Can't view the contents correctly? Click Here >>

மூன்றாம் நிலையிலிருந்து

அடையாளமற்ற நிலையிலிருந்து மனிதன் தன்னைத்தானே காண்பது தான் மூன்றாம் நிலை. நான், நீ என்ற முகவரியில்லாத அத்தகைய தன்மையற்ற இடத்திலிருந்து தனக்குச் சிறிதும் தொடர்பில்லாத நிலையிலிருந்து, தன் செயல்பாடுகளை ஊன்றிக் கவனிப்பதுதான் மூன்றாம் நிலை.
 

விழிப்புணர்வற்ற நிலையிலேயே பிறந்து, வாழ்ந்து, வீழ்ந்துவிடும் மிருகத்தன்மைக்கும் கீழ் நிலையிலான வாழ்க்கையிலேயே பெரும்பாலனவர்கள் மடிந்துவிடுகின்றனர். இத்தகைய பரிதாபத்துக்குரியவர்களின் பட்டியலிலிருந்து உங்களை விலக்கி வேறுபடுத்திக் கொள்ளுங்கள். பேரானந்தத்தை முழுவதுமாக உணர்ந்து இறைத்தன்மையில் இயங்கச் செய்வதுதான் மூன்றாம் நிலை.

மாறுபட்ட தன்மையிலிருந்து செயல்படும் போது, உலகம் மிகவும் புதுமையானதாக காணப்படத் தொடங்குகிறது. இயற்கையையும் உங்களையும் பிரித்திட இயலாமல் எல்லாம் எல்லாமுமாக, எவிவித வேற்றுமையும் இல்லாமல் அனைத்தும் ஒன்றே என்கின்ற உண்மை நிலையை அறிய முடிகின்றது.

அடையாளமற்ற நிலையிலிருந்து செயல்படுவதினால், வாழ்க்கையின் எவ்வித துன்பமும் நம்மை சிறிதளவும் பாதிக்காது, உயர்வு-தாழ்வு, இன்பம்-துன்பம் போன்ற இரு நிலைகள் கொண்ட எதார்த்த வாழ்க்கையில் நம்மை முழுவதுமாக ஈடுபடுத்திக் கொண்டு, செயல்படுவதினால் தான் துன்பம் மிகுந்த வாழ்க்கை மனித வாழ்க்கையே என்று எண்ணம் உருவாகிவிடுகின்றது. இதற்கு மன முதிர்ச்சி/பக்குவமின்மையே காரணம். தெளிவற்ற நிலையிலிருக்கும் போது, மனம் மிக அதிகமாக சஞ்சலப்படுகினறது. சஞ்சலமான மன நிலை வாழ்க்கையை மிக இறுக்கமாக மாற்றிவிடுகின்றது.

உங்களிலிருந்து விலகி, மூன்றாவது நபராக இருந்து, உங்கள் நடவடிக்கைகளை தொடர்ந்து பார்த்து வாருங்கள். எத்தனை அபத்தமான, பொய்யான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறீர்கள் என்பதை உணர்வீர்கள். வாழ்க்கையின் பெரும் பகுதி வெறும் கற்பனையிலும், கடந்தகால நினைவுகளிலுமே செலவழிந்துவிட்டதை உங்களால் மறுக்க முடிகிறதா? காரணம் என்ன? வாழ்க்கையில் முழுதும் ஒன்றிப்போய்விட்டீர்கள். சிறு சிறு பிரச்சனைகளை தீர்ப்பதிலேயே முழு வாழ்க்கையையும் மூழ்கடித்து விட்டு, இறுதியில் அந்த பிரச்சனைகளிலேயே மடிந்தும் விடுகிறீர்கள்.

தற்கொலை முயற்சிகளில் ஈடுபடாதவர்கள், குறைந்தபட்சம் அந்த எண்ணத்தை வாழ்நாளில் ஒரு கணமாவது எண்ணிப்பார்க்காதர்கள் உங்களில் எத்தனை பேர்? மனித வாழ்க்கை அத்தனை பயங்கரமானத என்ன நம்மை நாமே மாய்த்துக்கொள்ள?

அற்புதமான இந்த மனித வாழ்க்கை, பேரானந்தத்தின் உறைவிடமான இந்த மனித வாழ்க்கை உங்களுக்கு கிடைத்த அரிய பரிசு. அதனை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். இன்னொருமுறை கிடைத்திடாத இந்த பரிசினை முழுமையாக அனுபவியுங்கள். ஒவ்வொரு கணத்தையும் ரசியுங்கள். எவ்வித பிரச்சனையும் உங்களை பாதிக்காத மூன்றாம் நிலையிலிருந்து வாழ்க்கையை காணத் தொடங்கும்போது துன்பம் என்ற பேச்சுக்கே இடமிருப்பதில்லை.

ஆர்ப்பாட்டமான சூழ்நிலையில் நீங்கள் இருந்தாலும், அந்த ஆர்ப்பாட்டத்தை அனுபவித்தாலும் உங்கள் மனம் எப்போதும் அமைதி நிலையிலேயே இருப்பதை உணர்வீர்கள்.அதே மாதிரி, துன்பமயமான சூழ்நிலையிலும் உங்கள் அமைதியான மனநிலையில் எவ்வித மாற்றமும் இருக்காது.

இது ஒரு செயற்கையான போலித்தனமான வாழ்க்கை என்கிற வாதத்தை முன் வைக்கிறீர்களா? ஆரம்பத்தில் அப்படித்தான் தெரியும். மெல்ல மெல்ல அதன் பலத்தை உணர்வீர்கள். கோபத்தில் அறிவிழந்து செயல்படுவது இனி நடக்காது. ஏனெனில் உங்கள் மனதில் கோபமிருப்பதில்லை. தெளிந்த மனத்தில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும், செய்யும் ஒவ்வொரு செயலும் புத்திசாலித்தனமாகத்தான் இருக்கும் என்பதை என்னால் உறுதியாக கூற முடியும்.

அகந்தை, கர்வம், இறுமாப்பு போன்றவையெல்லாம் இப்போது நகைச்சுவையாக தெரிகிறதா? ஆம், நீங்கள் மூன்றாம் நிலையிலிருந்து செயல்படத்தொடங்கிவிட்டீர்கள்.

 

free hit counters
பதிப்புரிமை © TAMILCAFE. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை / IP கொள்கை 
Disclaimer: This site does not store any files on its server. We only index and link to content provided by other sites.