நான் கண்ட தலைவன்
தமிழக இளைஞர்களை சரியான பாதையில் தரணி போற்றும்
விதத்தில் வழிநடத்திடச் செய்ய இயலும் தலைவர் ஒருவர் உண்டெனில் அவர் வைகோ
தான் என்பதில் எதிரிக்கும் கூட மாற்றுக்கருத்து இருக்காது. தமிழக
இளைஞர்களின் விடிவெள்ளி வைகோ தான் என்றால் அது மிகையாகாது.
மெத்தப் படித்த, களம் பல கண்ட வைகோ அவர்களின் சொல்வண்ணம் அளப்பற்கரியது.
அவரின் சொல்லாற்றல், அதனை எடுத்தியம்பிடும் தன்மை வார்த்தைகளால் விவரிக்க
இயாலாதொன்று. ஒரு சிறந்த பொற்கொல்லரைப் போன்று வார்த்தைகளை
கோர்வையாகவும் மிகச் சரியாகவும் பயன்படுத்தும் பாங்கு, கோடானு கோடி
இளைஞர்களை அவர்பால் ஈர்ப்பது இயல்பே. அவரின் நினைவாற்றல் அனைவரையும்
பிரமிக்கச் செய்கிறது. அவருடைய நினைவாற்றல் கணிப்பொறிக்கு நிகரானது என்பதே
சாலத்தகும்.

மெத்தப்படித்த, அறிவிற் சிறந்த, திறமையான, ஆளுமைமிக்க தலைசிறந்த நிர்வாகியே
மக்களை நடத்திச் செல்லத் தகுந்த அரசியல் தலைவராவார். ஆனால் இத்தகைய குணங்கள்
யாவும் ஒரே தலைவரிடத்து காண்பது மிகவும் அரிது. ஆம் வைகோ போன்ற தலைவர்களை
காண்பதும் அரிது தான். திராவிட இயக்கத்தின் தொடக்கத்திலிருந்தே அதில்
முழுமையாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டு மக்களுக்காகவே தன்னை முழுமையாக
அர்ப்பணித்துக் கொண்ட அருட்பெருந்தலைவர் வைகோ என்பதை தமிழகமும்,
தமிழுலகமும் என்றும் மறவாது.
பல சாதனைகளை கடந்து வந்துள்ள மாபெரும் தலைவர், அவற்றைப் பல இன்னல்களை
எதிர்கொண்டு தான் படைத்துள்ளார் என்பதினால் இளைஞர்களுக்கு அவர் ஓர்
தலைசிறந்த உதாரணப்புருஷன் ஆகிறார்.
தாங்கவொணாத துன்பங்களையே தம் படிக்கல்லாக்கி, தாம் மேற்கொண்டுள்ள்
பாதையில் மிக வேகமாக பயணித்து வரும் அற்புத மனிதரின் தலைமையில் இயங்கி வரும்
மதிமுக, தமிழகத்தில் இன்னமும் வலுவாக கோலோச்சாதது துரதிருஷ்டவசமானது.
தங்களை மறுவரையறை செய்துகொள்ள வேண்டிய மறுசீரமைப்பு செய்துகொள்ள வேண்டிய
கட்டாய நிலைமைக்கு தற்போது மதிமுக தள்ளப்பட்டுள்ளது என்றே எண்ண
வேண்டியுள்ளது.
ஏராளமான புத்தகங்களை எழுதியுள்ள மாண்புமிகு வைகோ அவர்களின் "சிறையில்
விரிந்த மடல்கள்" என்னை கடுமையாக தடுத்தாண்டு கொண்டுவிட்டது என்றே
சொல்லலாம். ஒவ்வொரு இந்திய இளைஞனும் தம் வாழ்வில் கட்டாயம் படிக்க
வேண்டிய புத்தகமிது. பல சரித்திர நிகழ்வுகளை, வாழ்க்கை அனுபவங்களை
நினைவுகூறும் இப்புத்தகத்தினால், நம் வாழ்க்கை மேலும் பண்பு(ப)டையதாகிறது.
மனிதன் எவ்வளவு வலிமையானவன் என்பதையும், இன்னல்களே வாழ்க்கையாகிவிட்ட
போதிலும் மன உறுதி இருப்பின் அவையாவும் தீக்கிரையாகிவிடுகின்றன என்பதை
தக்க வரலாற்று சான்றுகளுடன் எடுத்தியம்பியதன் மூலம், இந்திய இளைஞகர்களுக்கு
அவர், இதுவரை எவரும் வழங்கிடாத அறிவுப்பெட்டகத்தை, வாழ்க்கை திறவுகோலை
தந்துள்ளார். வைகோ அவர்களின் கனவு விரைவில் நினைவாகும். தமிழகம் ஒளி பெறும்.
|