|

|
பிற்போக்குத்தனத்தின் முதலாளிகளே கம்யூனிஸ்ட்கள்
ரஷ்யாவில்
இடி இடித்தால் இங்கே காதை பொத்திக் கொள்வதும், சீனாவில் மழை பொழிந்தால்
இங்கே குடை பிடிப்பதும் தான் இன்றளவிலும் கம்யூனிஸ்டுகளின் வேலையாக
இருக்கிறது. பழைய பஞ்சாங்கத்தையே புரட்டிக் கொண்டிருக்கும் இவர்கள்
ஒன்றுக்கும் உதவாத உளுத்துப்போன கம்யூனிச சித்தாந்தத்தை வறட்டுத்தனமாக
தாங்கிக் கொண்டிருக்கின்றனர். சொல்லப் போனால், இதிலும் கூட உண்மை
கிடையாது. ஏனேனில் அவர்களுக்கான தனியான சித்தாந்தமோ கொள்கைகளோ
இருப்பதாகத் தெரியவில்லை.
ஒவ்வொரு தேர்தலிலும் எவருடைய முதுகிலாவது ஏறி பயணத்தை மேற்கொள்ளும்
இவர்கள், வெறும் ஒட்டுண்ணியாகத்தான் இன்றுவரை காலம் தள்ளி வருகின்றனர்.
காங்கிரசுடனான கூட்டணி முறிந்தவுடன் உடனடியாக மாயாவதியை பிரதமர் வேட்பாளராக
அறிவிக்கின்றனர். எதனடிப்படையில், மாயாவதியை தேர்ந்தெடுத்தார்கள் என்பதற்கு
உருப்படியான காரணம் கூற முடியுமா? தங்களுடைய பொது எதிரியான பா.ஜ.க.வை
தோற்கடிப்பதுதான் இவர்களுடைய ஒரே நோக்கம். அதற்காக அவர்கள் எதையும்
செய்யத் தயார். எந்தவிதக் கொள்கையையும் தியாகம் செய்ய, விட்டுக்கொடுக்கத்
தயார். 100% சமரசத்திற்கு எப்போதும் தயாராக இருக்கும் இவர்கள் முழுக்க
முழுக்க மற்றவர்களை போலவே வெற்றியை மட்டுமே குறிக்கோளாக கொண்டு காய்களை
நகர்த்தி வருகின்றனர். தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, வழக்கமான பிரச்சனைகளை
எழுப்பி வறட்டு கூப்பாடு போடத் தொடங்கி விடுகின்றனர்.
இந்தியாவின்
முன்னேற்றம் ஆமை வேகத்தில் இருந்த போது, நரசிம்மராவ் ஆட்சிக் காலத்தில்
முதன்முதலாக உலகமயமாக்கலுக்கும், தாராளமயமாக்கலுக்கும் கதவு திறந்து
விடப்பட்டது. பின்தங்கிய நிலையிலேயே இருந்த இந்தியா மெல்ல வளாச்சிப்பாதையினை
நோக்கி அடியெடுத்து வைப்பதை பொறுக்காத இவர்கள், பெரும் போராட்டங்களில்
குதித்து அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்தியாவில் மீண்டும்
காலனியாதிக்கத்தையும், ஏகாதிபத்தியத்தையும் உருவாக்க காங்கிரசு அரசு
வழிகோலுகிறது என்று பகிரங்கமாக குற்றஞ்சாட்டினர். ஆனால், அதே காங்கிரசு
அரசுடன் தான் கடந்த 4 ½ ஆண்டுகளாக இவர்கள் கூட்டணி வைத்திருந்தனர். கேட்டால்
குறைந்தபட்ச செயல் திட்டம், அது இது வென, சால் ஜாப்பு கூறுகின்றனர்.
இவர்களுடைய எதிர்ப்பினை கண்டு அன்று நரசிம்மராவ் பின்தங்கியிருந்தால்,
இந்தியா இந்தளவுக்கு முன்னேற்றம் கண்டு இருக்க முடியுமா? உலக நாடுகளின்
அணிவரிசையில் இந்தியாவிற்கு ஒரு இடம் கிடைத்திருக்குமா?
ஒரு காலத்தில் டிராக்டர் அறிமுகப்படுத்தும் போது இவர்கள் பலத்த எதிப்பு
தெரிவித்த கதையும் உண்டு. விவசாயிகளின் வாழ்வாதாரத்தையே பாதிக்கும் செயல்
என்ற இவர்களுடைய வாதத்தை அன்றைக்கு செவிமடுத்திருந்தால் நாம் இன்னமும்,
உணவுக்காக மற்ற நாடுகளிடம் கையேந்தி நின்று கொண்டு தான் இருந்திருக்க
வேண்டும். எதற்காக எதிர்க்கிறோம் என்றே தெரியாமல் எதிர்ப்பதுதான் இவர்களின்
வழக்கம்.
அமெரிக்காவின்
தேர்க்கால்களில் இந்தியாவினை பூட்டும் நடவடிக்கைதான் அணுசக்தி ஒப்பந்தம்.
இதன் மூலம் இந்தியாவை அடிமைப்படுத்த அமெரிக்காவிற்கு காங்கிரசு அரசு துணை
போகின்றது என்ற பொத்தாம் பொதுவான குற்றச்சாட்டைதான் இன்று வரையும்
திரும்பத் திரும்ப கூறி வருகின்றனரே தவிர அணுசக்தி ஒப்பந்தத்தின் சாதக
பாதகங்களை தெளிவாக இவர்கள் மக்களிடம் விவரித்ததுண்டா? உண்மையிலே இந்திய
நாட்டின் வளாச்சியில் இவர்களுக்கு முழு அக்கறை இருக்குமேயானால் எல்லா மாநில
மக்களுக்கும் அவரவர்களுடைய பிராந்திய மொழியில் அணு சக்தி ஒப்பந்தத்தின்
தீமைகளை முழுபக்க அளவில் பட்டியலிட்டிருக்க வேண்டாமா? அணுசக்தி ஒப்பந்தத்தை
ஆதரிப்பவரும் உலகளாவிய இந்தியர்களின் பேராதரவைப் பெற்றவரும் முன்னாள்
குடியரசுத்தலைவரும் அணு விஞ்ஞானியுமான அப்துல் கலாமை இவர்கள் கேள்வி
கேட்டிருக்க வேண்டாமா? விமர்சித்திருக்க வேண்டாமா? நாட்டிற்கு எதிரானவர்
என்று குற்றஞ்சாட்டி இருக்க வேண்டாமா? தங்களுடைய பேச்சைக் கேட்கும் காலம்
வரை, காங்கிரசின் முதுகில் சவாரி செய்து விட்டு, தற்போது வெளியேறுவதற்கு
ஏதாவது காரணம் கூற வேண்டுமே என்பதற்காக அணுசக்தி ஒப்பந்தத்தை கையிலெடுத்து
வெளியேறிவிட்டனர். அடுத்த தேர்தலுக்கும் தயாராகி பிரதமர் வேட்பாளரையும்
அளிவித்துவிட்டனர். ஆனால், அவரோ, தாம் ஆளும் மாநிலத்தில் தனித்தே நிற்பதாக
செய்தி வெளியிட்டுள்ளார். ஆக இந்தக்கூட்டணியும் சில நாட்கள்தான் என்பது
தற்போதே உறுதியாகிவிட்டது.
தொழிலாளர்
நலனில் தங்களுக்கு மட்டுமே அதிக அக்கறை இருப்பதாக காட்டிக்கொள்ளத்
துடிக்கும் கம்யூனிஸ்டுகள் ஆளும் மேற்கு வங்க மாநிலத்தில் தான் மனிதனை
மனிதன் இழுக்கும் ‘மனித ரிக்ஷா ‘அவலம் இன்றும் தொடர்கிறது. இந்தியா
சுதந்திரமடைந்து 61-ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையிலும் இத்தகைய கொடிய அவலங்களை
கம்யூனிஸ்ட்டுகள் தாங்கள் ஆளுகின்ற மாநிலங்களில் இருந்தே அகற்ற முடியவில்லை.
மிகவும் பின் தங்கிய மாநிலங்களாகத்தான் இவர்களுடைய மாநிலங்கள் இன்னமும்
அடையாளம் காணப்பட்டு வருகின்றன. தொடாந்து 30 ஆண்டுகளுக்கும் மேலாக
தொடாந்து ஆட்சி செய்து வரும் இவர்கள் மேற்குவங்க மாநிலத்தின்
வளர்ச்சிக்காக இதுவரை எடுத்த நடவடிக்கைகள் என்ன? இம்மாநிலத்தில் முதலீடு
செய்வதற்கு முதலீட்டாளாகள் மிகுந்த தயக்கம் காட்டிய நிலையில், புத்ததேவ்
பட்டாச்சார்யா ஆட்சி முதலீட்டாளர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு
அளிக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதனால், மெல்லமெல்ல முதலீட்டாளாகள்
மேற்குவங்கத்தில் முதலீடு செய்ய முன் வந்தனர். ஆனால் தற்போது இதுவும் வெகு
நாட்களுக்கு நீடிக்கும் என்று தோன்றவில்லை. காரணம், சமூக வளர்ச்சியையும்
தொழிலாளர் நலனையும் தம் இரு கண்களாக பாவிக்கும் ஒரே தொழிலதிபரான ரத்தன்
டாடாவின் சமீபத்திய வெளியேற்றம் குறித்த அறிக்கைதான். மிகப்பெரும் தொகையான
ரூ.1500 கோடி ரூபாய் முதலீட்டில் தொடங்கப்பட்டிருக்கும் சிங்குர்
தொழிற்சாலையை அப்படியே விட்டுவிட்ட செல்ல தயாராக இருப்பதாக
விடுக்கபபட்டுள்ள இந்த எச்சரிக்கைச் செய்தி மேற்குவங்க மாநிலத்திற்கு
மிகுந்த பின்னடைவை ஏற்படுத்தும் என்பதில் அணுவளவும் சந்தேகமிருக்க முடியாது.
மற்ற மாநிலங்கள் ரத்தன் டாடாவை, கூவிக்கூவி அழைக்கின்ற சூழ்நிலையில்
மேற்குவங்க கம்யூனிஸ்டு அரசு, இதுவரையிலும் எந்தவிதமான உறுதியான
நடவடிக்கையையும் எடுக்காதது துரதிருஷ்டவசமானது.
”பொதுமக்களுக்கு
ஊறு விளைவிக்கும் விதமாக வேலை நிறுத்தம் செய்வது மிகுந்த கண்டனத்துக்குரியது.
ஆதலால், அதனை தடை செய்கிறோம்” என்று உச்சநீதிமன்றம் ஆணித்தரமாக தெரிவித்து
விட்டபோதிலும, கம்யூனிஸ்ட்டுகள் ஆளுகின்ற மாநிலங்களில் இன்னமும் அது,
செவிடன் காதில் ஊதிய சங்காகத்தான் இருக்கிறது. மாதமொருமுறை ஏதாவது
உப்புசப்பு இல்லாத காரணத்தைக் காட்டியாவது, வேலைநிறுத்தம் செய்து,
மாநிலத்தையும், மக்களையும் ஸ்தம்பிக்கச் செய்து விடுகின்றனர். அத்தகைய
நாட்களில் மிகுந்த சிரமத்திற்கும், அவஸ்தைக்கும் ஆளாகும் மக்களைப்பற்றியும்,
தொழில் நிறுவனங்களைப்பற்றியும் இவர்களுக்கு சிறிது கூட அக்கறை கிடையாது.
அறிவித்துவிட்ட வேலை நிறுத்தத்தை வெற்றிப்பெறச் செய்வதற்காக, வன்முறைகளிலும்,
அராஜகத்திலும் ஈடுபடுவதுதான் அவர்களுடைய கம்யூனிச சித்தாந்தமாக இருக்குமோ
என்னமோ? அப்படியே நடத்தப்படும் வேலை நிறுத்தங்களால் இவர்கள் அடைந்த பயன்
என்னவென்றால் பூஜ்ஜியம் தான். சாதித்ததும் அதேதான். வறட்டு
விளம்பரத்திற்காக நடத்தப்படும் இத்தகைய வேலை நிறுத்தங்களால் தொழில்
நிறுவனங்கள் குறிப்பாக தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் பெருமளவுக்கு
பாதிக்கப்படுகின்றன. அதனால்தான் இன்போசிஸ் நிறுவனம் மேற்கு வங்கத்தில்
கால்பதிக்க முன்வரவில்லை என்ற பரவலான குற்றச்சாட்டு இன்னமும் நிலவுகிறது.
வால்மார்ட்
போன்ற மிகப்பெரிய தொழில் நிறுவனங்களை இந்திய சந்தையில் தடம்பதிக்க
அனுமதியளித்தால் சிறுகுறு வியாபாரிகள் தற்கொலை செய்துகொள்ள வேண்டியது தான்
என்று கூச்சிலிட்ட இவர்கள் Reliance Fresh - நிறுவனத்தையும் கடுமையாக
எதிர்த்தனர்.சிறுகுறு வியாபாரிகளுக்கு தாங்கள் மட்டுமே பாதுகாப்பு என்று
வரமுழக்கமிட்ட இவர்கள், தற்போது கமுக்கமாக Reliance Fresh - நிறுவனத்திற்கு
அனுமதியளித்துவிட்டனர். ஆம் தற்போது மேற்கு வங்கத்தில் Reliance Fresh -
பீடுநடை போட்டுக்கொண்டிருக்கிறது. தொழிலாளர் வர்க்கத்தினரின் வயிற்றில்
அடிக்கும் இந்தச் செயலை அவர்களால் தடுத்து நிறுத்த முடியவில்லை. காரணம்,
ஏற்கனவே மாநிலத்தின் வளாச்சி அதலபாதாளத்தில் இருப்பது தான். ஒருபுறம்
தாராளமயமாக்கலை ஆதரிக்கும் இவர்கள் இன்னொருபுறம் அதனை எதிர்ப்பது
கேலிக்கூத்தாகும். இப்படி மாறுப்பட்ட, முரண்பட்ட நடவடிக்கைகள் தான்
கம்யூனீச கொள்கைகளோ என்னவோ?
கம்யூனிஸ்ட்டுகள் ஆட்சிபுரியும் மற்றொரு மாநிலமான கேரளாவில் ஆண்டுக்கு
சுமார் 100-நாட்கள் வேலை நிறுத்தத்திலேயே சென்றுவிடுகிறது என்று ஒரு
கருத்துக்கணிப்பு கூறுகிறது. நாட்டின் வளாச்சியை மிக வேகமாக பின்னுக்கு
இழுக்கும் இத்தகைய நடவடிக்கைகளை இன்னமும் தொடருவது பிற்போக்குத்தனத்தின்
உச்சக்கட்டம். எதிர்ப்பினை காட்டுவதற்கு எத்தனையோ வழிகள் இருக்க வேலை
நிறுத்தத்தை மட்டுமே கையிலெடுப்பதை ஒருக்காலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இது
அராஜகத்தின் வெளிப்பாடே தவிர, ஒருநாளும் அறவழியாகாது.
வளாச்சியை பின்னுக்குத்தள்ளும் கம்யூனிச சித்தாந்தங்கள் சீனாவிலேயே
வழக்கொழிந்துவிட்ட பிறகு, இங்கு இன்னமும் அதனையே தாங்கிப்பிடித்துக்
கொண்டிருப்பது சிறுபிள்ளைத்தனமாகும்.
|
|