|
|
அறியாமை ஒரு வரம்
இன்று மனிதர்களிடையே மகிழ்ச்சி இல்லை.
எவ்வளவு வசதிகள் இருப்பினும் மனிதன் வாழ்க்கையை சுமையாகத் தான் கடத்துகிறான்.
அறிவு முதிர்ச்சி பெற்றவர்கள் இன்னும் சற்று அதிகமாகத்தான் வாழ்க்கையை
கடத்தகிறார்கள் எல்லோரும் வாழ்க்கையில் தாம் மீண்டும் குழந்தையாக மாறிவிட
மாட்டோமா? என்று ஏங்குகின்றனர்.
குழந்தையாக இருந்தபோது நம்மிடத்தே இருந்த மகிழ்ச்சி சந்தோஷம் இன்று இல்லை.
நாம் கற்ற கல்வி தெரிந்து கொண்ட விஷயங்கள் ஒரு விதமான அச்ச உணர்வையும்
தேக்க நிலையையும் தான் ஏற்படுத்தியுள்ளன.
ராகுகாலம், எமகண்டம் போன்றவை தற்போது புத்துணர்வு பெறத் தொடங்கியுள்ளன
போலும், மெத்தப் படித்தவர்கள் கூட இன்று, இவற்றையெல்லாம் பார்க்காமல்
எதனையும் செய்வது கிடையாது. பகுத்தறிவு பாசறையிலிருந்து வந்ததாக பீற்றிக்
கொள்ளும் அவர்கள் கூட இதில் விதி விலக்கு கிடையாது.
பலரும் இன்று ராசிபலன் பார்க்காமல் அன்றைய தின வாழ்க்கையையே தொடங்குவதே
கிடையாது. ஏராளமான பத்திரிக்கைகள் ஆன்மீகம் என்கின்ற பெயரில் பீதியையும்
வளர்த்து வருவதில் பெரும் பங்காற்றுகின்றன.
புதுப்புது கற்பனைக் கதைகளை கட்டவிழ்த்து விடும் இத்தகைய பத்திரிக்கைகளை
அதிகம் வாங்குவது பெண்கள் தான் என்பது மிகுந்த வருந்தத்தக்கது. உண்மையிலேயே
நம்புகிறார்களோ என்னவோ, வெற்று விளம்பரத்திற்காக பக்கத்து, எதிர்
வீட்டுக்காரர்களிடம் தம்பட்டம் அடித்துக் கொள்ளவாவது இத்தகைய
பத்திரிக்கைகளை வாங்குகின்றனர். பத்திரிக்கைகளும் இவர்களுக்கு தீனி
போடுவதற்கென்றே ஒன்றுக்கும் உதவாத தகட்டையும், காசி தீர்த்தம் என்கின்ற
பெயரில் ஏதோ ஒரு திரவத்தையும் அளித்து மக்கள் தலையில் மிளகாய் அரைத்து
விடுகின்றனர். காலணா பெறாத இத்தகைய பத்திரிக்கைகளை படிப்பதினால் அவர்கள்
தெரிந்து கொண்டது அடிப்படையற்ற நம்பிக்கைகளும், அச்ச உணர்வும் தான்.
ஒரு நிமிடம் சிந்தித்துப்பாருங்கள். இந்த ராகுகாலம், எமகண்டம், நல்லநேரம்,
ஜாதகம் மற்றும் வாஸ்து போன்றவற்றை தெரிந்து கொண்டவர் நிம்மதியாக
இருக்கிறாரா அல்லது தெரிந்தவர் நிம்மதியாக இருக்கிறாரா?
பணியொன்றுக்கு அவசரமாக செல்ல வேண்டும் செல்லும் போதுதான் நினைவுக்கு
வருகிறது அது ராகுகாலமென்று இனி உங்களிடையே உற்சாகம் எப்படி இருக்கும்?
அந்தப்பணி பற்றிய ஆர்வம் எப்படி இருக்கும்? பணியை தொடங்குவதற்கு முன்பே
நீங்கள் உங்களுக்கு தடைக்கல்லை போட்டுக் கொண்டு விட்டீர்கள் அல்லவா?
அப்படியே தொடங்கினாலும் சந்தேக உணர்வுடனும், ஈடுபாடு இல்லாமலும்தான்
செயல்படுகீறீர்கள் இல்லையா?
இவற்றைப்பற்றியெல்லாம் தெரியாதவர்கள் மிகவும் சந்தொஷமாக இருக்கிறார்கள்.
அவர்கள் மேற்கொள்ளும் பணியும் வெற்றி பெறுகின்றன.
ஏதோவொரு பைத்தியக்காரன் கூறிய தன் கற்பனையில் தோன்றிய உளறல்களை இன்னும்
ஏன் கெட்டியாக பிடித்துக் கொண்டிருக்கீறீர்கள்? விட்டுத் தள்ளுங்கள் தூர
எறியுங்கள். அந்தக் குப்பையை அதைப்பற்றியதான அறியாமை உங்களை என்றுமே
மகிழ்ச்சியாக வைத்திருக்கும் வாழ்க்கை என்றும் உங்கள் கட்டுப்பாட்டில்
இருக்கும் பாருங்கள் அறியாமை எவ்வளவு இனிமையானதென்று
நடைமுறைப்படுத்திடுங்கள், வாழ்க்கை மென்மேலும் இனிக்கும்.
போட்டி இருக்கிறதோ இல்லையோ, நிச்சயம் பொறாமை இருக்கிறது. எல்லா
இடத்திலேயும் ஒருவரை வீழ்த்த ஒருவர் எப்பொழுதும் குறியாக இருக்கின்றனர்.
சந்தர்பத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். இறைவனைக் கூட
சந்தித்து விடலாம். ஆனால் கள்ளம் கபடமற்ற மனிதர்களை சந்திப்பதென்பது நடவாத
காரியம்.
சூது, சதி, வஞ்சம், பொய், புரட்டு, ஏமாற்று வேலை, களவு, காட்டிக்கொடுத்தல்,
கயமை போற்றவற்றிலெல்லாம் மனிதன் இன்று மிகத்தேர்ச்சி பெற்று விட்டான். ஆம்,
அதில் முனைவர் பட்டம் கூட பெற்றுவிட்டீர்கள் என்றால் அது மிகையாகாது.
வாழ்க்கையின் அடிப்படைத்தத்துவமான அன்பைப்பற்றி அறிந்து கொள்கிறார்களோ
இல்லையோ, மேற்கூறியவற்றையெல்லாம் வெகு விரைவில் தெரிந்து கொண்டு
விடுகின்றனர். இறுக்கமான மனநிலையிலேயே மனிதன் தன்னுடைய 85% விழுக்காடு
வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கிறான். அவனுடைய அறிவு வளர வளர, அவனுடைய
சூழ்நிலை, நட்பு வட்டம், சமுதாய அந்தஸ்து, பணம், பழக்கம் போன்றவையும் வளர
வளர தன்னுடைய இந்ந நிலையைத் தக்க வைத்துக்கொள்ள அவன் சிலபல கயமைத்தனங்களை
செய்ய வேண்டியது கட்டாயமாகிறது.
எதிர்மறையான எண்ணங்களை அறியாதவர்கள் வாழ்க்கையை ஆனந்தமாக கழிக்கின்றனர்.
மற்றவர்கள் எல்லோரும் ஒரு விதமான அழுத்தமான மனநிலையிலேயே கழிக்கின்றனர்.
அறியாமை நிச்சயமாக ஒரு வரம்தான்.
|
|