Can't view the contents correctly? Click Here >>

ஒரு நாள் வருவேன்

கொஞ்சம் அமுது, கொஞ்சம் விஷம், இது தான் காதலுக்கு சரியான விளக்கமாக இருக்க முடியும். தீயின் உஷ்ணத்தையும் பனியின் குளிர்ச்சியையும் ஒருங்கே அனுபவிக்க வைப்பது காதல் மட்டும் தான். இறந்த காலத்திலும் எதிர்காலத்தில் ஒரே நேரத்தில் பயணம் செய்ய வைக்கும் திறன் காதலுக்குண்டு. வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கும் அந்தக் காதல், அதன் அனுபவம் என்றும் மறக்க முடியாததாக, இறந்த பின்னும் தொடரும். ஆம், அத்தகையை காதலை அவனுடைய வாழ்க்கையிலும் ஒரு நாள் துளிர்க்க வைத்தாள் ஒருத்தி. இதுவே அவனுடைய முதல் காதல் என்பதால் அதைப்பற்றிய தான, அவளைப்பற்றியதான எண்ணங்களே மனம் முழுவதும் நிரம்பி வழிந்தது.

புதிதான இந்த அனுபவம் அவனுக்குள் பல மாற்றங்களை அறிமுகம் செய்ய தொடங்கிற்று. இதுதான் காதலா என்ற சந்தேகத்தையும் அவனுக்குள் அவ்வப்போது எழுப்பவும் அது மறக்கவில்லை. நாட்கள் யுகங்களாக நகரத்தொடங்கும் போது தான் காதலை அவனால் உறுதி செய்து கொள்ள முடிந்தது. தேவதைப் போல வரும் அவளைப்பற்றியதான கவிதைகளை இவனும் எழுதத் தொடங்கும் போது தான் காதலின் தீவிரத்தையும் அதன் வலிமையையும் ஓரளவிற்கு புரிந்து கொள்ள முடிந்தது. அந்த அழகு ஓவியத்திடம் பேச ஒரு நாள் வாய்ப்பு கிடைத்ததை இன்னும் அவன் தன் நண்பர்களுடன் பெருமையாகக் கூறிக்கொள்வான்.

அவன் பேசத் தொடங்கும் முன்பே அவள் பேசத் தொடங்கியது ஆச்சிரியமாகவும், எல்லையில்லா மகிழ்ச்சியாகவும் இருந்தது. ”எப்பொழுதும் என்னையே பார்த்துக் கொண்டிருக்கிறாயே ஏன்? ” என்று திடிரென கேட்டு விட்ட அவளுக்கு, ”என் உயிராகிவிட்டவளை நான் என் இதயத்தால் ஆராதிக்கிறேன்” என்ற அவனுடைய கவிதைத்துவமான பதில் உடனடியாக புரியவில்லை. சில மணித்துளிகளில் அவள் முகத்தில் வெட்கம் கலந்த மகிழ்ச்சி, நாணம் கலந்த சிரிப்பு. தன் காதலை உடனடியாக ஏற்றுக் கொண்ட போது அவனடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. பறப்பது போல இருக்கிறது என்பது வெறும் வார்த்தைகளல்ல என்பதை தற்போது அவனால் உறுதியாக கூற முடியும். முதல் காதலின் வெற்றி இப்படித்தான் எல்லாருக்கும் இருந்திருக்கும் என்பதை உங்களில் யாராவது மறுக்க முடியுமா என்ன?

தொடக்கத்தில் அவளிடம் பேசும் போது, ஒருவிதமான பதற்றமும் நடுக்கமும் அவனிடம் இருந்தது. மெல்ல காதலர்களுக்கே உரித்தான ஊடல் அவ்வப்போது தோன்றினாலும் இவளின் அன்பு வார்த்தைகள் எல்லாவற்றையும் மறக்கச் செய்தது. இவன் மனதில் நினைப்பதை அப்படியே பிரதிபலிக்கம் அவளின் செய்கைகள் தாங்களிருவரும் “கடவுளால் நேரடியாக ஆசிர்வாதிக்கப்பட்டவர்கள்” என்று உணர்த்தியது இவன் எவ்வளவுதான் கடிந்து கொண்டாலும், அவளின் முகத்தில், பேச்சில் ஒருநாளும் கோபம் தோன்றியது கிடையாது. அன்றலர்ந்த ரோஜாவைப் போன்ற அந்த சிரித்த முகம் வாழ்க்கையின் எல்லாத்துயரங்களையும் ஒரே மூச்சில் தூக்கி எறிந்து விடும். அதனால்தான் “தன் உயிராகி விட்டவள் அவள்” என்று வர்ணித்தான் அவன்.

சில வார்த்தைகளுமாய், நீண்ட பார்வைகளுமாய் தொடர்ந்தது இவர்களின் காதல் நாட்கள். ஒரு நாள் தான் தேர்வொன்றிற்காக சென்னை செல்லவிருப்பதாகவும், ரயில் நிலையத்தில் வந்து சந்திக்குமாறும் பணிக்கிறாள் அவள். வண்டி ரயில் நிலையத்திற்கு இரவு 7.20 மணிக்கு வந்து சேருமென்றும், காத்திருப்போர் பட்டியலில் பெயர் இருப்பதால், தற்போது எந்த பெட்டி என்பதை கூற இயலாது என்றும் கூறுகிறாள். அதுமட்டுமல்லாது, தான் தனியே செல்வதாகவும் கூறுகிறாள் அவள். முதன்முதலாக அவளை தனிமையில் (ரயில் நிலையம் என்றாலும் தெரிந்தவர்கள் அவ்வளவாக இருக்கமாட்டார்கள் என்பதினால் அவர்களுக்கு அது தனிமையே) சந்திக்கவும், அதிகநேரம் உரையாடவும் கிடைத்த இந்த பொன்னான வாய்ப்பினை எப்படியெல்லாம், எதற்கெல்லாம் பயன்படுத்திக்கொள்வது என்று தற்போதே கற்பனையில் சஞ்சரிக்கவும், யோசனையில் மூழ்கவும் தொடங்கிவிட்டான். அந்த நாளும் வந்தது.

காலை முதலே இனம்புரியாத பதற்றமும், நடுக்கமும் அவனை விடாது துரத்திக் கொண்டிருந்தன. அவளை சந்திக்கும் போது ஏதாவது பரிசு அளித்தாலும் தகும் என்று நினைத்துக் கொண்டிருந்த வேளையில், கல்லூரியில் அன்றைக்குப்பார்த்து இவனுக்கு அதிக வேலைகள். கல்லூரிவிட்டு வருவதற்கே 5.45 ஆகிவிட்டது. தாடியுடன் சென்று பார்த்தால் நன்றாக இருக்காது என்பதற்காக கடையில் சவரம் செய்து கொள்ள சிறிது நேரம் காத்திருந்து பின் செய்து கொண்டபோது நேரம் 6.10. குளித்துவிட்டு செல்லலாம் என்றாலும், நேரம் மிகவேகமாக சென்று கொண்டிருந்ததனால் முகத்தை மட்டும் கழுவிக் கொண்டு கிளம்பும் போது மணி 6.30. இது வரை அவளுக்கென்று எதுவுமே வாங்கவில்லை. ரயில் நிலையத்திலாவது, கட்டாயம் ஏதாவது வாங்கித் தரவேண்டும் என்று மனதை சமாதானப்படுத்திக்கொண்டு பேருந்து நிறுத்தத்திற்கு வந்தான். வழக்கமாக இந்த நிறுத்தத்தில் அவ்வளவாக பேருந்துகள் நிற்காது. இன்றும் அதே போலத்தான். எந்த பேருந்தும் நிற்கவில்லை. தற்போது மணி 6.45.

எவரிடமாவது “லிப்ட்” கேட்டு சென்றால் தான் உண்டு வேறு வழியில்லை என்கிற சூழ்நிலையில் கையை மறித்துபோது ஒருவர் வண்டி நிறுத்தினார். இருந்தாலும், அவர் அடுத்த நிறுத்தம் வரை மட்டுமே செல்வதாக கூறியபொழுது, என்ன செய்வதென்றே தெரியவில்லை. இருப்பினும், அவருடன் அடுத்த நிறுத்தம் வரை சென்றவுடன், ஒரு பேருந்து வந்தது. தற்போது, மணி 6.55. பேருந்து ரயில் நிலையத்தை அடைய எப்படியும் 7.15 - ஆகி விடும் என்று நடத்துனர் கூறியவுடன் அவனுக்கு தலையே சுற்ற ஆரம்பித்து விட்டது. ரயில் நிலைய நிறுத்தத்திற்கு பேருந்து வந்தபோது மணி 7.20. இதற்கிடையில், அவளிடமிருந்து எண்ணற்ற அழைப்புகள் வந்தவண்ணம் இருந்தன. நிறுத்தத்திலிருந்து ரயில் நிலையம் சுமார் 800 அடி தூரம் இருந்தது.

ரயில் இன்னும் சிறிது நேரத்தில் புறப்படுவதாக அறிவிப்புகள் வந்து கொண்டிருக்கின்றன என்று அவளிடமிருந்து குறுஞ்செய்தி வருகிறது. ஓட்டத்தை அதிகப்படுத்திய அவன் அந்த 800 மீ தூரத்தில் எங்கும் நிற்கவேயில்லை. உடல் அவனை அப்படியே பின்னுக்கு இழுத்தாலும், அவளின் முகம் முன்னுக்கு இழுத்தது. ரயில் நிலையத்தை அடையும் போது நேரம் 7.30 எத்தனையாவது நடைமேடையில் வண்டி நின்றுகொண்டிருக்கிறது என்று கேட்டதற்கு அவள் தனக்கு தெரியவில்லை என்று கூறுகிறாள். உடனே, அவன் அங்குள்ள உதவியாளரிடம் கேட்டதற்கு வண்டி 4-வது நடைமேடையில் இருக்கிறது என்றும் தற்போது கிளம்பப் போகிறது என்றும் பதில் வந்தது. பறந்தால் கூட சென்றடைய முடியுமா என்கிற சந்தேகத்தில், மீண்டும் ஓட்டம் அவளிருக்கும் S8-பெட்டியை தேடி. S20-பெட்டியின் அருகிலிருந்து பார்த்தால், S8-ஒரு கி.மீ. தூரத்தில் இருப்பதாக தோன்றியது.

S10-ஐ நெருங்கியபோது வண்டி புறப்படத்தொடங்கிவிட்டது. மூச்சிரைக்க ஓடிவந்ததில் இதயம் பலமாக அடித்துக்கொண்டது. இன்னும் சிறிது தூரம் என்கிற நிலையில், உடல் முழுவதுமாக ஒத்துழைக்க மறுத்தது. வாசலின் அருகில் தான் காத்துக் கொண்டிருப்பதாக கூறியது நினைவுக்கு வந்தவுடன், உடலை இழுத்துக் கொண்டு ஓடினான். வண்டியின் வேகமும் அதிகரித்தது. தற்போது S8-ஐ நெருங்கிவிட்டான். ஆயிரம் சூரியன்கள் அவள் முகத்தில். ஆனால்……….. வண்டியின் வேகம் பன்மடங்கு அதிகரித்துவிட்டதனால், அவள் கண நேரத்தில் வெகு தொலைவுக்கு சென்ற வண்ணம் இருந்தாள். கையசைப்பு மட்டுமே பரிசாகவும், பதிலாகவும் அமைந்தது.

இறுதியில் மயக்கமே வந்து விட்டது இப்போது. உடல் முழுவதுமாக, நிலைகொள்ளாமல் வலிக்கத் தொடங்கியது. இந்த சந்திப்பு பற்றியதான ஆயிரம் கனவுகன், கற்பனைகள் எல்லாம் ஏமாற்றத்தில் முடிந்து போனது. உலகின் ஒட்டுமொத்த துயரமும் இன்று அவனை பிடித்துக் கொண்டது. காதல் என்றாலே ஏமாற்றம்தான் என்பதை தற்போதைய நிகழ்ச்சி குறிப்பாக உணர்த்துகிறதோ என்கிற சந்தேகமும் வலுவடைந்தது. ஆற்றொணாத் துயரத்தில் அறைக்குத் திரும்பிய அந்த நாள், வாழ்க்கையில் என்றும் மறக்க முடியாத நாள். அவளை சந்திப்பதற்காக அன்று ஓடிய ஓட்டம், அதனால் ஏற்பட்ட வலி இன்னும் தொடருவதாக அவன் கூறுவதுண்டு.

இதுவரையில் மட்டுமே பகிர்ந்துகொண்ட அவன், ஏன் பிரிந்தார்கள் என்பதை எந்நிலையிலும் தெரிவிக்க விரும்பவில்லை. வற்புறுத்திக் கேட்டதற்கு, ”சில கதவுகள் என்றுமே மூடியே இருக்க வேண்டும்” என்பது தான் பதிலாக இருந்தது. இருப்பினும், உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும், ஒரு நாள் வருவேன் என்று அவளிடம் கூறியதாக எங்களிடம் சொன்னான். அந்த நாள், எந்த நாள்? வாழ்க்கையின் ஒவ்வொரு நாளும், அந்த நாளுக்காக காத்துக் கொண்டிருக்கின்றன. நாங்களும் தான்.

free hit counters
பதிப்புரிமை © TAMILCAFE. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை / IP கொள்கை 
Disclaimer: This site does not store any files on its server. We only index and link to content provided by other sites.