|
|
இந்தியா பாதுகாப்பானதா?
அதிகரித்துவரும்
குண்டுவெடிப்பு சம்பவங்களும், தீவிரவாதிகள் / நக்சலைட்களின் வளர்ச்சியும்
ஆதிக்கமும் இந்தியா பாதுகாப்பானதா? என்ற சந்தேகத்தை உலகளவில்
ஏற்படுத்தியுள்ளது.
ஹைதராபாத்தில், இராஜஸ்தானில்,
அகமதாபாத்தில் மற்றும் பெங்களூருவில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவமும், தற்போது
தலைநகர் டில்லியில் நடைபெற்றுள்ள குண்டுவெடிப்பு சம்பவமும், முஸ்லிம் தீவரவாதிகளின்
அச்சுறுத்தல் இந்தியாவிற்கு பன்மடங்கு அதிகரித்துள்ளதை பிரதிபலிக்கின்றது.
அமைதிப்பூங்கா என்பதெல்லாம் வெறும் வார்த்தைகள் என்பது நிருபணமாகியுள்ளது.
இரும்புக்கரம்கொண்டு ஒடுக்க வேண்டிய தீவரவாதிகளையும், நக்சலைட்களையும் ஆளும்
காங்கிரசு அரசு தன் வழக்கமான பாணியான ‘விண்ணப்பம் கொடுத்தல்’ எனும்
மென்மையான போக்கினை கையாள்வதே இன்று நூற்றுக்கணக்கான மக்களின் உயிர்பலிக்கு
காரணம். ஆந்திராவில் நக்சலைட்களுடன் பேச்சுவார்த்தை, அஸ்ஸாமில்
நக்சலைட்களுடன் பேச்சுவார்த்தை என்று காங்கிரசு அரசு, அவர்களை
ஒடுக்குவதைவிடுத்து தன் கையாளாகத்தனத்தால் பேச்சுவார்த்தை என்கிற நாடகத்தை
நடத்தி அப்பாவி மக்களின் உயிரை பணயம் வைக்கிறது.
வன்முறை
வெறியாட்டத்திற்கு மூல காரணமானவர்களை இதுவரை கண்டுபிடிக்கவும் இல்லை.
கண்டுபிடிக்கப் போவதும் இல்லை. அப்படியே கண்டுபிடித்து நீதிமன்றத்தால்
தண்டனை வழங்கப்பட்டாலும் தண்டனையை நிறைவேற்றுவதில்லை. காரணம் தம் ஓட்டுவங்கி
பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்கிற குறுகிய அரசியல் நோக்கம் தான். 2001-ல்
நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்திய முஸ்லீம் தீவிரவாதி முகமது
அப்சலின் தூக்குத் தண்டனையை இன்னும் நிறைவேற்றாதது முஸ்லீம் மக்களின் ஓட்டு
வங்கியை இழந்துவிடக் கூடாது என்கிற குறுகிய அரசியல் நோக்கம் தான். இதனால்
தீவிரவாதிகள் பிடிபட்டு தண்டனைப் பெற்றாலும், அவர்கள் தண்டிக்கப்படப்
போவதில்லை என்பது தெளிவாக தெரிந்தபின் இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும்
தினமும் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடக்கத்தான் போகின்றன. ஆயிரக்கணக்கான
மக்களின் உயிர் பலியாகத் தான் போகிறது.
தமிழகத்தில் நக்சலைட்களின் நடமாட்டம் அதிகம், ஆந்திராவில் நக்சலைட்களின் தனி
ராஜ்ஜியம், ஒரிசா, பிகார், அஸ்ஸாம், மேற்கு வங்கம், உத்தரப்பிரதேசம் போன்ற
மாநிலங்களில் நக்சலைட்கள் மற்றும் தீவிரவாதிகளின் தனிப்பெரும்பான்மை
முதலியன இந்தியாவிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாகவும் சவாலகவும்
உருவாகிக்கொண்டிருப்பதை உள்துறை அமைச்சகம் இதுவரை உணரவில்லையா? அச்சுறுத்தல்
அதிகமாக இருக்கும் மாநிலங்கள் இனங்கண்டறியப்பட்டு எச்சரிக்கை செய்தி
அனுப்பிட வேண்டிய பொறுப்பை உளவுத்துறை வாடகைக்கு விட்டிருக்கிறதா?
  
‘இறந்துபோன மக்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கப்படும்’ என்பது
எந்தவிதத்தில் நியாயம்? இது அவர்களை மட்டுமல்லாது மனித இனத்தையே
இழிவுபடுத்துவதாகும். பணம் எப்படி இதற்கு நிவாரணமாகும்? இறந்துபோனவர்களை
பணம் கொடுத்து மீட்டுவிட முடியுமா?
அரசியல்வாதிகளின் கண்டன வார்த்தைகள் யாருக்கு வேண்டும்? உண்மைக்குப்
புறம்பான செய்திகளை அறிக்கைளாக வெளியிடும் போக்கை இவர்கள் நிறுத்திக்கொள்ள
வேண்டும்.
”தீவிரவாதிகள்
/ நக்சலைட்களின் விஷயத்தில் காங்கிரசு அரசு மென்மையான போக்கை கடைபிடிக்கிறது”
என்கின்ற பாஜக-வின் குற்றச்சாட்டில் 100% உண்மை இருக்கிறது. இதுவரை
நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவங்களில் ஈடுபட்டவர்களுள் எவரும்
கண்டுபிடிக்கப்படாதது ஏன்? வேரறுக்கப்பட வேண்டிய தீவிரவாத கும்பல்கள்
அடையாளம் காணப்படாதது ஏன்? எல்லாமே பிராந்திய உணர்வும், குறுகிய அரசியல்
நோக்கமுமே முக்கிய காரணங்களாகும். அவ்வப்போது தலைதூக்கிக் கொண்டிருந்த
தீவரவாத செயல்கள் தற்போது அன்றாடச் செய்தியாகிவிட்டதற்கு காங்கிரசு அரசுதான்
முழுக்காரணம்.
  
இந்தியாவின் இறையாண்மைக்கும், பாதுகாப்பிற்கும் மிகப்பெரிய
அச்சுறுத்தலாக இருக்கும் தீவீரவாதிகளை ஒடுக்குவதற்காகவே உருவாக்கப்பட்ட
‘பொடா’ போன்ற வலிமையான சட்டத்தை திரும்பப் பெற்றது எவ்வளவு பெரிய தவறு
என்பது நிருபனமாகியுள்ளது. இந்திய பொருளாதரத்தையும் அதன் வளர்ச்சியையும்
சீர்குலைக்கத் துடிக்கும் அந்நிய சக்திகளின் முயற்சிகளை தடுப்பதற்கு மத்திய
அரசு இதுவரை எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை. தவறான வழியில்
பயன்படுத்தப்படும் புலனாய்வுத்துறை இனியாவது அதன் உண்மையான நோக்கமான இந்திய
பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கு பயன்படுத்தப்பட வேண்டும். நாட்களை கடத்தி,
மக்களின் மனதிலிருந்து இத்தகைய சம்பவங்களை மறக்கடிக்கச் செய்வதுதான்
தம்முடைய அரசின் சிறப்பு என்று நினைத்துக் கொண்டிருக்கும் காங்கிரசு அரசு
இனியாவது உரிய நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும். அனைத்து மாநில
அரசுகளையும் முடுக்கிவிட்டு, இனி எங்கும் குண்டுவெடிப்பு என்கிற பேச்சே
எழாமல் இருப்பதற்கான உத்திகளை, வழிவகைகளை, வழிமுறைகளை கண்டறிய வேண்டும்.
நாட்டு மக்களின் பாதுகாப்பிற்கு இவர்கள் மட்டும்தான் பொறுப்பு என்பதை
மீண்டும் மீண்டும் நினைவுபடுத்த வேண்டிய சூழலில்தான் மத்திய அரசு இருக்கிறது
என்பதினால் இனியாவது விழிப்புணர்வுடன் செயல்படுங்கள்.
|
|