உலகக் கண்கள் காணத்துடிக்கும் தாஜ்மஹால்

உலகக் கண்கள் அனைத்தும் காணத்துடிக்கின்ற/விழைகின்ற காதல் சின்னமொன்று உண்டெனில் அது தாஜ்மஹால் தான் என்பதற்கு என்றுமே மாற்றுக்கருத்து கிடையாது. அதன் மெய்மறக்கச் செய்யும் அழகும், வடிவமைப்பும் இன்றுவரை அனைவரையும் ஆச்சரியத்தின் விளிம்புக்கே அழைத்துச் செல்வதோடு, உடற்சிலிர்க்கவும் செய்கிறது. நிரந்திர உலக அதிசியமாக திகழும் தாஜ்மஹாலின் கட்டிட அழகிற்கு நிகரான ஒரு கட்டிடம் இதுவரை தோன்றியதில்லை, இனி தோன்றப்போவதும் இல்லை. இந்தியாவின் அழகில் தாஜ்மஹால் ஒரு மணிமகுடம் என்றால் அது மிகையாகாது.

இத்துணை சிறப்புக்கும்/புகழுக்கும் காரணமாக இருந்தது முகலாய சாம்ராஜ்ஜியத்தின் ஐந்தாவது சக்ரவர்த்தி ஷாஜஹான். மும்தாஜ் மஹால் ஷாஜஹானின் இரண்டாவது மனைவி மட்டுமல்ல, மன்னருக்கு மிகப்பிடித்தவரும் கூட. பெர்ஷிய நாட்டின் இளவரசியான மும்தாஜ் மஹாலின் இயற்பெயர் ‘அர்ஜுமென் பானு பேகம்' என்பதாகும். தன்னுடைய 14-வது (சிலர் 13-வது என்றும் கூறுவதுண்டு) குழந்தையை ஈன்றெடுக்கும் போது இறந்த இவர் தன் இறுதி விருப்பமாக இதுவரை உலகம் கண்டிராத வகையில் ஒர் நினைவுச்சின்னம் எழுப்பப்பட வேண்டுமென்று தன் அன்புக்கணவர் ஷாஜஹானிடம் கேட்டுக்கொண்டார்.

மும்தாஜ் மஹாலின் விருப்பத்திற்கிணங்க உடனடியாக ஆக்ராவில், உலகின் அனைத்து சிறந்த,மேதமை மிகுந்த கட்டிடக்கலை வல்லுனர்கள் குவிக்கப்பட்டனர். பொறியியலாளர்கள், சிற்பக்கலை நிபுணர்கள், ஓவியர்கள், பலதரப்பட்ட ஊழியர்கள் மற்றும் பொது தொழிலாளிகள் என சுமார் 20,000 பேர் பணியில் அமர்த்தப்பட்டனர். கி.பி.1632-ல் தொடங்கப்பட்ட இப்பணி 17-ஆண்டுகளாக கி.பி.1648-ல் தான் முடிவடைந்தது. பணியாளார்கள் அனைவரும் இரவு பகலாக பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இவர்களுக்கென அருகிலேயே பிரத்யேகமாக ‘மும்தாஜபாத்' (தற்போதைய ‘தாஜ்கஞ்ச்') என்கிற பெயரில் ஊர் ஒன்று உருவாக்கப்பட்டு அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டன.

இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும், மத்திய ஆசியாவிலிருந்தும் கட்டுமானப் பொருட்கள் கொண்டு வரப்பட்டன. இப்பணியில் சுமார் ஆயிரத்திற்கும் மேலான யானைகள் ஈடுபடுத்தப்பட்டன.

பளிங்கு கற்கள் சீனாவிலிருந்தும், வைரங்கள் பன்னாவிலிருந்தும், சிவப்புக் கற்கள் பதேபூர் சீக்ரியிலிருந்தும், நீலக்கற்கள் இலங்கையிலிருந்தும் கொண்டுவரப்பட்டன. முதன்மைப் பொருளான வெள்ளை மார்பில்கள் ராஜஸ்தான் மாநிலத்திலிருக்கும் கல்குவாரியிலிருந்து கொண்டுவரப்பட்டன. இதற்கான உத்தரவுகள் ராஜா ஜெய்சிங்குக்கு பிறப்பிக்கப்பட்டதற்கான ஆவனங்களை இன்றுகூட தாஜ் அருங்காட்சியகத்தில் காணலாம்.

313 ச.அ (93.9 ச.மீ) பரப்பளவில் கட்டப்பட்டுள்ள தாஜ்மஹாலின் மேல் விதான மாடம் மையத்திலிருந்து 187 அடி உயரம் கொண்டது. ஸ்தூபிகள் ஒவ்வொன்றும் 137 அடி உயரம் கொண்டதாகும். சமச்சீராக கட்டப்பட்ட கட்டிடத்திற்கு மிகச் சிறந்த/பொருத்தமான உதாரணமெனில் அது தாஜ்மஹால்தான் என்று கூறப்படுவதற்கு காரணம், அதன் இருபுறமும் சிவப்புக்கற்களால் கட்டப்பட்டள்ள கட்டிடங்களேயாகும். மேற்குப்புறத்திலிருப்பது மசூதி, கிழக்குப்புறத்திலிருப்பது விருந்தினர் மாளிகை/அருங்காட்சியகம். நீர்வழிப்பாதைகளும், நீரூற்றுகளும் இச்சமச்சீர் தோற்றத்திற்கு மேலும் அழகு சேர்க்கின்றன.

பெரும்பாலான முகலாய கல்லறைகளில் பூங்காவானது பின்புறமாகவே அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் இதற்கு மாறாக தாஜ்மஹாலின் முன்புறமாக பூங்கா அமைக்கப்பட்டிருக்கிறது. பின்புறம் வானத்திற்கு அளிக்கப்பட்டு விட்டது. ஆம், ஒவ்வொரு பொழுதிலும் ஒவ்வொரு விதமாக தாஜ்மஹால் காட்சியளிக்கிறது. வானத்தின் வண்ணத்திற்கேற்ப தாஜ்மஹால் தன்னுடைய வண்ணத்தையும், நிறத்தையும் மாற்றிக் கொள்கிறது. அதனால்தான், பெரும்பாலானவர்கள் பெளர்ணமி இரவிலும், இன்னும் பலர் சூரிய அஸ்தமனத்தின் போதும் தாஜ்மஹாலைக் காண கண்கோடி வேண்டுமென்கினரோ? தாஜ்மஹால் என்பதே கல்லறை,பூங்கா,மசூதி,அருங்காட்சியகம்,வாயில்கள் முதலியவற்றின் மொத்த தொகுப்பாகும்.

தாஜ்மஹாலை வடிவமைத்தவர் ‘உஸ்தாத் அஹமது லஹாரி' என்று கூறப்பட்டாலும் அதற்கான உறுதியான சான்றுகள் இன்னும் கிடைக்கப்பெறவில்லை. மேலும் இதைப்போலவே பிறிதொரு கட்டிடம் எழுப்பப்பட்டுவிடக் கூடாதென்பதற்காக அனைவரது கட்டைவிரல்களும் துண்டிக்கப்பட்டதாகவும் ஒரு செய்தி உலவுகிறது.

இற்றைய நிலையில், யமுனை ஆற்றங்கரைக்கு அழகு சேர்த்திடும் தாஜ்மஹாலைக் காண கோடிக்கணக்கானோர் வந்துகொண்டிருந்தாலும், அதனை அழிவிலிருந்து பாதுகாப்பதற்கு இன்றுவரை ஒருவர்கூட உண்மையாக முன்வராதது தாளவொனாத துயரத்தில் ஆழ்த்துகிறது. இனியும் விழித்துக்கொள்ளாவிடில் தாஜ்மஹால் நமக்கும் ஒரு நினைவுச் சின்னமாகிவிடும்.

free hit counters
பதிப்புரிமை © TAMILCAFE. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை / IP கொள்கை 
Disclaimer: This site does not store any files on its server. We only index and link to content provided by other sites.