|
|
எழுத்தாளார் S.இராமகிருஷ்ணன்

நாவல்கள், சிறுகதைகள் என்றாலே எனக்குள் ஒரு வெறுப்பு இருந்தது. வெறும்
வார்த்தைக் குப்பைகள் தான் என்றும், பையத்தியக்காரனின் கற்பனையில் தோன்றும்
பிதற்றல்கள் தான் என்றும் எண்ணி, அவற்றை படிப்பதையே தவிர்த்து வந்தேன்.
காரணம் அதிலிருந்து கற்றுக்கொள்ள எதுவுமே இல்லை என்கிற என்கிற எண்ணம்.
அடுத்த வீட்டு ஜன்னலை எட்டிப்பார்க்கும் வழியாகத்தான் இவைகள் பெரும்பாலுமே
இருக்கின்றன என்கிற எண்ணமும் மேலோங்கியிருந்தது. இந்த எண்ணங்களை எல்லாம்
தவிடு பொடியாக்கியது இராமகிருஷ்ணனின் ‘துணையெழுத்து’ புத்தகம். வாழ்க்கையில்
தான் சந்தித்த நபர்களையும், அவர்களுடனான அனுபவங்களையும், பார்த்த
இடங்களையும் அப்போது தன் மனதில் ஏற்பட்ட உணர்வுகளையும் ஆசிரியர் மிக
இயல்பாக எழுதியுள்ளார். புத்தகத்தை படிக்கும் அனைவரும் அவருடன் சக பயணியாக
பயணம் செய்வதாகவே உணர்கிறேன். வாழ்க்கைப்பற்றிய ஒரு விசாலப்பார்வையை நான்
கற்றுக்கொண்டேன். சிறு கற்களையும், மரங்களையும் கூட கூர்ந்து கவனிக்கத்
தொடங்கிவிட்டேன்.
எத்தனை விதமான மனிதர்கள், அவர்களுடனான பலதரப்பட்ட அனுபவங்கள் எல்லாவற்றையும்
படித்து முடிக்கும் பொழுது, வாழ்க்கைச் செடியில் ஒரு புதிய ரோஜா
பூத்திருப்பதை உணர்ந்தேன். இந்த ரோஜா, வாழ்க்கையை பின்னாடி சென்று
பார்க்கும் பொழுது எத்துணை அற்புதமான மனிதர்களை கண்டும் காணாது இருந்து
விட்டிருக்கிறேன் என்பதை நினைவுபடுத்தியதோடு, இனிவரும் காலங்களில்
ஏற்படவிருக்கும் சம்பவங்களின் பார்வை அன்றலர்ந்த ரோஜாவைப்போல
புத்துணர்ச்சியுடன் இருந்திட வேண்டும் என்பதற்கு வழிகாட்டுதலாக இருந்தது.
சக மனிதர்களுடனான அனுபவ பகிர்வு நெகிழ்ச்சியூட்டுவதாகவும், மனிதர்களின்
வாழ்வு எத்தன்மையானது என்பதை அறிவுறுத்துவதாகவும் உள்ளது. சிறு சிறு
சம்பவங்களேயானாலும் அதில் எவ்வளவு ஆழமான உணர்வுகள் பொதிந்துகிடக்கின்றன
என்பதை அறிந்துகொண்ட போது சிலாகித்துப் போனேன். பல இரவுகள் என்னை கடந்து
சென்றிருக்கின்றன. ஒரு நாளின் இன்னொரு பாதி இரவு என்று நினைத்துக்கொண்டு அதை
ஒரு போதும் உற்று நோக்கியதில்லை. வானத்திலுள்ள நட்சத்திரங்களையோ, நிலாவையோ,
இரவிலும் தம் நெடுந்தூர பயணத்தை தொடரும் பறவைகளையோ பெரிதாக
எடுத்துக்கொண்டதில்லை. ஆனால் நேற்று, இரவு முழுவதும் இரவின் வண்ணத்தையும்,
தன் கவர்ச்சியையும் கண்டேன். இரவு இத்துணை அற்புதமானதா என்பதை அப்பொழுதுதான்
உணர்ந்து கொண்டேன். அந்த ஏகாந்தமான இரவை, அந்த நிசப்தமான இரவை இதுநாள் வரை
அறிந்துகொள்ளாததை எண்ணி வருந்தினேன். புத்தகத்தை படித்திராவிட்டால், எல்லா
இரவுகளையும் இழந்திருப்பேன். இதுபோல பல விஷயங்களை ஆசிரியர் மூலமாக, அவரிம்
அனுபவ பகிர்தலின் மூலமாக அறிந்துகொள்ள முடிகிறது.
பயணங்கள் மனிதனை பக்குவப்படுத்துகின்றன என்று படித்திருக்கிறேன். அத்தகைய
பக்குவம், இவரது ”தேசாந்திரி” புத்தகத்தை படிக்கும்போது நிச்சயம்
ஏற்படுகிறது. பயணகங்களின் அவசியத்தையும், மனித வாழ்வில் அதன்
முக்கியத்துவத்தையும் இதனால் அறியமுடிகிறது. திருநெல்வேலியில் முதுகலை
தொழில்நுட்பவியல் இரண்டாண்டு படித்த காலத்தில், ஒரே ஒரு முறை மட்டுமே
குற்றாலம் சென்றேன். அதுவும் ஒரு இரவுப்பொழுது. எத்தகைய காட்சிகளையும் காண
இயலாமல், வெறும் மின் விளக்குகளின் வெளிச்சத்தில் தெரியும் நீர்வீழ்ச்சியில்
குளித்துவிட்டு திரும்பிவிட்டேன். வெறும் ஒரு மணிநேர பயணதூரத்தில் இருந்த
குற்றாலத்தை ரசிக்கவேயில்லை. ஆசிரியரின் குற்றால நினைவுகளை படிக்கும்பொழுது
எத்தகைய அருமையான, இனிமையானதொரு அனுபவத்தை இழந்துவிட்டிருக்கிறேன் என்பதை
உணர முடிந்தது.
அன்றாடம் நம் வாழ்க்கையில் ஏற்படும் சம்பவங்கள் அதனாலான அனுபவங்களை நாம்
நினைவில் கொள்வதில்லை. வெறுமனே அன்றைய நாளை கடத்தி விட்டிருக்கிறோம்.
தொடர்ச்சியாக ஒரே மாதிரியான செயல்கள் அதனால் ஏற்படும் சலிப்பு. வாழ்க்கை
சற்றே பாரம் மிகுந்ததாக உணரும்பொழுது இராமகிருஷ்ணன் போன்ற எழுத்தாளர்களின்
புத்தகங்கள் வாழ்க்கை இவ்வளவு சுவாரசியமானதா என்பதை மிக எளிமையாக
விளக்குகின்றன. அதே சமயம், வாய்ப்புகள் கிடைக்கும்போது மட்டுமே பயணம்
மேற்கொள்ளுவதைவிட, அதனை உருவாக்கிக்கொண்டு குறைந்தபட்சம் நமக்கு
அருகிலிருக்கும் ஊர்களுக்காவது சென்றுவர வேண்டும் என்பதை தெளிவாக
அறிந்துகொள்ள முடிகிறது.
|
|