Can't view the contents correctly? Click Here >>

கிரிக்கெட் எனும் சாத்தான்

இந்தியாவை விழுங்கிக் கொண்டிருக்கும் பல சாத்தான்களுள் மிகப்பெரிய சாத்தானாக உருவாகிக் கொண்டு வருகிறது கிரிக்கெட் எனும் சூதாட்டம்.

கோடிகளில் பணத்தை அள்ளிக் கொண்டிருக்கும் BCCI IPL எனும் அமைப்பை உலகிற்கு அறிமுகம் செய்ததினால், இந்தியா கிரிக்கெட் சூதாட்டத்திற்கு உறைவிடமாக மாறிவிட்டது. தனிநபர்களின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும், இதனைக் கட்டுப்படுத்த எவரும் துணியவில்லை. பணம் பாதாளம் வரை பாயும் என்பதைத் தவிர வேறென்ன சொல்ல முடியும்.

அடிமைகளை விலைக்கு வாங்குவது போல, கிரிக்கெட் வீரர்கள் இங்கே விலை பேசப்பட்டு விற்கப்படுகின்றனர். அவர்களும் பணம் வந்தால் சரியென்று ஏற்றுக் கொள்கின்றனர். இவர்களை பந்தயக் குதிரை என்று சொல்லுவதைவிட கழுதை என்று வேண்டுமானால் சொல்லலாம்.

பட்டி தொட்டி எல்லாம் சாத்தானின் ஆட்சி தான். தீமைகள் மிக வேகமாக பரவும் என்பது இதன் மூலம் கண்கூடு போலும். பாரம்பரிய விளையாட்டுகள் புத்தகத்தை விட்டு கூட அகன்று விட்ட அவல நிலைப்பற்றி கவலை கொள்வதற்கு யாருக்கு நேரமிருக்கிறது. மனிதனின் நேரத்தை முழுமையாக விழுங்கி விடும், தொலைக்காட்சிகள், கிரிக்கெட் நேரத்தில் சொல்லவே வேண்டாம். மக்கள் மந்தை மந்தையாக தொலைக்காட்சி முன் ஆஜராகி விடுவது, மிகவும் அருவறுப்பான செயலாகும். இதை விட வேறு மாதிரியாக வீணடிக்கும் வழி இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

கிரிக்கெட்டின் கை ஒங்கிய பிறகு, ஹாக்கியின் வளர்ச்சி இந்தியாவை விட்டு மறைந்து விட்டது என்றே நினைக்கிறேன். இந்தியாவின் தேசிய விளையாட்டு என்னவென்று தயவு செய்து எந்த மாணவரிடமும் கேட்டு விடாதீரிகள்.

இணையம், கைப்பேசி, தொலைக்காட்சி, நாளிதழ்கள் என எல்லா ஊடகங்களிலும் இதன் ஆழ்ந்த தாக்கத்தை ஒழிக்க இயலுமா என்ற சந்தேகம் கூட உள்ளது. ஆபாச நடன அரங்காக கூட மாறிவிட்ட இந்த கிரிக்கெட் ஆட்டம், இந்தியாவின் வளர்ச்சிக்காக, இந்திய மக்களின் முன்னேற்றத்திற்காக இதுவரை செய்ததுதென்ன? கோடிகளில் பணத்தை சுருட்டும் இந்த கிரிக்கெட் சூதாட்டம், இந்தியாவின் வறுமை ஒழிப்பு திட்டத்திற்கு எந்த வகையில் உதவப்போகிறது? இந்தியக் குடிமகனின் ஒரு நாளின் சராசரி வருமானம் ரூ.30. ஒரு வேளை மட்டுமே உணவு உண்டு வாழும் மக்கள், இந்தியமக்கள் தொகையில் கால் பங்கு உள்ளனர். இந்த சூழ்நிலையில் கிரிக்கெட் இந்தியாவிற்கு தேவைதானா?

ஒரு புறம் விவசாயிகளின் தற்கொலை, இன்னொருபுறம் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு. நாளுக்குநாள் அதிகரித்து வரும் பண வீக்கம் இன்னொருபுறம். இப்படி, காணுமிடங்களிலெல்லாம் இந்தியாவை பலவீனப்படுத்தும் காரணிகள் ஒருசேர சூழ்ந்திருக்கும் வேளையில், கிரிக்கெட் ஆட்டத்தை ஏன் தடை செய்யக் கூடாது? இதுயென்ன இந்தியாவின் பாரம்பரிய விளையாட்டா அல்லது தேசிய விளையாட்டா? பணத்திற்கு விலைபோகியுள்ள அடிமைகளைப் பார்ப்பதற்கு ஒரு கூட்டம். உடல் கூச வில்லையா உங்களுக்கெல்லாம்?

படிக்காதவர்களைவிட படித்தவர்கள் தான் இந்த ஆட்டத்திற்கு அதிக ஆர்வம் காட்டுவது இன்னும் வெட்கக்கேடு. இந்தியாவை எதிர் நோக்கியுள்ள உள்நாட்டுப் பிரச்சனைகளைப்பற்றி இவர்களுக்கு எந்த அறிவுப்பார்வையும் கிடையாது. வெறும் ஏட்டுக் கல்வி மட்டுமே அறிந்த காட்டுக் கூட்டம்.

மின்சார வசதியே இல்லாத கிராமங்கள், கல்வி வசதியே இல்லாத கிராமங்கள், போக்குவரத்து வசதியே இல்லாத கிராமங்கள், மருத்துவ வசதியே இல்லாத கிராமங்கள், தொலைதொடர்பு வசதியே இல்லாத கிராமங்கள் என இப்படிப்பட்ட ஏழ்மைகளை உள்ளடக்கியது தான் இந்தியா. இத்தகைய கிராமங்களை மேம்படுத்துவதற்கு இந்த கிரிக்கெட் ஆட்டம் பயன்படுமா? மக்களிடத்தே பொதுப் பார்வை குறைந்து விட்டது. சுய நலப்போக்கு மேலோங்கி விட்டது. தனி மனித இன்பங்களே முன்னிறுத்தப்படுகின்றன. பொது வாழ்க்கை இன்று நகைப்புக்குரியதாகி விட்டது. சுதந்திரத்திற்கு முன் இருந்த ஒற்றுமையும், பொதுப் பார்வையும் மறைந்து விட்டது. நாட்டுக்காக தன் இன்னுயிரை ஈத்த வீரத்திருமகன் பகத்சிங் போன்ற இளைஞர்கள் இன்று ஒருவருமிலர். வேண்டுமானால் இவர்கள் கிரிக்கெட்டுக்காக தம் இன்னுயிரை துறக்க முன்வருவர்? பாருங்கள் இவர்களது முற்றிப் போய்விட்ட பைத்தியக்காரத்தனத்தை.

நாட்டை வழி நடத்த வேண்டிய மிக முக்கிய பொறுப்பில் இருக்கும் இளைஞர்களே, கிரிக்கெட் அடிமை விலங்கை உடைத்தெறியுங்கள். பூட்டப்பட்ட உங்களது அறிவின் கதவுகளை திறவுங்கள். இந்தியாவை எதிரிநோக்கியுள்ள பிரச்சனைகளை தீரிப்பதில் உங்களின் பங்களிப்பு என்ன என்பதை முடிவு செய்யுங்கள். தாய்நாட்டிற்காக நீங்கள் செய்ய வேண்டியதை பட்டியலிடுங்கள். தாய்நாட்டின் முன்னேற்றத்தில் பங்கேற்றுக் கொள்ளுங்கள். கிரிக்கெட் ஒரு பொழுது போக்கு அம்சம். அது தற்போது இந்தியாவிற்கு தேவையில்லை.
 

free hit counters
பதிப்புரிமை © TAMILCAFE. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை / IP கொள்கை 
Disclaimer: This site does not store any files on its server. We only index and link to content provided by other sites.