கனவாகிவரும் இந்திய மேலாண்மை நிறுவனக் கல்வி

உலகளவில் புகழ்பெற்றதும், கோடிகளில் சம்பளத்தை அள்ளித்தரும் இந்திய மேலாண்மை கல்வி நிறுவனங்கள் (IIM), இந்தியாவின் உயர்தர கல்வியை உலக அரங்கிற்கு பறைசாற்றும் வேளையில், இதன் சமீபத்திய கட்டண உயர்வு சாதாரண ஏழை இளைஞர்களுக்கு தொடர் கனவாகவே மாறிவிட்டது. கற்பனையை மிஞ்சும், நினைத்துக் கூடப் பார்க்க முடியாத இந்தக் கட்டண உயர்வு ஏழைகளை மட்டுமல்லாது, நடுத்தரவர்க்க மாத சம்பள ஊழியர்களின் குழந்தைகளுக்கு எட்டாக்கனியாகவே மாறிவிட்டது.

செல்வந்தர்களுக்கு மட்டுமே சாத்தியமாகிவிட்ட இத்தகைய கல்வி நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட தன்னாட்சி அதிகாரம் வழங்கியதை இந்திய அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டும். இம்மறுபரிசீலனையை அவ்வளவு சீக்கிரம் மறுக்க இயலாது. ஏனெனில் சிறந்த பத்து மேலாண்மைக்கல்வி நிறுவனங்களுள் ஒன்றானதும் டில்லி பல்கலைக்கழகத்துக்கு உட்பட்டதுமான Faculty of Management Studies(FMS Delhi) ஆண்டொன்றுக்கு சுமார் ரூ.15000 மட்டுமே கட்டணமாக வசூலிக்கின்றது. ஆனால் முன் குறிப்பிடப்பட்ட இந்திய மேலாண்மை கல்வி நிறுவனங்கள் (IIM), வசூலிக்கப்படும் கட்டணவிவரம் வருமாறு :

கல்வி நிறுவனம்

கட்டணம்/வருடம்

IIM அகமதாபாத்

6 இலட்சம்

IIM கல்கத்தா

3.5 இலட்சம்

IIM பெங்களூரு

4 இலட்சம்

கட்டண விகிதங்கள், மிகப்பெரிய அளவில், மலைக்கும் மடுவுக்குமான அளவில் வேற்படுகின்றன. இத்தகைய வேறுபாட்டினை, மத்திய மனிவளத்துறை அமைச்சர் அர்ஜீன்சிங் ஏற்றுக்கொண்டதில் எள்ளளவும் நியாயமில்லை.

கிராமிய சூழ்நிலையில் இருந்துதான் பெரும்பாலான மாணவர்கள் வருகின்றனர். மேற்படிப்புகள் பற்றியதான அதிகமான வழிகாட்டுதல்கள் இல்லாமல் வெளிவரும் இவர்கள் கல்லூரி இறுதியாண்டு அல்லது அதற்குப்பிறகோ தான் இதைப்பற்றி மெல்ல தெரிந்து கொள்கின்றனர். மேலும் தாய்மொழித் தாக்கத்திலிருந்து வெளிவர இயலாத இவர்கள் மேலாண்மைக் கல்வி நிறுவனங்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு ஆங்கிலத்தில் பேசுவதென்பது இயலாத காரியமாகவே உள்ளது. இச்சூழ்நிலையில் அவர்கள் தங்களை மேலாண்மைக் கல்விக்கு தயார் செய்துகொள்ள நினைத்தாலும் அதிகபட்ச கட்டண உயர்வு ஒருவிதமான அச்ச உணர்வையும், தன்னம்பிக்கை இன்மையையும் ஏற்படுத்தியுள்ளது. இல்லையெனில் அவர்கள் சாதாரண உப்புமா கல்லூரிகளில் படித்து, பணத்தையும் நேரத்தையும் வீணடித்ததோடு மட்டுமில்லாமல் வேலை தேடுதல் என்ற நரக வேதனையையும் அனுபவிக்க வேண்டியதாகிறது. முன்னணி தனியார் மேலாண்மைக் கல்வி நிறுவனங்களும் இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனங்களுக்கு நிகராக (இன்னும் அதிகமாகவும் கூட) கட்டணத்தை வசூலிக்கின்றன. இதனை தடுப்பதற்கோ, வரைமுறைப்படுத்துவதற்கோ காங்கிரசு அரசு எவ்வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

தகவல் தொழில்நுட்ப வசதி இன்னும் நகரங்களையே சரியாக சென்றடையாத சூழ்நிலையில் கிராம இளைஞனின் நிலைமை எப்படி இருக்கும் எனபதை நினைக்கும்ப போது இதயம் கனக்கின்றது. நுழைவுத் தேர்வு தொடர்பான தகவல்களை சேகரிப்பது, பின் தேர்வுக்கு தயாராவது விண்ணபிப்பது என்று அனைத்து படிநிலைகளையும் கடந்து வருவது என்பது சாதாரண கிராமிய அரசு கலைக் கல்லூரியிலிருந்து வெளிவரும் மாணாக்கனால் நிச்சயமாக முடியாது, சாத்தியமில்லாததும் கூட. அப்படியே சாத்தியமானாலும் விண்ணப்பக் கட்டணத்தை நினைக்கும் போது சாத்தியமின்மை உறுதி செய்யப்படுகிறது.

ஒரு மேலாண்மைக் கல்வி நிறுவனத்திற்கு விண்ணப்பிக்க வேண்டுமானால் குறைந்தது ரூ. 1000 செலுத்த வேண்டும். குறைந்தது 10-நிறுவனங்களுக்காவது விண்ணப்பித்தால் மட்டுமே ஏதேனும் ஒரு நிறுவனத்தில் இடம் பிடிக்க வாய்ப்புண்டு. ஆக, ரூ. 10,000 விண்ணபத்திற்கே செலவிட வேண்டியுள்ளது. ஏழை, நடுத்தர, மாதாந்திர ஊதியக் குடும்பத்தினரால் எப்படி ரூ. 10,000 விண்ணபத்திற்கு மட்டும் செலவழிக்க முடியும்? காங்கிரசு அரசு, பெரும் செல்வந்தர்களையும், தனவானகளையும், தொழிலதிபர்களையும் மட்டுமே ஆதரிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளது இதன்மூலம் நிருபனமாகியுள்ளது. வெகுஜன மக்களைப்பற்றி இவர்களுக்கென்ன கவலை?

ஒருபுறம் இடஒதுக்கீடு என்ற ஆசை வார்த்தையைக் கூறும் காங்கிரசு அரசு இன்னொருப்புறம் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத அளவிற்கு கல்விக் கட்டணத்தை உயர்த்த ஒப்புதல் வழங்கியுள்ளமை திட்டமிட்ட ஏமாற்று வேலையில்லாமல் வேறென்ன? இதனால் இடஒதுக்கீட்டுப் பயனை ஏழை மாணவர்கள் அனுபவிக்க முடியாமல் போகின்றது.

வறட்டுக் கூப்பாடு போடும் தமிழக மஞ்சள்முனி கருணாநிதியும், தமிழ் இடிதாங்கி இராதாசும் கட்டண உயர்வு குறித்து எந்த கண்டனமும் வெளியிடாதது ஏன்? 100 தலைமுறைக்கு சொத்து சேர்த்துவிட்டோமே நமக்கு இனி என்ன கவலை என்கிற எண்ணம் தானே?

உண்மைச் சூழலை அறிந்துகொண்டு, கடந்தகால சம்பவங்களையெல்லாம் நினைவுகூர்ந்து காலத்திற்கேறப முடிவுசெய்து தலைவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். ஏற்கனவே இனங்கண்டுவிட்ட இத்தகைய அரசியல், ஊழல் பெருச்சாளிகளை தேர்தல் சமயத்தில் தக்கமுறையில் தண்டிக்க வேண்டும்.

குறிப்பு : இதைப்பற்றியதான உங்கள் விமர்சனங்களை இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்-feedback@tamilcafe.net

free hit counters
பதிப்புரிமை © TAMILCAFE. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை / IP கொள்கை 
Disclaimer: This site does not store any files on its server. We only index and link to content provided by other sites.