Can't view the contents correctly? Click Here >>

 

இதோ இறைவன்

அவ்வளவு எளிதில் உணர்ச்சி வசப்படக் கூடியவன் அல்ல. ஆனால், சமீபத்தில் பத்திரிக்கைகளில் படித்த செய்தியொன்று படிக்கும்போது கண்களை குளமாக்கியது. வாய்விட்டே அழுது விட்டேன். துக்கமும் மகிழ்ச்சியும் ஒரே நேரத்தில் தொண்டையை அடைத்துக்கொண்டது. இது எனக்கு மட்டும்ஏற்பட்டதன்று. அச்செய்திணை படித்த அனைவரது நிலையும் இதுதான் என்பதே உண்மை.

இறைபு என்பது ஏதோ சக்தியல்ல. அது ஒரு தன்மை. செய்யும் செயல்களின் வெளியீட்டைப் பொறுத்தது. அதனடிப்படையில் பார்த்தால் மனிதனும்கடவுளாகிறான், அவன் செய்யும் செயல்களைப் பொறுத்து ஆம், அத்தகைய கடவுள்தான், திருக்கழுக்குன்றம் மருத்துவ தம்பதிகள்.எவருக்குமே வர முடியாத துணிவு, கருணை பரந்த மனப்பான்மை, தாயுள்ளம் எல்லா உயிர்களையம் தம்முயிர் போல் எண்ணும் உயர் மனப்பான்மை இப்படி எவ்வளவோ அடுக்கிக்கொண்டே போனாலும், அதற்கு முடிவில்லை. “அன்பே சிவம்” என்று வறட்டுத்தனமாக கூச்சலிடுபவர்களின் இடையில், தம் மகனின் உடலையே தானமாக அளித்து, தம் நடவடிக்கைகளினால் அதனை நிருபீத்துள்ளனர்.

இருக்கம்போது, மற்றவருக்கு வாழ்வளிக்க இயலாவிட்டாலும் இறந்தபிறகாவது உடல் உறுப்புகளை தானமாக அளிப்பதின் மூலம் ஏன் வாழவைக்கக் கூடாது? மண்ணில் புதைப்பதினாலும், எரிப்பதினாலும் என்ன பயன்?

மனிதனின் உயிர் மட்டுமே விரைவில் அழிகிறது. ஆனால், உடலுறுப்புகளை தானமாக அளிப்பதின் மூலம், அம்மனிதனின் உறுப்புகள் இன்னும் சில காலங்கள் இவ்வுலகத்தில் தன் வாழ்க்கையை வேறொரு உயிரில் தொடங்குவதற்கு நாம் ஏன் தடையாய் இருக்க வேண்டும்? மனிதத்தன்மையுள்ள எல்லோருமே, திருக்கழுக்குன்றம் மருத்துவ தம்பதிகளின் செயலினை, ஒரு மூன்னுதாரணமாகக் கொள்ள வேண்டும். உடலுறுப்புகளின் தானத்தை நானும் அவ்வளவாக அறிந்திருக்கவில்லை. அதன் அவசியத்தை, தேவையை மிக ஆழமாக தெரிந்துகொண்டது இந்த மருத்துவ தம்பதியினரைக் கண்டபின் தான்.

இந்த ஸ்தூல உடல் எதற்கும் பயன்படுவதில்லை. ஆத்மா என்றழைக்கப்படும் இந்த உயிர், உடலை விட்டு பிரிந்த பின் அவ்வுடலிற்கு எந்த முக்கியத்துவமும், மரியாதையும் இல்லை என்ற வார்த்தைகள் இப்போது அடிப்படையற்றவையாகிவிட்டன. இன்னும் சொல்லப்போனால், கண்ணுக்கு புலப்படாத இந்த ஆத்மாவினால் இதுவரையிலும் எந்த பயனாவது உண்டா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் இந்த உடல், தானமாக அளிக்கப்படுவதின் மூலம் பல உயிர்களை, ஆத்மாக்களை வாழ வைக்கின்றது. இந்த நிதர்சனமான உண்மையை மனிதன் தன் மனதில் ஆழமாக பதிய வைக்க வேண்டும். மற்றவர்களுக்கும் இதன் அவசியத்தை உணர்த்துவது தன் வாழ்வியல் கடமை என்பதை ஒருபோதும் மறக்கலாகாது.

தாய் மட்டுமே உயிர் அளிப்பதில்லை. இவ்வுலகில் பிறந்த அனைத்து மனிதர்களும் உயிர் அளிக்கலாம். தாய் ஒரு உயிரை பிரசவிக்கும்போது, படும் வேதனைகள் அந்த ஆண்டவனும் கூட பொறுக்க மாட்டான், ஆனால் அது போன்ற வேதனைகள் கூட உடல் உறுப்புகளை தானமாக அளிப்பதின் மூலம் இருப்பதில்லை காரணம் மனிதன், இறந்த பின் தான் உடல் உறுப்புகளை தானமாக அளிக்க முடியுமே தவிர, உயிரோடு இருக்கும் போது முடியாது. (சிறு நீரகம் தவிர).

உடல் உறுப்புகளை தானமாக அளிப்பதின் மூலம், இவ்வுலகில் ஒரு மிகப்பெரிய சமுதாய புரட்சியே கூட ஏற்படலாம். எப்படியெனின், ஒருவர் இறந்தபின் அவருடைய உடம்பிலிருந்து பெறப்படும் உறுப்புக்கள், மற்றவருக்கு மாற்றப்படும் போது அவர், எத்தகைய சாதி, மொழி, இனம், பால் என்றெல்லாம் பார்ப்பது கிடையாது. இதனால் மனிதனை மனிதனாக மட்டுமே பார்த்திட இயலும்.

அது மட்டுமல்லாது, இதன் அவசியத்தை எல்லோரிடத்தும் எடுத்துரைத்து, அனைவரையும் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வர செய்ய வேண்டும். மருத்துவத் தம்பதிகளின் செயலைக் கண்டு நெகிழ்வதோடு நிறுத்திக்கொள்ளாமல், தாங்களும் மனமுவந்து தம்முடலை மருத்துவ பயனீட்டிற்கு பயன்படுத்திக்கொள்ள அனுமதிச்சான்று வழங்கிட வேண்டும். இதனால், நாம் இழக்கப்போவது எதுவுமேயில்லை. அடையப்போதுதான் அதிகம். ஆம் இதனால் நாம் இறைத்தன்மையை அடைகின்றோம் நம்மால் ஒரு உயிர், இந்த உலகில் நீண்டகாலம் தொடர்ந்து வாழ்ந்திட நாம் பயன்பட்டிருக்கிறோம்.

சகமனிதர் ஒருவரை அவர் கண்ணுக்குத் தெரியாதவராக இருந்தாலும் நாம் காப்பாற்றியிருப்பதினால், மனித குலமே நம்மை பாராட்டும். மனித நேயம் மலர இது ஒரு சிறந்த வழி. சமுதாய பாகப்பிரிவினைகள் முற்றிலுமாக அகல, இது ஒரு தொடக்கப்புள்ளி. எல்லோர் மனதிலும் கடவுளாக ஒரு நிரந்திர இடத்தைப் பிடித்துவிட்ட அம்மருத்துவ தம்பதிகள் பல்லாண்டு வாழ வாழ்த்துவோமாக.

 

 

free hit counters
பதிப்புரிமை © TAMILCAFE. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை / IP கொள்கை 
 
Disclaimer: Most of the contents of this site are contributed by readers. TAMILCAFE.NET cannot be held responsible for authenticity of the contents or any copyright violation and views proposed by the author.
However, we are willing to take corrective actions.  This site also does not store any files on its server. We only index and link to content provided by other sites. Please send your queries to admin@tamilcafe.net