|
|
மருத்துவர் திவ்யாவின் மரணம்- ஒரு முன்னுதாரணம்
பெரும் பரபரப்பையும், சர்ச்சையும் ஏற்படுத்திக் கொண்டிருந்த ஓமியோபதி
மருத்துவர் திவ்யா, இறுதியில் தற்கொலை செய்துகொண்டு தம் வாழ்க்கையை
முடித்துக்கொண்டுவிட்டார். மருத்துவரே நோயாளியாக, மனநிலை பாதிக்கப்பட்டவராக
தன் அறியாமைத்தனத்திற்கு பலியாகிவிட்டார். வெறும் காமம் மட்டும் அவர் கண்களை
மறைத்து விட்டது என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தவறான் சேர்க்கை,
தவறான திருமணம். எப்படியோ அவர் இன்று உலகில் இல்லை. இன்னும் சில நாட்கள்
பத்திரிக்கைகள் அவரைப் பற்றிய செய்திகளை வெளியிட்டுவிட்டு, வேறு அப்போதைய
பரபரப்பான செய்திக்கு தாவி, தன் ஜனநாயக கடமையை வழக்கம் போல
தொடங்கப்போகின்றன. ஆனால், திவ்யாவின் தற்கொலை மரணம், இவ்வுலகத்திற்கு ஒரு
முன்னுதாரணம். அதுமட்டுமல்ல, நல்ல படிப்பினையும் கூட. பெற்றோர்களுக்கும்,
அவர்களது குழந்தைகளுக்கும் இந்தச் சம்பவம் பல பாடங்களை கற்றுத் தருகிறது.
இருபத்தோராம்
நூற்றாண்டிலும் குறி சொல்லுதல், உச்சி வேளை பூஜை, நிர்வாண பூஜை என்று
உளரிக்கொண்டு திரியும் திருட்டு ஆசாமிகளை இன்றும் நாடும் பெற்றோர்களுக்கு
திவ்யாவின் மரணம் ஒரு எச்சரிக்கைச் செய்தி. சாதாரண தேநீர்க் கடை நடத்தி
வந்த ஒருவர் திடிரென குறி சொல்லுதல், பேய் ஓட்டுதல் போன்ற நடவடிக்கைகளில்
ஈடுபடுகிறார். அவரை ஒரு கூட்டம் முன் மொழிகிறது. பணம் திரட்டுகிறது. கூடாரம்
அமைக்கிறது அந்த திருட்டுக் கூட்டம். படித்தவர், படிக்காதவர் என்ற
பாகுபாடுமில்லாமல் மக்கள் யாவரும் அந்த திருட்டுக் கூட்டத்திடம் அடைக்கலம்
புகுகிறது. இப்படித்தான் திவ்யாவின் தந்தை போஜராஜ் போலி சாமியார்
பழனிச்சாமியை அடிக்கடி சந்திக்க சென்று வந்துள்ளார். கூட திவ்யாவும். விளைவு,
திவ்யாவின் தவறான உறவு, திருமணம். இறுதியில் மரணம்.
பாமர மக்களும், வெகுஜன மக்களும் தம் அறியாமை இருளிலிருந்து இனியாவது வெளிவர
வேண்டும். வெறும் நம்பிக்கையின் அடிப்படையிலான செயல்களை விட்டொழிக்க
வேண்டும். குறைந்தபட்சம் தம் குழந்தைகளையாவது அதில் ஈடுபடுத்தாமல் இருக்க
வேண்டும். இன்று திவ்யாவின் மரணம் அவர்களது பெற்றோர்களுக்கு பேரிடி.
ஈடுசெய்ய இயலாத இழப்பு. மனதைவிட்டு நீங்காத அந்தத்துயரம் காலத்தால் கூட
மாற்றவியலாதது. மறக்கவியலாதது. 24-ஆண்டுகள் காலம் கண்ணின்மணி போல சீராட்டி
பாராட்டி வளர்த்து வந்த அந்தப் பெற்றோரின் மனநிலையை நினைத்துப் பார்க்க
வேண்டும். திருமணத்திற்குப்பின், தம் குழந்தைகள் மட்டுமே உலகமாக வாழும்
பெற்றோர்களுக்கு, இந்தக் குழந்தைகள் அளிக்கப் போகும் பரிசுயென்ன?
செய்யப்போகும் கைமாறு என்ன? ஒவ்வொரு நிமிடமும் தம் குழந்தைகளைப் பற்றியும்,
அவர்களது எதிர்காலத்தைப் பற்றியும் சிந்தித்த வண்ணமாகவே இருக்கும்
பெற்றோர்கள், ஊரிலிருந்து புறப்பட்டுவிட்ட தம் மகள்/மகன் இன்னும் வீடு வந்து
சேரவில்லையே என்ற கலக்கத்தில் வாசலிலேயே காத்திருக்கும் பெற்றோர்கள் எத்தனை
எத்தனை பேர்?
ஒரு சிறு துன்பமும் தம் குழந்தைகளுக்கு ஏற்பட்டுவிடக் கூடாது எனப்திலேயே
குறியாக இருக்கும் இந்தப் பெற்றோர் செய்யும் தியாகங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. இவை
யாவற்றையும் பெற்றோரின் பார்வையிலிருந்து மகன்/மகள் சிந்திக்க வேண்டும்.
இப்படி எத்தனை கஷ்டங்கள் வந்தாலும் சகித்துக் கொண்டு, பொறுத்துக் கொண்டு
மகன்/மகள் வளர்ச்சி தான் முக்கியம் என்று செயல்படும் பெற்றோர்களுக்கு
எதிராக செயல்படும் குழந்தைகளே ஒரு நிமிடம்.
காதல் எனும் மாறுவேடத்தில் தொடங்கும் இனக்கவர்ச்சி, மோகமாக மாறி பின்
முள்ளாக மாறிவிடுகிறது. இதுநாள் வரை தம்மை காப்பாற்றி வந்த பெற்றோர்களுக்கு
எதிராக செயல்படுவது தான் தம் காதலின் வெற்றி என்னும் பையத்திக்காரனத்தை
அரங்கேற்றுவதற்கு இருவரும் தயாராகி விடுகின்றனர். எவ்வித புத்திசாலித்தனமான
அணுகுமுறையும், பார்வையும் இல்லாமல் வறட்டு திரைப்பட காட்சிகளை உண்மையெனக்
கருதி அவற்றை செயலபடுத்த தீவிரம் காட்டத் தொடங்கிவிடுகின்றனர். தீவிரத்தின்
உச்சம் திருட்டுக் கல்யாணம். விளைவு பெற்றோரின் எதிர்ப்பு, மனக்கசப்பு.
சொந்த பந்தங்களின் ஆதரவற்ற நிலை. சில காலம் மட்டும் நட்பு வட்டாரத்தின்
ஆதரவில் தொடரும் இவர்களது வாழ்க்கை மெல்ல மெல்ல எதார்த்தத்தையும்
நிதர்சனத்தையும் நோக்கி திரும்பும் போது வாழ்க்கையைப் பற்றிய புரிதல்
விளங்குகிறது. கற்பனையில் வாழ்ந்த வாழ்வு உண்மை நிலைக்கு திரும்பும் போது
வாழ்க்கை கசக்கத் தொடங்கிவிடுகிறது. அவசர கோலத்தில் எடுத்த முடிவு எவ்வளவு
தவறானது என்பதை காலம் கடந்து உணர்ந்து கொண்டதையெண்ணி நொந்து கொள்ளும்போது
பெற்றோரின் அன்பும் தியாகமும் புரிகிறது. அவர்களது அரவணைப்பில் வாழ்ந்த
அந்தக் கால நினைவுகள் மனதில் ஊற்றெடுக்கும்போது கண்களில் அழுகையும் பீறிடத்
தொடங்கிறது. அன்றைய தவறான முடிவு எவ்வளவு பெரிய துன்பத்திற்கு இன்று
வழிகோலிவிட்டது என்று எண்ணி புலம்பும் காதல் திருமணங்கள் எத்தனை? எத்தனை?.
“பெற்றோரின்
சம்மதமில்லாமல் அவர்களது விருப்பமின்றி, ஆசிர்வாதமின்றி செய்யப்படும்
திருமணங்கள் சாத்தானால் ஆசிர்வாதிக்கப்பட்டதும் கடவுளால்
சபிக்கப்பட்டதுமேயாகும்” என்று படித்திருக்கிறேன். இதன் பொருள், துன்பம்
மிகுந்த வாழ்க்கையை தம் மக்கள் தேர்ந்தெடுத்துவிடக் கூடாது என்ற ஆதங்கத்தின்
வெளிப்பாடு தான்.
மேற்கத்திய நாகரிகம் கூட தவறான உறவுகளுக்கு வன்மையான எதிர்ப்பும்,
கண்டிப்பும் தெரிவிக்கும் சூழ்நிலையில், தமிழர் பண்பாடு சீர்குலைந்துவிட்டதை
எண்ணும்போது வருத்தமாக உள்ளது, எதை நோக்கி நாம் சென்று கொண்டிருக்கும் என்ற
கேள்வியும் எழுகிறது. தற்போது தவறான உறவுமுறைகளுக்கு ஊடகங்களும்,
திரைப்படங்களும் மறைமுகமாக பலத்த ஆதரவு தெரிவித்து வருகின்றன. அவற்றை
ஊக்குவிக்கும்படியான செயலில் முழுமூச்சாக இறங்கியிருக்கும் இவை, மக்களின்
கொடூர எண்ணத்தை சாதகமாக பயன்படுத்தி பணம் பார்க்க முயற்ச்சிக்கின்றனர்.
வேசித்தொழிலுக்கும் கீழ்த்தரமான இச்செயலுக்கு மக்கள் வெகு சீக்கிரமாக
பலியாகிவிடுவது துரதிருஷ்டவசமானது.
புத்திசாலித்தனமான அணுகுமுறையும், பார்வையும் இல்லாமல் காதலில் ஈடுபடுவது
வடிகட்டின முட்டாளத்தனத்தை தவிர வேறொன்றுமில்லை. பெற்றோர், உற்றார், உறவினர்
சுற்றத்தார் ஆதரவின்றி திருமணம் செய்வதை விட, அவர்களின் ஆசியோடு இல்லறத்தில்
ஈடுபடுவதே மிகச்சரியானதாகும்.
|
|