Can't view the contents correctly? Click Here >>

அவள்.. நான்.. கனவு..

இன்னொருமுறை திரும்பிப்பார்க்கத் தூண்டும் அழகல்ல அவள். பேச்சிலும் புத்திசாலித்தனத்தை பார்க்க முடியவில்லை. பெண்மையின் இலக்கணங்கள் கூட ஓரளவுக்கு மட்டுமே இருந்த அவளின் அறிமுகம் தற்செயலான ஒன்று. தோழியொருத்தியினால், இரண்டாமாண்டின் தொடக்கத்தில் அறிமுகம் கிடைக்கப்பெற்ற இவள் சில நாட்களிலியே மிகுந்த நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டுவிட்டாள். விரைவான நெருக்கம், மிகுந்த ஈர்ப்பினை ஏற்படுத்துமென்பதை அந்த நாட்களில் புரிந்துக்கொள்ள முடியவில்லை.

வெறும் நட்பு மட்டும் தான் என்கிற அளவில் தொடங்கிய அந்த நீண்ட நெடிய பேச்சுக்கள், நாளடைவில் காரணமின்றி வலுக்கட்டாயமாக நீடித்தது. இதைப்பற்றித்தான் என்றில்லாது எல்லாவற்றைப் பற்றியும் இருவரும் விவாதித்தனர். தொடக்கத்தில் அவளுக்குத்தான் அந்த நீண்ட பேச்சில் அதிக ஆர்வமிருந்தது. பின்னிரவைக்கூட தாண்டிய அந்த பேச்சுக்கள், இருவருக்குள்ளேயும் நட்பைத் தாண்டியதான் ஒரு உறவை அவ்வப்பொழுது அறிமுகம் செய்யத் தொடங்கிற்று. எதற்காக தான் அவளுடன் இவ்வளவு நெருக்கமாக இருக்கிறோம் என்ற கேள்வியை அவன் பலமுறை தன்னுள் கேட்டுக் கொண்டாலும். ஏனோ அவளிடமிருந்து விலகமுடியவில்லை. ஏதோவொன்று, அவளின்பால் தன்னை கட்டிப்போடுகின்றது என்பதை மட்டும் அவனால் தெளிவாக உணரமுடிந்தது.

ஒருநாள் அவளின்பால் இருக்கும் நெருக்கத்திற்கான காரணத்தை ஓரளவுக்கு ஊகிக்க முடிந்தது. ஆனால், இதுதான் காரணமா என்று யோசிக்கும்போது, சிரிப்பு பீறிட்டுக் கிளம்பியது. மேலும் அது ஆச்சிரியமாகவும் இருந்தது. ஆம், அந்த நெருக்கத்திற்கான காரணத்தை எவர் கேட்டாலும் சிரிக்கத்தான் செய்வர். இதோ அந்தக் காரணம் “சண்டை”. இருவரின் நெடிய பேச்சுக்களில் 98 சதவீதம் சண்டைதான் இருந்தது. இதனை சண்டை என்ற வார்த்தையினால் தொடர விரும்பவில்லை. இதற்கு சரியான வார்த்தை “ஊடல்”. பல நேரங்களில் இந்த ஊடல் காரணமில்லாமல் தொடர்ந்தது. சிறுசிறு காரணங்களுக்காகவும், அவள் அதிகம் கோபப்படத் தொடங்கினாள். இதற்கு ஒரு சிறு உதாரணத்தை இங்கு கூறலாம். குறுஞ்செய்தி (SMS) வாயிலாக நடைபெற்ற உரையாடல் இதோ…

அவள் : என்ன செய்து கொண்டிருக்கிறாய்?
அவன் : கல்லூரிக்கு புறப்பட்டுக் கொண்டிருக்கிறேன்.

அவள் : என்ன செய்து கொண்டிருக்கிறாய்? (சில மணித்துளிகள் கழித்து)
அவன் : பேருந்திற்காக காத்துக்கொண்டிருக்கிறேன்.

அவள் : பேருந்து வந்து விட்டதா? (சில மணித்துளிகள் கழித்து)
அவன் : இன்னும் இல்லை.

அவள் : பேருந்து வந்து விட்டதா? (சில மணித்துளிகள் கழித்து)
அவன் : நான் தற்போது கல்லூரியில் இருக்கிறேன்.

அவள் : என்ன கல்லூரியில் இருக்கிறாயா? பேருந்து வந்துவிட்டது என்று எனக்கு ஏன் தெரிவிக்கவில்லை. உன்மீது மிகுந்த கோபத்துடன் இருக்கிறேன். இனிமேல், என்னுடன் பேச வேண்டாம்.

இதற்கு என்ன மறுமொழி அனுப்புவது என்று ஒரு கணம் புரியவேயில்லை அவனுக்கு (கல்லூரி மிக அருகினில் இருந்ததால் பேருந்து கிளம்பிய சில நிமிடங்களிலேயே கல்லூரிக்கு வந்துவிட்டான். இதற்குள் அவளுக்கு செய்தி அனுப்ப இயலவில்லை ). இப்படி புதிராக நடந்துகொள்ளும் இவளை எப்படி புரிந்துக்கொள்வது என்ற கனத்த சிந்தனையே நாளுக்குநாள் அவனை வாட்டத் தொடங்கிற்று. அதுமட்டுமல்லாது, அவளை சமாதானப்படுத்துவதும் அவ்வளது எளிமையானதாக இருக்கவில்லை பகீரதப்பிரயத்தனையையும் தாண்டியது அது. இருந்தாலும் சலிக்காது அவளை சமாதானப்படுத்த முயற்சித்துக் கொண்டே இருந்தான், விக்ரமாதித்தனைப் போல.

அந்த ஊடலும், சமாதானமும் அவனுக்கு பிடித்திருக்கவே வேண்டும். அதனால்தான் மீண்டும் மீண்டும், அவளுடனான. நெருக்கத்தை தொடர்ந்து வந்தான். சில நாட்கள், பேச்சினில் எந்தவொரு சண்டையும் இல்லாமல் போனால், அப்பேச்சு சுவாரசியமற்றதாகவும், ஒருவிதமான வெறுமையாகவும் தோன்றிற்று. இதற்கு காதல் என்று முடிவு கட்டிவிடலாம் என்றால் அதற்கு மனம் ஏனோ ஒப்பவில்லை. அப்படியானால் என்ன இது?

“ஆரம்ப நாட்களில் எல்லோரும் தன்மீது அன்பு பாராட்டுவதாகவும், பின் மெல்ல மெல்ல பிரிந்து விலகிச்சென்றுவிடுவதாகவும், தனக்கென நெருங்கிய தோழன் உண்டனில் அது நீ மட்டும் தான்” என்று அடிக்கடி கூறும் அவளின் வார்த்தைகள் இதனை ‘நட்பு’ மட்டும் தான் என்கிற அளவுகோளுக்குள் கட்டுப்படுத்த முயன்றாலும், அது தோல்வியிலேயே முடிந்தது.

இதற்கு ஒரு முடிவு கட்டிட வேண்டும் என்று தீர்மானித்த அவன், வழக்கத்தை போலில்லாமல் முற்றிலும் மாறுப்பட்ட அணுகுமுறையை அவளிடம் தொடருவது எனத் தீர்மானித்துக் கொண்டான். இதன் முதல்படியாக அவளை சமாதானப்படுத்துவதை நிறுத்திக்கொண்டான். வலியப்போய் பேசுவதை நிறுத்துவது இரண்டாம் படியானது. அவளைத்தவிர மற்ற எவரிடமும் அதிகமாக பேசிராத அவன், தற்போது எல்லோரிடமும் இணக்கத்தை ஏற்படுத்திக் கொண்டது மூன்றாம் படியானது. இதனால், துடிதுடித்தப்போன அவள், செய்வதறியாது திகைத்துப்போனாள். இருப்பினும், தன்நிலையைவிட்டு இறங்கிவர அவளின் அகங்காரம் இடம் கொடுக்கவில்லை. தகவல் தொடர்பை முற்றிலுமாக துண்டித்துக் கொண்டுவிட்ட அவள், இப்பொழுது அவனிடமிருந்து முழுவதுமாக வலகிக்கொண்டுவிட்டாள்.

எட்டுமாத காலம் தொடங்கிய நீண்ட நெடிய பேச்சுக்கள், இப்பொழுது அர்த்தமற்றதாகிப் போனது. ஏதுமில்லாத ஒரு காரணத்தினால், பிரிந்துவிட்ட இவர்கள் இன்று உலகின் எங்கோ ஒரு பகுதியினுள். தன்னுள் அதிக தாக்கத்தை ஏற்படுத்திய முதல் பெண் என்பதினால், அவளைப்பற்றியதான எண்ணங்களை என்றும் மனதில் அவன் சுமந்துகொண்டிருக்கிறான். சமாதான தூது என்பது எப்பொழுதும் ஒரு வழிப்பாதை தான். அதுவும் அப்பாதை ஆண்களுக்கு மட்டுமே உரித்தானது. ஆதலால் அவர்கள் மட்டுமே சமாதான முயற்சியில் இறங்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கும் அவள், அதற்குப்பிறகு ஒருநாள் கூட அவனிடம் பேச முயற்சிக்கவில்லை. தன் கர்வத்தை விட்டொழிக்க முன்வராது, அவன் மன்றாடிக்கேட்டுக் கொண்டால் பேசுவதுபற்றி பரிசீலிக்கலாம் என்று பதிலளித்த இவளின் வார்த்தைகள் அவன் இதயத்தில் எத்தனைக் காயங்களை ஏற்படுத்தியிருக்கும்?

எல்லாம் அர்த்தமற்றதாகிப்போன சூழ்நிலையில், ஒரு நாள் அவளிடமிருந்து தொலைபேசி அழைப்பு, ”தனக்கு திருமணமென்றும் அதற்கு அவன் கட்டாயம் வர வேண்டும்” என்றும் விளிக்கிறாள் அவள். சிறிதும் கூசாது, பேசும் அவளின் மனதை இப்பொழுதும் புரிந்துக்கொள்ள முடியவில்லை. எவரையோ மணந்து கொண்டு, தற்பொழுது பெண் குழந்தையொன்றையும் பெற்றெடுத்திருப்பதாகக் கேள்வி. கனவு போல தொடங்கி, எல்லாம் முடிந்துப் போனது இன்று. காயங்கள் மட்டுமே மிச்சம்.

free hit counters
பதிப்புரிமை © TAMILCAFE. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை / IP கொள்கை 
Disclaimer: This site does not store any files on its server. We only index and link to content provided by other sites.