக்க அடக்க, மனதில் போராட்டம் மெல்ல மெல்ல வலுப்பெறுகிறது. நிறைவேறாத ஆசைகள் வாழ்க்கையை சுமையாக்கி விடுகின்றது. அனுபவத்தில் இல்லாத அதனை மனம் எப்பொழுதும் தேடிக்கொண்டே இருக்கிறது. கட்டுபாடு எனும் போர்வையால் அதனை அதிக நாள் மூடிவைக்கலாகாது. இதனிலிலுருந்து வெளியேற நமக்கு முற்றிலும் மாறுபட்ட மனநிலை வேண்டும். சில மணித்துளிகளிலும் கூட அதனை அடைந்து விடலாம். ஆனால் அது அவ்வளவு சாதாரணமானதன்று.

மனிதனை படைத்திட்ட இறைவன், அவன் வெறும் இருட்டு குகைகளுக்குள்ளேயே இருந்து விட வேண்டுமென்று நினைக்கவில்லை. அவன் இவ்வுலகத்தை அனுபவித்திட வேண்டுமென்ற ஆவலில் தான், ஆசையில் தான் அற்புதமான, அழகான இவ்வுலகத்தை படைத்திட்டு மனிதனை இங்கு எவ்வித கட்டுப்பாடுமின்றி சுதந்திரமாக செயல்பட அனுமதித்தார். தன் அனுபவத்திலிருந்து மெல்ல மெல்ல விடைப்பெற்றான். வளர்ச்சி என்பது கடவுளையே உருவாக்கும் அளவுக்கு வளர்ந்திருக்கிறது.

குறிப்பு : இதைப்பற்றியதான உங்கள் விமர்சனங்களை இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்-feedback@tamilcafe.net

free hit counters
பதிப்புரிமை © TAMILCAFE. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை / IP கொள்கை 
Disclaimer: This site does not store any files on its server. We only index and link to content provided by other sites.