|
|
பெண் எனும் பேரானந்தம்

பகுத்தறிவற்று மரம், செடி, கொடிகளைப்போல
தானும் உண்டு உறங்கி வந்த மனிதன் பெண் ஒருத்தியின் பார்வையால் உயிர்
பெற்றான். அன்று முதல் உலகை ரசிக்க கற்றுக்கொடுத்த பெண் புதிர்முடிச்சுகளின்
தொடக்கமும் எல்லையுமுமாக இருக்கிறாள். முள்ளையும் மலர வைக்கும் அந்த மதுர
விழிகளை எல்லா அழகான பெண்களுக்கும் இந்த இறைவன் அளித்திருக்கக் கூடாதது தான்.
ஆம் ,அந்த பார்வையில் ஆண்களின் இதயம் துடிப்பதையே மறந்துவிடுகிறது. அந்த
அழகான பார்வையின் தாக்கத்திலிருந்து மீண்டுவருவது அவ்வளவு எளிமையானதாக
இருப்பதில்லை. இது ஒரு விதமான மயக்க நிலைக்கு எடுத்துச் செல்வது. மலர்களின்
நறுமணத்தில் வண்டுகள் மயக்கமடைவது போல, அழகான பெண்களின் அருகாமை ஒருவித
மயக்கத்தை ஏற்படுத்துவதில் ஆச்சரியமில்லை போலும். எவ்வித பாகுபாடுமின்றி,
உலகின் எல்லா கவிஞர்களையும் தம் அழகைப் பற்றி பாடவைத்த பெண், நிச்சயம் ஒரு
அதிசயம் தான். கவிஞன் என்றாலே, அவன் பெண்ணைப் பற்றி பாடியிருக்க வேண்டும்
என்கிற அளவுக்கு, கவிஞர்களின் உள்ளத்தை அள்ளிச் சென்றுள்ளாள்.
என்றுமே புதிதாக, புதுமையானதாக இருப்பது பெண் மட்டுமே. அன்று மலர்ந்த
ரோஜாவைப் போல, அழகு முகம் காட்டி, என்னைக் கடந்து செல்லும் பெண்கள் என்
மனதையும் அவர்களுடனேயே கட்டியிழுத்துச் செல்வதில் ஆச்சரியமில்லை. மலருக்கு
மலர் மாறுபடுவது போல, பெண்ணிற்கு பெண் மாறுபடுகிறாள். பேச்சால், அழகால்,
உடலால் ஆயிரமாயிரம் மாறுபாடுகளை கொண்டவள் பெண்.
இந்த உலகத்தில் மிகவும் இன்பமயமான ஒன்று உண்டெனில் அது மனதிற்குப் பிடித்த
பெண்ணின் அருகாமைதான். நாளெல்லாம் அவளின் அருகாமையில் இருந்தாலும், சில
மணித்துளிகளைப் போல உணர்வது விந்தை தான். ஆயிரம் கவிதைகள் அவளைப்பற்றி
எழுதியிருந்தாலும், அவளைக் காணுமிடத்து ஊமையாகி விடுவதில் வருத்தமன்று. ஆம்
வெறும் வார்த்தைகள் அவளின் அழகை எடுத்துரைக்காது. கண்களால் எனக்கு கடிவாளம்
பூட்டும் அவளின் அருகாமை எல்லையில்லா இன்பத்தின் தொடக்கம். அது
வார்த்தைகளைக் கடந்த ஓர் நிலை. வாழ்க்கையை அர்த்தமாக்கும் அற்புத நிலை.
அழகின் வடிவை ஆராதிக்கும் அன்பு நிலை. வசந்தத்தின் வருகையை அறிவிக்கும்
அற்புத நிலை.
உயிராகிவிட்ட அவளின் அருகாமையில் இருப்பதென்பது பேரானந்தத்தின் உறைவிடம்.
அந்த அருகாமையில் மனம் சிறகடித்துப் பறக்கின்றது. உடலெங்கும் ஒரு சிலிர்ப்பு
மெல்ல படர்கின்றது. ஒரு புதுவித அனுபவத்திற்கு இட்டுச் செல்கின்றது.
அவ்வருகாமையில் அதிகம் பேசிக்கொள்ளத் தேவையில்லை. மெளனம் அந்நேரத்தில் பல
மொழிகளை அவர்களிருவருக்கும் கற்பித்திருக்கும்.
வார்த்தைகளால் பேசாமல், வெறும் கண்களால் மட்டுமே பேசும் அவர்களின்
வசந்தப்பேச்சுக்கு ஆண் சமுதாயம் என்றுமே நிரந்தர அடிமைதான் என்பதை
மறுப்பதற்கில்லை. ஒளிமிகுந்த அந்த காந்தக்கண்களுக்கு வீழ்ந்திடாதவர் இந்த
உலகில் எவருமில்லை. பேரழகின் இருப்பிடமான பெண்ணொருத்தியுடன் பழகும்போது தான்
மலர், நதி, மலை இவற்றுக்கெல்லாம் அர்த்தம் புரிகிறது. இயற்கையின் அழகில்,
அவளைக் காணும்போது, ஆஹா இறைவனின் படைப்புகளிலேயே மிகவும் அற்புதமான
படைப்பெனில் அது பெண் தான் என்பதை உணர வைக்கிறாள். பெண்களை பொதுவாக மலருக்கு
இணையாக ஒப்பிடுவதுண்டு. ஏனெனில், அழகற்ற மலர் என்று இவ்வுலகில் எதுவுமில்லை.
மணமற்ற மலர் வேண்டுமானால் இருக்கலாம். ஆனால் அழகற்ற மலர் என்று எந்த மலரும்
இல்லை. அதனால்தான், பெண்களை மலருக்கு இணையாக ஒப்பிடுகின்றனர். பெண்ணும் கூட
ஒரு இயற்கை காந்தம் தான். இதன் ஈர்ப்பு சக்தி மிக அதிகமாக இருக்கிறது.
நெருங்கி இருக்கும்போது இருக்கும் ஈர்ப்பு சக்தியினை விட, விலகி
இருக்கும்போது பன்மடங்காக அதிகரிக்கிறது. ஆண்களை அடிமையாக்குவது பெண்ணின்
அழகல்ல, கவர்ச்சி தான். இந்த கவர்ச்சி எல்லாப் பெண்களுக்கும் இருப்பதில்லை.
ஆனால் இவர்களின் அழகில் எந்த குறைபாடும் இருக்காது. கண்களை கவர்ந்து
இழுக்கும் பெண்களை விட, மனதினை கவர்ந்து இழுக்கும் பெண்களின் தாக்கம்
அதிகமானது. இத்தகைய பெண்களின் உறவு வாழ்க்கையை என்றுமே புதுமையானதாகவும்,
அழகானதாகவும் மாற்றும்.
மோகம் ஒரு முள். அம்முள் குத்தப்பட்ட இதயத்திலிருந்து அவளைப்பற்றியதான
நினைவுகள் மீண்டும் மீண்டும் ஊற்றெடுக்கும். இம்முள்ளின் வலி, மிகவும்
பயங்கரமானது. அவளின் நினைவுச் சுழலில், சிக்கிக்கொண்ட இதயம், நாளுக்கு நாள்
பலவீனமாவதை தடுக்க முடிவது அவளால் மட்டுமே. வள்ளுபவனின் கூற்றுப்படி,
காயத்தை ஏற்படுத்துவதும் அக்காயத்திற்கு தானே மருந்தாவதும் பெண் மட்டும்தான்.
இறைவன் மிகவும் புத்திசாலி. பெண்கள் யாவருமே அன்பானவர்கள் என்பதால் தான்,
தாய்மை அடையும் தன்மையை பெண்களுக்கு கொடுத்தான். இவ்வுலகில், எல்லையில்லாத
ஒன்று உண்டெனில் அது அன்பு தான். அதற்கு எந்தவித காரணமும் தேவையில்லை. அதே
சமயம், அதற்கு எந்த அனுமதியும் தேவைப்படுவதில்லை. அன்பையும் பெண்கலையும்
பிரிப்பதென்பது இயலாத ஒன்று.
ஆண் பெண் இருவருக்குமிடையே அரும்பிய காதல் தொடர்கிறதெனில் அது, அவள் அவன்
மீது காட்டும் அன்பினால்தான். அன்பினால் அவனை தன் கட்டுப்பாட்டுக்குள்
வைத்திருக்கிறாள் என்று கூட சொல்லலாம். சில முரட்டு மனிதர்கள் கூட சில
பெண்களிடத்தில் அடிமை போல இருப்பதுண்டு. ஏனெனில் அவளின் அன்பு அவ்வளவு
முரட்டுத்தனமானது.
|
|