|
|
வணிக மேலாண்மை படிப்பு-ஒரு பார்வை
உலகமயமாக்கலின் விளைவாக இந்திய பொருளாதாரம் மிக அபரிதமான வளர்ச்சியை
கண்டு வருகிறது. பன்னாட்டு நிறுவனங்கள் பலவும் இந்தியாவில்
தொடர்ச்சியாக தம் நிறுவனங்களை நிறுவத் தொடங்கியுள்ளன. பல நூறு
கோடிகளை முதலீடு செய்யும் இத்தகைய உயர் நிறுவனங்களுக்கு திறமையான பல
மேலாண்மையாளர்கள் தேவைப்படுகின்றனர்.
இத்தகைய மேலாண்மையாளர்களுக்கு தரப்படும் சம்பளம் கற்பனையைத் தாண்டியதாக
இருக்கிறது. ஆண்டொன்றுக்கு சுமார் 1 கோடி வரை கொடுக்கப்படும்
நிகழ்வுகள் இங்கு சர்வ சாதாரணம். வாழ்க்கையை அப்படியே மாற்றி
அமைத்துவிடும் இத்தகைய உயர் பதவிகளுக்கு தற்போது அதீத வரவேற்பு மற்றும்
போட்டி மாணவர்களிடையே உருவாகியுள்ளதில் ஆச்சரியமொன்று மில்லை.
மேலாண்மைக் கல்வியை தற்போது அனைத்து வீதி கல்வி நிறுவனங்களும்,
பல்கலைக்கழகங்களும் வழங்கி வருகின்றன. இத்தகைய உப்புமா கல்வி
நிறுவனங்களிலும், பல்கலைக்கழகத்திலும் படித்தீர்களேயானால், உங்கள் வேலை
(ம) வாழ்க்கை அதோ கதி தான்.சாதாரண ரூ. 4000 வேலை கூட உங்களுக்கு
கிடைத்தாலே ஆச்சரியம் தான். எனவே மேலாண்மைக் கல்வியை தேர்ந்தெடுக்கும்
போது அதிகபடியான கவனத்தை மேற்கொள்ள வேண்டியது கட்டாயமாகிறது. உயர்
மேலாண்மை கல்வி நிறுவனங்களில் படிப்பதினால் மட்டுமே உயர்ந்த சம்பளம்,
உயர்ந்த வாழ்க்கை முறை என அனைத்தும் சாத்தியமாகும்.
இந்தியாவில் இத்தகைய உயர்கல்வி மேலாண்மை நிறுவனங்கள் பலவும் உள்ளன.
உலகத்தரத்தில் வழங்கப்படும் இக்கல்விக்கு பலத்த போட்டி காணப்படுகிறது.
இந்நிறுவனங்களில் இடம் கிடைத்துவிட்டாலே போதும், உங்கள் வாழ்க்கை
தலைகீழ் மாற்றம் தான். இந்த மாற்றம் எல்லோருக்கும் சாத்தியமாக்கிட
வழிகாட்டும் முயற்சிதான் இந்தக்கட்டுரை.
தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைகழகத்திலிருந்து பெறப்பட்ட இளங்கலை பட்டமே
போதுமானது. 50% பெற்று தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியமானது. இறுதியாண்டு
மாணவர்கள் கூட தேர்வு எழுதலாம். இவர்கள் சேரும் போது தேர்ச்சி
பெற்றிருப்பதற்கான சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். இந்திய
தொழில்நுட்ப கழகத்தில் பயிலுவதற்கான தகுதி, இளங்கலை பொறியியல்/தொழில்நுட்ப
ஆகும்.
தேர்வு முறை: 1. நுழைவுத்தேர்வு:
எல்லா வணிக மேலாண்மை கல்வி நிறுவனங்களும், நுழைவுத்தேர்வினை மாணவர்களை
தேர்ந்தெடுப்பதற்கான முதல் நிலையாக கொண்டுள்ளன. மாணவரின் திறமையினை
பரிசோதிக்கும் விதமான இத்தேர்வுகள் மிகக் கடினமாகவே இருக்க்கின்றன.
கணித அறிவு, ஆங்கிலப்புலமை, நுண்மான் நுழைப்புலமை போன்றவற்றை
பரிசோதிக்கும் வினாக்களே அதிகம் காணப்படுகின்றன. சில மேலாண்மை கல்வி
நிறுவனங்கள் பொது அறிவு தொடர்பான கேள்விகளும் கேட்பதுண்டு.
பெரும்பான்மையான மாணவர்களை இம்முதல் நிலையிலேயே வடிகட்டிவிடுகின்றனர்.
1,40,000 மாணவர்களில் வெறும் 10,000 மாணவர்களே உயர் மேலாண்மை கல்வி
நிறுவனங்களில் இடம் பிடிக்கின்றனர்.
2. கட்டுரை (ம) சான்று கடிதங்கள் உயர் மேலாண்மை கல்வி நிறுவனங்கள், எழுத்துத் தேர்வில் வெற்றி
பெற்றவர்களை விண்ணப்ப படிவத்துடன் சில கட்டுரைகளையும் எழுதி அனுப்ப
பணிக்கின்றன. இவற்றை அடிப்படையாகக் கொண்டே மாணவர்களை குழு
விவாதத்திற்கும், நேர்காணலுக்கும் அழைக்கின்றன.
3. குழு விவாதம் மற்றும் நேர்காணல்:
நுழைவுத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில், குழு விவாதம் மற்றும்
நேர்காணலுக்கு மாணவர்கள் அழைக்கப்படுகின்றனர். இந்திய மேலான்மை
நிறுவனத்தைப் (IIM) பொறுத்தவரை தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து
மாணவர்களும் இவ்விரு நிலைகளிலும் அனுமதிக்கப்படுகின்றனர். மற்ற
நிறுவனங்களில் இவ்விரு நிலைகளிலும் வடிகட்டுதல் இருக்கின்றது.
4. மாணவர் சேர்க்கை அனைத்து நிலைகளிலுமான (எழுத்துத் தேர்வு, குழு விவாதம் மற்றும்
நேர்காணல் ) மொத்த மதிப்பெண் அடிப்படையில், மாணவர் சேர்க்கை
நடைபெறுகின்றது. தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கான சேர்க்கை விபரங்கள்,
மார்ச் இரண்டாம் வாரத்திலிருந்து ஏப்ரல் கடைசி வரை தொடருகின்றது.
நுழைவுத்தேர்வு வகைகள்: பொது நுழைவுத்தேர்வு (Common Admission Test)
இத்தேர்வு தான் அனைத்து மேலாண்மை தேர்வுகளுக்கும் தாய் எனலாம். விளையாட்டு
வீரருக்கு ஒலிம்பிக் எப்படியோ, கிரிக்கெட் வீரருக்கு உலகக் கோப்பை
எப்படியோ, அப்படி போன்றது மேலாண்மை பயில விரும்பும் மாணாக்கருக்கு
இத்தேர்வாகும். இந்திய மேலாண்மை நிறுவனத்தால் ( IIM ) நடத்தப்படும்
இத்தேர்வு, தற்போது பல நிறுவனங்களும் தம் மாணவர் சேர்க்கைக்கு
பயன்படுத்திக் கொள்கின்றன. இத்தேர்வில் பெரும்பாலும் கீழ்க்காணும்
பகுதிகளிலிருந்தே கேள்விகள் கேட்கப்படுகின்றன.
- Verbal Ability and
Reasoning
- Reading Comprehension
- Analytical and Logical
Reasoning
- Quantitative Aptitude
- Data Interpretation
இத்தேர்வைப் பொறுத்தவரை மாற்றம் என்பது தான் மாறாதது. ஆம், ஒவ்வொரு
ஆண்டும் தேர்வு முறையில் பல மாற்றங்களை அறிமுகப்படுத்துவதினால்,மாணவருக்கு
ஆச்சரியம் (அதிர்ச்சி) நிச்சயம் காத்திருக்கிறது. வினா எண்ணிகை, கால அளவு,
வினா வகை, எதிர்மறை மதிப்பெண் என பல மாற்றங்கள் இருக்கக்கூடும். இத்தேர்வு
பெரும்பாலும் நவம்பர் (அ) டிசம்பர் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமை நடைபெறும்.
இத்தேர்வைப் பொறுத்தவரை அனைத்துப் பகுதிகளிலும் ஒரு குறிப்பிட்ட
மதிப்பெண்ணை கட்டாயம் பெற வேண்டும். கணிதப்பகுதியில் 50/50 பெற்றுவிட்டு
ஆங்கிலப்பகுதியில் அந்த குறிப்பிட்ட மதிப்பெண்ணை பெறவில்லையெனில் அவருக்கு
நேர்காணலுக்கான அழைப்பு அனுப்பப்பட மாட்டாது. இத்தேர்வுக்கு தயாராவதினால்
90% மற்ற தேர்வுகளுக்கும் தயாராகலாம்.
-தொடரும் |
|