|
|
புரட்சி நீடுழி வாழ்க
புரட்சி பற்றி, நான் படித்த புத்தகமொன்றின் நினைவுக்
குறிப்பேட்டிலிருந்து.....
புரட்சிக்காரன் என்பவன் பழி தீர்த்துக்கொள்ளும் பயங்கரவாதியல்ல. அவன்
பிறக்கப் போகும் புதிய சமுதாயத்துக்கான மருத்துவச்சி. அவனது ஓங்கிய
வாளுக்கு கீழே 'நாளை' நம்பிக்கையுடன் வளர்கிறது. மரணத்திலும் கூட
புரட்சிக்காரன் புதைக்கப்படுவதிலை; விதைக்கப் படுகிறான். புரட்சிக்காரர்கள்
வெறும் முரடர்கள் என்றும் ,மனித உயிர்களைப் பற்றிக் கவலைப்படாத கல்நெஞ்சினர்
என்றும் மக்கள் மத்தியில் ஒரு கருத்து நிலவுவது வருத்தத்திற்குரியது. தனி
மனிதக் கொலைகளில் நம்பிக்கைகொண்ட பயங்கரவாதியல்ல அவர்கள்; சுரண்டல் சமூக
அமைப்பை எதிர்த்துப் போராடும் புரட்சிக்காரர்கள்.
இன்றைய நிலையில் இந்தக் குரலுக்கு மிகத்தவறான பொருளைக் கற்பித்தும்
போதித்தும் வருகின்றனர், வந்துள்ளனர்.
இந்தக்
குரலை உருவாக்கியது ரஷ்யப் புரட்சி இயக்கங்கள். புகழ் பெற்ற சமூக
எழுத்தாளரான உப்டன் சிங்லேர் (Uptain Sinclair) தன்னுடைய நாவல்களில்,
சட்டத்தை மீறும் புரட்சிப் பாத்திரங்களின் மூலம், இக்குரலை
பயன்படுத்தியுள்ளார். ரத்த ஆறு ஓட வைக்கும் போராட்டங்கள், எப்போது
தொடரவேண்டும் என்றோ, சிறிது காலத்துக்கு கூட எதுவும் நிலையாக இருக்கக்
கூடாதென்றோ, இக்குரல் ஒரு நாளும் பொருள் தராது. இலக்கணப்படியும்,
சொல்லாராய்ச்சிப்படியும், இக்குரலை மிக நியாயப்படுத்த முடியாமல் போகக்
கூடுமெனினும், நெடுநாள் வழக்கில் இருந்து வருவதன் மூலம், இது ஒரு
முக்கியத்துவத்தைப் பெற்றிருப்பதுடன், இதனுடன் தொடர்புள்ள
கருத்துக்களிடமிருந்து பிரித்துவிட இயலாததாகவும் உள்ளது. இத்தகைய
முழக்கங்கள் எல்லாம், காலப் போக்கில் பெறப்பட்ட ஒரு பகுதியின் மூலமும்,
பிரிக்க முடியாமல் அதனுள் பொதிந்து கிடக்கும் இன்னொரு பகுதியின் மூலமும்,
ஒரு பொதுவான கருத்தை உணர்த்துகின்றன.
'புரட்சி' என்ற வார்த்தையை அப்படியே சொல்லுக்குச் சொல் என்னும்
முறையில் ஒருவரும் மொழிபெயர்க்கக் கூடாது. சரியான முறையிலோ, தவறான
முறையிலோ இதனைப் பயன்படுத்துவோரின் விருப்பங்களுக்கு ஏற்ப பலவகையான
பொருள்களும், முக்கியத்துவங்களும் இச்சொல்லுக்குக் கூறப்பட்டுள்ளன.
சுரண்டலின் பெயர் பெற்ற தரகர்கள், இதனை ரத்தத்தை உறையவைக்கும் கொடூரமாகக்
கற்பனையில் உணருகின்றனர். புரட்சியாளர்களுக்கோ இது ஒரு புனிதமான தொடராக
உள்ளது.
"எப்படியும்--எந்தச் சூழ்நிலையிலும் வன்முறை தவிர்க்கப்பட வேண்டுமென்று
கூறுவது கற்பனாவாதமாகும்; நடைமுறைக்குகந்ததல்ல."
புரட்சி
என்பது ரத்த ஆறு பெருக்கெடுக்கும் ஒரு போராட்டத்தை உள்ளடக்கித்தான் இருக்க
வேண்டும் என்னும் அவசியமில்லை. அது ஒன்றும் வெடிகுண்டு மற்றும்
துப்பாக்கிகளுக்கான துதி இல்லை. குறிக்கோளை அடைவதற்கு, அவை சில வேளைகளில்
வெறும் வழிகளாக அமைவதுண்டு. சில இயக்கங்களில் அவை இன்றியமையாத இடங்களைப்
பெற்றுள்ளன என்பதில் சந்தேகமில்லை என்பதால், அந்தக் காரணத்தினாலேயே, அது
எப்போதும் அப்படித்தான் என்று ஆகி விடாது. கலகம் எல்லாம் புரட்சி இல்லை.
இறுதியாக அந்த முடிவுக்கு செல்வதாக வேண்டுமானால் இருக்கலாம்.
மேம்பாட்டுக்கான மாற்றத்தைக் குறித்த விருப்பமே, அத்தொடரில்
பயன்படுத்தப்பட்டுள்ள 'புரட்சி' என்ற சொல் மூலம் வெளிப்படும் உணர்வாகும்.
பொதுவாகவே, நிலைபெற்றுவிட்ட விஷயங்களோடு பழகிப் போய்விட்ட மக்கள்,
மாற்றங்களை நினைத்துப் பார்ப்பதென்றாலே நடுங்கத் தொடங்கிவிடுகின்றனர்.
இத்தகைய சோம்பல் மிகுந்த உணர்வுகள்தான், புரட்சி உணர்வுகளால் இடம் பெயரச்
செய்ய முடியும். செய்ய வேண்டும். இல்லையெனில், கீழ்மட்டத்தினரின் கைகள்
உயர்ந்து, மனித குலம் முழுவதையும், பிற்போக்குச் சக்திகள் தவறான பாதையில்
செலுத்திவிடும். அத்தகைய நிலைகள், மனித குல முன்னேற்றத்தை முடமாக்கி, ஒரு
தேக்க நிலைக்கு வழிகாட்டும். மனித இன உயிர்ப்பின் முடிவற்றப் முன்னேற்றப்
பாதையைப் பிற்போக்குச் சக்திகள் தடுக்கும் அளவிற்கு வலுப்பெற்று விடாமல்,
புரட்சிகர உணர்வு ஊடுருவியாக வேண்டும். புதியனவற்றிற்கு இடம் கொடுத்து,
என்றும் எப்பொழுதும், பழைய அமைப்புகள் மாறுவதன் மூலமாகவே, ஒரு "நல்ல"
அமைப்பு உலகைச் சுரண்டாமல் இருக்க முடியும்.
|
|