|

|
பிரிக்க முடியாதது குழப்பமும் ரஜினியும்
சுமார்
30 ஆண்டுகாலமாக தமிழ் திரையுலகில் கோலோச்சிக்கொண்டிருக்கும் ரஜினி
சமீபத்திய தன்னுடய நடவடிக்கைகளினால் தான் யார் என்பதை தமிழ்த் திரைப்பட
ரசிகர்களுக்கு தெளிவுபடுத்திவிட்டார். முழுநேர அரசியல்வாதிகளை கூட
இவ்விஷயத்தின் மூலமாக அவர் முழுங்கிவிட்டார். நல்லவேளையாக தமிழக அரசியல்
இவருடைய கைகளில் சிக்கவில்லை. நாம் தப்பித்தோம் ; பிழைத்தோம்.
தொடக்கத்திலிருந்தே தெளிவற்ற மனநிலையில் செயல்பட்டுவரும் இவர், தமிழ்
ரசிகர்களை தன்னுடைய வறட்டு அரசியல் பேச்சால் உசுப்பிவிட்டுக் கொண்டே வந்தார்.
ஏதோ இவர்தான் தமிழக மக்களைக் காப்பாற்றக்கூடிய ஒரே தலைவர் என்பது போல
ஊடகங்களும் பூதாகாரமாக செய்திகளை வெளியிட்டு பணம் சம்பாதித்துக்கொண்டன.
எல்லா மேடைகளிலும் “என்னை வாழவைக்கும் தமிழ் ரசிகர்களே” என விளித்து
விளித்து வறட்டு விளம்பரத்தை தக்கவைத்துக் கொள்வதில் அதீத முனைப்புடனே
செயல்பட்டு வந்தார். இவரை நம்பி, பலரும் தம்மை முன்னிறுத்திக்கொள்வதற்கு
கோடிகளில் பணத்தை செலவழித்து ரசிகர் மன்றங்கள், விழாக்கள் நடத்தி ஒவ்வொரு
தேர்தலிலும் இவர் அரசியலுக்கு வந்துவிட மாட்டாரா என்ற மிகுந்த
எதிர்பார்ப்புடன் காய்களை நகர்த்தி வந்தனர்.
அந்தந்த
காலகட்டங்களில் யாருக்கு மவுசு இருக்கிறதோ அவர்கள் பக்கம் சாயத்தொடங்கிய
இவர் அவர்களின் கருவியாகவும் செயல்பட்டார். ரசிக அடிமைகளையும் அதனையே செய்ய
ஊக்குவித்தார். 1996-தேர்தல் இதற்கு சிறந்த உதாரணம். நேரடியாக அரசியல்
களத்தில் குதிக்க தைரியமில்லாததால், அன்றைய தி.மு.க கூட்டணிக்கு வாக்களிக்க
வேண்டுகோள் விடுத்ததோடு, ஜெயலலிதாவிற்கு எதிராக கடும் சொற்களையும்,
பிரச்சாரத்தையும் மேற்கொண்டார். அதுவும் தேர்தல் நடைபெறும் அன்றைய நாளின்
அதிகாலையிலேயே தொலைக்காட்சி முன்\தோன்றி இத்தகைய வார்த்தைகளை
உதிர்த்துவிட்டு இமயமலைக்குச் சென்றுவிட்டார். காலம் பல கடந்தது. எவர்
ஒருவரை கடுமையாக விமர்சித்தாரோ அவருக்குத்தான் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில்
வாக்களித்ததாக தெரிவித்தார். காரணம், அவர் ஜெயித்துவிடுவார், தன்னுடைய தாள
ஜதி என்றும் நீடிக்க வேண்டும் என்று எண்ணினார். ஆனால், நடந்ததோ வேறு!
புலி
வருது; புலி வருது என்பதைப்போல இவரும் அரசியலுக்கு வருவார், வருவார் என்று
இறுதியில் அரசியலுக்கு வரப்போவதில்லை என்பதை ஓரளவிற்கு மக்கள்
புரிந்துகொண்டுவிட்ட நிலையில் வழக்கமான காவிரிப் பிரச்சனை தலையெடுத்தது.
எங்களுக்கு மட்டும்தான் தமிழர்களின் வாழ்வில், நலனில் அதீக அக்கறை
என்பதைப்போல காட்டிக்கொள்ளத் துடிக்கும் இந்தக் கூத்துக்காரர்கள்
செட்டிநாட்டு சமையலுடன் நெய்வேலிக்கு போராட்டம் நடத்தச் சென்றனர். அனைவரும்
ஒருமித்த குரலில் கர்நாடகாவிற்கு வழங்கப்படும் மின்சாரத்தை நிறுத்துக என்று
முழங்கிக் கொண்டிருந்த வேளையில் இவர் மட்டும் தன் இருப்பிடத்திலேயே
இருந்துகொண்டுவிட்டார். இத்தகைய தனிப்போக்குடைய இவர், மறுநாள் சென்னையில்
உண்ணாவிரத நாடகத்தை அரங்கேற்றி மீண்டும் தன்னுடைய அரசியல் பிரவேசத்தை
புதுப்பித்துக் கொண்டார்.
”வந்தாரை வாழ வைக்கும் தமிழகமும்” தன் அறிவீனத்தை அப்படியே தொடர்ந்து வந்தது.
இவரும் மேடைகளில் முன்னுக்குப்பின் முரணாக பேசி வந்தார். சொல்லப்போனால் உளறி
வந்தார் என்றுதான் சொல்ல வேண்டும். உதாரணம்: 2004-ம் தேர்தலில் ரஜினி
உதிர்த்த வார்த்தைகள் இதோ- “பா.ம.கா வை தோற்கடிக்கணும், ஆனா அவங்க
கூட்டணிக்கு ஓட்டு போடனும்”.
தான்
பிறந்த கர்நாடகாவிலே ஏராளமான தொழிற்சாலைகளையும், நிறுவனங்களையும்
நடத்திவரும் இவர் இதுவரை தமிழக மக்களுக்குச் செய்ததென்ன? ஏழைத் தொழிலாளர்கள்
தான் அதிகளவில் இவருடைய திரைப்படத்தை பார்க்கின்றனர். தன்னை வாழ வைத்த, வாழ
வைக்கும் இந்தத் ஏழைத் தமிழர்களுக்கு இவர் செய்தது என்ன? இவர் மனைவி நடாத்தி
வரும் “ஆஷ்ரம்” பள்ளியில் ஆண்டுக்கு எத்தனைக் ஏழைக் குழந்தைகளுக்கு
இலவசக்கல்வி அளிக்கப்படுகிறது? முழுக்க முழுக்க வணிக நோக்கிலேயே
செயல்பட்டுவரும் இவருடைய இன்னொரு நடவடிக்கையைப் பாருங்கள். “பாபா”
திரைப்படம் வெளிவரும் சமயமது. அத்திரைப்படத்தில் இவர் காட்டுவதாக இருக்கும்
முத்திரையினையோ, படத்தையோ எவரும் பயன்படுத்தக் கூடாது என்று காப்புரிமை
பெற்று பின் பணத்திற்கு அதனை விற்றுவிட்டார். பாருங்கள், இவருடைய பணத்தாசையை?!
பணம்
மட்டுமே குறிக்கோளாக செயல்பட்டு வரும் இவர், சமீபத்திய குசேலன் திரைப்பட
வெற்றிக்காக வெளிப்படுத்திய வார்த்தைகளால் தன்னுடைய சுயரூபத்தை
வெளிப்படுத்தி, தமிழர்களின் முகத்தில் கரியை பூசிவிட்டார். ஒகேனக்கல்
கூட்டுக் குடிநீர்த் திட்டத்திற்கு கன்னட வெறியர்களின் எதிர்ப்பினை
முறியடிக்க நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் “கன்னடர்களை உதைக்க வேண்டாமா?”
என்று வீராவேசமாக பேசிவிட்டு தற்போது குசேலன் படத்திற்கு கன்னடர்கள்
எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் என்றவுடன் அவர்களின் காலில் விழுந்துவிட்டார்.
அன்றொரு பேச்சு, இன்றொரு பேச்சு. அத்தோடுமட்டுமல்லாமல் அரசியலுக்கு தாம்
வருவேன் என்று யாரோ எழுதிக்கொடுத்ததை திருப்பிச் சொன்னதாகவும், அது
தன்னுடைய கருத்தல்ல என்றும் திருவாய் மலர்ந்திருக்கிறார். இப்படி யாரோ
ஒருத்தர் சொல்வதை திருப்பிச்சொல்லும் கிளிப்பிள்ளையா தமிழக முதல்வராக வருவது?
முன்னுக்குப்பின் முரணாக பேசும், தெளிவற்ற வார்த்தைகளை உதிர்க்கும் இவர்தான்
தமிழகத்தின் தலைவரா? பணத்திற்காக நாக்கை எப்படி வேண்டுமானாலும் திருப்பும்
இவரையா முதல்வர் நாற்காலியில் அமர வைப்பது?
தான் ஒரு முழுநேர நடிகன் என்பதை தெளிவாக உணர்த்திவிட்ட பிறகும் இவரைக்
கொண்டாடும் அறிவிலிகளைக் கண்டு நான் வருத்தப்படுகிறேன். இவர்களின்
அறியாமையினைக் கண்டு அந்த ஆண்டவனும் வருத்தம் கொள்வான். மண்குதிரையினை நம்பி
ஆற்றில் இறங்க எத்தனிக்கும் இவர்களுடைய மடத்தனத்தை எந்நிலையிலும் மன்னிக்க
இயலாது. நடிகன் என்பதை மட்டுமே மூலதனமாகக் கொண்டு அரசியலுக்கு வருபவர்களிடம்
ஆட்சியை ஒப்படைப்பது என்பது, நமக்கு நாமே கல்லைக் கட்டிக்கொண்டு கிணற்றில்
குதிப்பதற்குச் சமம் என்றால் அது மிகையாகாது.
|
|