|
|
தமிழகத்தின் முட்டுகட்டை –இராமதாஸ்
”வளர்ச்சிக்கு எதிரானவர் இராமதாஸ்” என்ற தோற்றத்தை ஆளுங்கட்சி
ஏற்படுத்துவதாக குற்றம் சாட்டியுள்ள இராமதாஸ், தமிழக வளர்ச்சிக்காக இதுவரை
செய்ததென்ன?
தொழில்வளர்ச்சியில் அபரிதமான முன்னேற்றத்தை கண்டுவரும் தமிழகத்தின்
வளர்ச்சிக்கான முக்கிய காரணம் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் தான் என்றால்
அது மிகையாகாது. பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கி வரும்
இத்தகைய சிறப்பு பொருளாதார மண்டலங்களை எதிர்ப்பதென்பது தமிழக வளர்ச்சிக்கு
பெரும் முட்டுக்கட்டையாகும். எந்தவித நியாமான வாதத்தையும் முன் வைக்காமல்,
வெறும் வறட்டு வாதத்தினை பத்திரிக்கையாளர்கள் மூலம் வேண்டாத பிரச்சாரங்களை
செய்து வருகிறார். அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலங்களை சிறப்பு
பொருளாதார மண்டலங்களுக்கு ஒதுக்கிவதில் என்ன தவறு இருக்கிறது?
விவசாய நிலங்களை அபகரிக்கும் முயற்சி என்கின்ற வாதத்தை அப்படியே ஒதுக்கி
வைக்கிறேன். 50-ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயம் செய்யப்படாமல் தரிசாக
இருக்கும் நிலங்கள் தான் சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு ஒதுக்கப்பட்டு
வருகின்றனவே தவிர, நன்றாக விளைந்து கொண்டிருக்கும் நிலங்கள் அன்று.
அதுமட்டுமில்லாமல், சென்னையில் மட்டும் ஏற்படுத்தப்பட்டுக் கொண்டிருந்த
சிறப்பு பொருளாதார மண்டலங்கள் தமிழகத்தின் இரண்டாம் நிலை நகரங்களான மதுரை,
திருச்சி, திருநெல்வேலி, கோவை மற்றும் சேலம் போன்ற இடங்களிலும் ஏற்படுத்த
ஆவன செய்யப்பட்டு வருகின்றன. இதனால் பரவலான வளர்ச்சி தமிழகத்திற்கு எளிதில்
சாத்தியமாகிறது.
அரசுத்துறை மட்டுமே எல்லோருக்கும் வேலை அளிக்க முடியாத சூழ்நிலையில்,
இத்தகைய சிறப்பு பொருளாதார மண்டலங்கள் தான் பெரும்பான்மையானவர்களுக்கு
வேலைவாய்ப்பினை ஏற்படுத்தி வருகின்றன. மென்பொருள் துறையில் எல்லா
மாநிலங்களைக் காட்டிலும் தமிழகம் தான் அதிக உற்பத்தியும் இலாபமும் காட்டி
வருகிறது. இது முழுக்க முழுக்க சிறப்பு பொருளாதார மண்டலங்களில்
அமைந்திருக்கும் மென்பொருள்களால் தான் என்பது நிதர்சனமான உண்மை.
இதனையெல்லாம் கொஞ்சமும் தெரிந்துகொள்ளாமல் பத்தாம் பசலித்தனமான அறிக்கைகளை
விடுவது, இராமதாஸின் அறியாமையே காட்டுகிறது.
ஆளுங்கட்சிக்கு எப்பொழுதும் குடைபிடித்துக் கொண்டிருக்கும் இராமதாஸ் தற்போது
எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதன் ரகசியம் விரைவில் தமிழகத்தில்
எப்படியாவது ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என்கின்ற பகற்கனவு தான். தமிழக
நலனுக்காக தாம் எப்பொழுதும் பாடுபடுவதாக ஒரு பிம்பத்தை ஏற்படுத்தத் அவர்
நடத்தும் நாடகம் தான் இந்த எதிர்ப்பு நடவடிக்கைகள்.
தம் குடும்பத்தினர் எவரும் எத்தகைய பதவிகளிலும் நிறுத்தப்பட மாட்டார்கள்.
அப்படி நிறுத்தினால் என்னை (இராமதாஸ்) செருப்பால் அடியுங்கள் என்று கூறி
கட்சியை துவங்கிய இராமதாஸ், தேர்தலையே சந்திக்காமல் பின்வாசல் முறையில் தன்
மகனுக்கு மத்திய அமைச்சர் பதவியை பெற்றார்.
மதவாத கட்சிகள் நாட்டின் இறையாண்மைக்கு எதிரானது எனக் கூக்குரலிடும்
இராமதாஸ், வன்னியர்களை மட்டுமே தம் கட்சியில் முக்கிய பதவிகளில்
அமர்த்தியுள்ளார். வன்னிய மாணவர்களுக்கு மட்டும் தான் நடத்திவரும் பல
பொறியியல் கல்லூரிகளில் படிக்க வைத்து வருகிறார். சாதிய உணர்வு எந்தளவுக்கு
இரத்தத்தில் ஊறிப்போயிருக்கிறது இவரிடத்தில்.
தமிழ் குடிதாங்கி என்னும் முகமூடியை அணிந்து ஊரை ஏமாற்றிக் கொண்டிருக்கும்
இராமதாஸின் பேரக் குழந்தைகள் டில்லியில் உள்ள உலகப் பிரசித்தி பெற்ற
பள்ளியொன்றில் இந்தி வழியில் கல்வி பயின்று வருகிறார்களாம். தமிழனை
கருணாநிதிக்கு அடுத்து இந்த விஷயத்தில் மிக அதிகமாக ஏமாற்றுவது இராமதாஸ்
தான்.
நீதித்துறையிலும் கூட இடஒதுக்கீடு வேண்டுமாம். வன்னியர்களை அதிகமாக
நீதித்துறையில் இடம்பெறச் செய்துவிட்டால், தம் சாத்தான் செயல்களை யார்
கட்டுப்படுத்த முடியும் என்கின்ற நப்பாசை தான்.
திருநெல்வேலி – தூத்துக்குடி மாவட்ட மக்களின் வாழ்வில் மலர்ச்சியை
ஏற்படுத்தவிருந்த டாடாவின் அற்புத திட்டத்தை, தன்னுடைய குறுகிய அரசியல்
லாபத்திற்காக மக்களிடத்தே இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி திட்டத்தை
வரவிடாமலே செய்து பெரும் துரோகத்தை செய்தார். தற்போது அந்த மாவட்ட மக்கள்
கண்ட பயன் என்ன? பொன்னான திட்டம் பறிபோனது தான் மிச்சம்.
சென்னை நகரத்தின் நெரிசலை தவிர்க்கவும்,
வருங்காலத்தில் ஏற்படவிருக்கும்
வளர்ச்சியை எதிர்கொள்ளவும் தொலைநோக்குப் பார்வையுடன் ஏற்படுத்தப்படவிருந்த
சென்னை துணை நகரம் இதே இராமதாஸின் கைங்கர்யத்தால் தான் நழுவிப் போனது. அரசு,
விவசாய நிலங்களை அபகரிப்பதாக ஒரு பொய்யான குற்றச்சாட்டை முன்னிறுத்தி
போராட்டங்களை தொடர்ந்ததினால், இந்த பொன்னான திட்டத்தையும் கைவிட நேர்ந்தது.
தான் சட்டத்திற்கு புறம்பாக தன் பொறியியல் கல்லூரிக்காக ஏராளமாக அரசுக்கு
சொந்தமான நிலங்களை ஆக்கிரமித்துக் கொள்ளலாம். ஆனால், அரசு வளர்ச்சியை கருதி,
முன்னேற்றத்தை எண்ணி நியாமான முறையில் விவசாயிகளிடமிருந்து நிலங்களை
பெறக்கூடாது. யார் எப்படி போனாலென்ன? தான் மட்டும் மகிழ்ச்சியாக இருந்தால்
போதும் என்று செயல்படும் இராமதாஸ் ஒரு மக்கள் தலைவரா?
சமீபத்தில் காலியான இராஜ்யசபா இடங்களில் தன் மகளுக்கு எப்படியாவது ஒரு
இடத்தை பெற்றுவிட வேண்டும் என்பதில் குறியாக இருந்த இவர், கருணாநிதியிடம்
கெஞ்சியும், கூத்தாடியும் பின் முறைத்தும் கோபப்பட்டும் பார்த்தார். என்ன
செய்தும் பருப்பு வேகாததால் மீண்டும் தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு
எதிர்ப்பு காட்டுவதைப் போன்ற நாடகத்தை தொடர்கிறார்.
இராமதாஸைப் பொறுத்தவரை நாடாளுமன்றத்திற்கு நுழைவதெனில் அது பின்வாசல் பாதை
தான். அதாவது மக்களை நேரிடையாக சந்தித்து, தேர்தலில் நின்று, மக்கள்
ஆதரவினால் வெற்றி பெற்று செல்லும் மக்களவையைவிட சட்டமன்ற கட்சி
உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படும் மாநிலங்களவை தான் சிறந்தது. காரணம்,
மக்களவை எப்பொழுது வேண்டுமானாலும் கலைக்கப் படலாம். ஆட்சி கவிழலாம்,
திடிரென தேர்தல் வரலாம். ஆனால் மாநிலங்களவை அப்படியல்ல. ஒரு முறை
தேர்ந்தெடுக்கப் பட்டுவிட்டால் முழு ஆட்சிக்காலத்தில் எந்தவித பிரச்சனையும்
கிடையாது. இராமதாஸின் நரித்தனத்திற்கு வேறு சான்று ஏதாவது வேண்டுமா என்ன?
நடிகர்கள் புகைப்பிடிக்கும் திரைப்படங்களை பார்ப்பது மட்டுமே தன்
அமைச்சகத்தின் பிரதான பணியாக செயல்படும் அன்புமணி, உலக நாடுகளால் தடை
செய்யப்பட்ட பெருமளவு மருந்துகள் இந்தியாவில் மட்டும் எவ்வித கட்டுப்பாடும்
இல்லாமல் தங்கு தடையின்றி இறக்குமதி செய்யப்படுவதையும், உற்பத்தி
செய்யப்படுவதையும் இதுவரை தடை செய்ததில்லை. குறைந்தபட்சம் எச்சரிக்கை கூட
கிடையாது. கோடிக்கணக்கான மக்களின் உயிர் தொடர்பான இந்தப் பிரச்சனையைப் பற்றி
எவ்வித சிந்தனையும் இல்லாமல், எந்த நடிகர் புகைப்பிடிக்கிறார், மது
அருந்துகிறார் எனபதை பார்த்து பின் அவருக்கு எதிராக அறிக்கைவிட்டு சுய
விளம்பரத்தை தேடும் இவர், தமிழக மக்களின் வளர்ச்சிக்காக இதுவரை செய்ததென்ன?
AIMS-நிறுவனத்தின் இயக்குனரை எப்படியாவது பதவியிலிருந்து நீக்கிவிட வேண்டும்
என்பதில் குறியாக இருந்த இவர், தமிழக மக்களுக்காக கடுகளவு கூட எதையும்
செய்துவிடவில்லை. இவரைப் போன்றவர்களால், அமைச்சர் பதவிகள் வீணடிக்கப்பட்டு
வருகின்றன.
பாட்டாளிகளின் வாழ்க்கைத் தரத்தில் இதுவரை எந்த மாற்றமுமில்லை. உழைத்தால்
மட்டுமே உயிர் வாழமுடியும் என்கின்ற அவர்களுடைய நிலையில் எந்த
முன்னேற்றமுமில்லை. ஆனால், அந்த பாட்டாளிகளின் பெயரைக் கூறிக்கொண்டு
செயல்படும் இராமதாஸ், வன்னியர் சாதிச் சங்கத்தின் தலைவர் இராமதாஸ், இன்று
பல கல்லூரிகளின், அடுக்குமாடி குடியிருப்புகளின், வணிக வளாகங்களின்
சொந்தக்காரர். தமிழகத்தின் முதல் பத்து கோடிசுவரர்களில் ஒருவர்.
மக்கள் தலையில் மிளகாய் அரைப்பதில் இவருக்கு நிகர், இவரே. மக்கள்தான் கடந்த
கால சம்பவங்களை நினைவுகூர்ந்து தேர்தல் சமயத்தில் தக்க பதிலடி கொடுத்து
அரசியலை விட்டே துரத்த வேண்டும். |
|