|

|
தேவை வெளிப்படையானத்தன்மை
“அணுசக்தி
ஒப்பந்தம்” தற்போது இந்தியாவை பிடித்து உலுக்கிக்கொண்டிருக்கும் முக்கிய
சூடான விஷயம். மத்தியில் ஆளும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவிதியை
நிர்ணயிக்கக்கூடிய இந்த ஒப்பந்தம் இன்றைய இந்தியாவின் தலையாய பிரச்சனை.
“நாட்டின் நலனில் எங்களுக்கு மட்டுமே அக்கறை” என்று காட்டிக்கொள்ளத்
துடிக்கும் இடது சாரிகள் இந்த அணுசக்தி ஒப்பந்தத்தை கையிலெடுத்துக்கொண்டு
காங்கிரசு அரசிற்கு பூச்சாண்டி காட்டி வந்தது. “இந்தியாவை அமெரிக்காவிடம்
அடமானம் வைக்கும் முயற்சி தான் இந்த ஒப்பந்தம்” என்ற குற்றச்சாட்டை
முன்வைக்கும் இவர்கள், அணுசக்தி ஒப்பந்தம் குறித்து நாடாளுமன்றத்தில்
வெளிப்படையான விவாதம் நடத்த வேண்டும் என்று வற்புறுத்தி வருகின்றனர்.
இதிலுள்ள ஷரத்துக்கள் ‘இந்தியாவின் எதிர்காலத்தை அமெரிக்காவின் கைகளில்
ஒப்படைத்துவிட வகை செய்கிறது’ என்றும் குற்றம் சாட்டுகின்றனர். மறுபுறம்
பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள், இந்த அணுசக்தி ஒப்பந்தம்தான் நாட்டின்
எதிர்கால மின்சாரத்தேவையை பூர்த்தி செய்யும் ஒரே வழி. ஆதலால், இதனை
ஒப்பாடுபட்டாவது பூர்த்தி செய்தே தீர வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்.
ஆக, இரு தரப்பினரும், தத்தம் வழிமுறைகளில் பிடிவாதமாக இருந்து வருகின்றனர்.
இன்றுவரை,
இந்த நூற்றாண்டின் அவிழ்க்கப்படாத ரகசியமாகத்தான் ‘அணுசக்தி ஒப்பந்தம்’
தொடர்ந்து வருகிறது. ஏராளமான சந்தேகங்களின் தொகுப்பாகவும், குழப்பங்களின்
மொத்த உருவமாகவும் இருந்துவரும் இந்த அணுசக்தி ஒப்பந்தம் உண்மையில்
இந்தியாவிற்கு சாதகமானதா, பாதகமானதா? இதைப்பற்றியதான தெளிவான கருத்துக்கள்,
காங்கிரசிற்கும், இடதுசாரிகளுக்கும் ஏன் எதிர்க்கட்சிக்காரர்களுக்கும் கூட
இருப்பதாகத் தெரியவில்லை. நாளும் ஒரு சந்தேகத்தை கிளப்பிக்கொண்டிருக்கும்
இந்த அணுசக்தி ஒப்பந்தம் இந்தியாவை எவ்வகையில் கட்டுப்படுத்தும் என்பதற்கு
எவரிடமும் நேரடியான பதில்கள் கிடையாது.
முன்னாள் குடியரசுத்தலைவரும், அணு விஞ்ஞானியுமான அப்துல்கலாம் இந்த அணுசக்தி
ஒப்பந்தத்தை ஆதரித்து வரும் வேளையில், முன்னாள் அணுசக்தித்துறை இயக்குனர்கள்
இந்த அணுசக்தி ஒப்பந்தம் நாட்டின் நலனுக்கு எதிரானது என்று அச்சம்
தெரிவித்துள்ளனர். இந்த திட்டம் பயன்பாட்டிற்கு வருவதற்கு மூன்று ஆண்டுகள்
ஆகும் எனவும், மேலும் இதனால் 3 முதல் 6 % மின்சாரத் தேவையை மட்டுமே பூர்த்தி
செய்ய முடியும் என்றும் சொல்லப்படுகிறது.
இந்தியாவிற்கென தனியாக சில சிறப்பு விதிவிலக்குகள் வழங்கப்பட்டுள்ளது
குறித்தும் பல்வேறு சந்தேகங்கள் தெரிவிக்கப்படுகின்றன. குறிப்பாக,
இந்தியாவின் அணு ஆராய்ச்சியையும், அணுகுண்டு சோதனையையும் IAEA
கட்டுப்படுத்தாது என்கிற விதிவிலக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனால், இந்தியா
தன்னிச்சையாகவும், சுதந்திரமாகவும், அணுகுண்டு சோதனையை நடத்திக் கொள்ளலாம்
என்று தற்போதைக்கு எண்ணிக்கொண்டாலும் இந்த காரணத்தையே முன்னிறுத்தி
அமெரிக்கா, ஈராக்கை தாக்கியதைப் போல, ஒருநாள் இந்தியாவையும் தாக்காது
என்பதற்கு என்ன உத்தரவாதம்?
மேலும்,
மன்மோகன் இந்த விஷயத்தில் இவ்வளவு வேகம் காட்டுவது ஏன்? அதே சமயம்,
அமெரிக்கா இவ்விஷயத்தில் இந்தியாவிற்கு வலியவந்து உதவுவது ஏன்? இந்தியாவின்
சார்பாக, அமெரிக்கா மற்ற IAEA உறுப்பு நாடுகளின் சம்மதத்தை, ஆதரவை கோருவது
ஏன்? பெரியண்ணன் தனமாக எப்பொழுதும் நடந்துகொள்ளும், அமெரிக்காவின் காய்
நகர்த்தல்களின் பின்ணனி என்ன? எதை எதிர்பார்த்து அவர்கள் இதனையெல்லாம்
செய்கின்றனர்? இப்படி கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனாலும், பதில்
அளிப்பதற்கு எவருமிலர்.
அணு உலைகளை கட்டுவதற்கு ஆகும் செலவைப்போலவே பன்மடங்கு அணுக்கழிவுகளை
நீக்குவதற்கும் செலவு செய்ய வேண்டும். சமீபத்தில் அமெரிக்காவில், மிசிசிபி
ஆற்றின் அருகிலிருக்கும் அணு உலையின் கழிவுகளை அகற்றுவதற்கு தேவையான உத்தேச
தொகை ரூ.4 இலட்சம் கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. இவ்வளவு பெரிய தொகை
வருங்காலத்தில் இந்தியா எப்படி எதிர்கொள்ளும்?
மத்திய
அரசின் இறுதிக்காலத்தில் ஏதாவது காரணத்தைக்காட்டி தான் அளித்துவரும் ஆதரவை
எப்படியாவது விலக்கிக்கொள்ள வேண்டும் என்று காத்துக்கொண்டிருந்த
இடதுசாரிகள் தற்போது அணுசக்தி ஒப்பந்தத்தை காரணம் காட்டி ஆதரவை
விலக்கிக்கொண்டுவிட்டனர். வரும் நாடாளுமன்றத் தேர்தலில், காங்கிரசுடன்
கூட்டணி அமைத்து போட்டியிடுவதனால் தனக்கு எந்த பயனும் இல்லையென்பதை
தெளிவாக அறிந்துக்கொண்ட இவர்கள், முழுக்க முழுக்க தேர்தலையும், ஓட்டு
வங்கியையும் குறிவைத்து தான் ஆதரவை திரும்பப் பெற்றுக்கொண்டு விட்டனர்.
உண்மையில் அணுசக்தி ஒப்பந்தம் குறித்து அ… ஆ… கூட இவர்களுக்கு தெரியாது
என்பது தான் நிதர்சனமான உண்மை. அப்படி தெரிநித்திருந்தால், அதைப்பற்றியதான
தெளிவான விளக்கத்தை அதனால் ஏற்படும் பாதகத்தை நாட்டின் அனைத்து
நாளிதழ்களிலும் அந்தந்த பிராந்திய மொழிகளில் வெளியிட்டிருக்கலாமே?
பொத்தாம் பொதுவான குற்றச்சாட்டைத்தான் முன்மொழிகிறார்களே தவிர
உள்ளார்ந்த குற்றச்சாட்டு ஒன்றுகூட தெரிவிக்க முடியவில்லை. இதே நிலைமைதான்
ப.ஜா.க.வுக்கும். அணுசக்தி ஒப்பந்தம் குறித்த அடிப்படை விஷயங்கள் கூட
பா.ஜ.க.வின் பல தலைவர்களுக்கு தெரியவில்லை. அதில் என்ன நடக்கிறது என்பது
இவர்களுக்கு இன்னும் புரியாத புதிராகவே தொடர்கிறது.
அணு
சக்தி ஒப்பந்தம் நாட்டின் அத்தியாவசியத் தேவைகளுள் ஒன்நு என்று கூப்பாடு
போடும் பல காங்கிரசு தலைவர்களின் வார்த்தைகள் முன்னுக்குப்பின் முரணாக
உள்ளது. சர்வதேச அணுசக்தி முகமையுடன் ஏற்படுத்திக் கொள்ளும் ஒப்பந்தம்
குறித்த ஷரத்துக்கள், நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெற்ற பிறகே வெளியிடப்படும்
என தெரிவித்த அன்றிரவே, திடிரென இந்திய அணுசக்தி துறையின் இணையதளத்தில்
ஷரத்துக்கள் வெளியிடப்படுகின்றன. பலருக்கு அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும்
ஏற்படுத்திய இந்த செயல், எதைக் காட்டுகிறது. காங்கிரசு அரசு செயலிழந்து
விட்டது. அது கட்டுப்பாடு இழந்துவிட்டது. அது முடங்கிப்போனது என்பதைத்தான்
தெரிவிக்கின்றனவா? இதற்கிடையில், ராகுல் காந்தி தன் கற்பனையில்
தோன்றுவதையெல்லாம் உளறிக்கொண்டிருக்கிறார். தான் மட்டும்தான் இந்திய
இளைஞர்களின் ஒரே முன்னுதாரணம் என்று மனக்கோட்டை கட்டிக்கொண்டிருக்கும்
இவரின் வாயிலிருந்து உதிர்ந்த நகைச்சுவை முத்துக்கள் இதோ “அணுசக்தி
ஒப்பந்தம் இந்திய இளைஞர்களுக்கு பெருமளவில் வேலைவாய்ப்பினை
ஏற்படுத்திக்கொடுக்கும். பிரதமர் அவர்கள் எடுத்த முடிவு சரியானதே”. வேலை
வாய்ப்புக்கும் அணுசக்தி ஒப்பந்தத்திற்கும் முடிச்சு போடும் இவரின்
அறியாமையை கண்டு வருத்தப்படுவதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்? உண்மையில்
ஒப்பந்தம் குறித்து ஓரளவிற்காவது தெரிந்திருந்தால் தொலைக்காட்சியில்
தோன்றி மக்களுக்கு தெளிவு ஏற்படுத்தியிருக்கலாமே, தம் பக்க நியாயத்தை
எடுத்துரைத்திருக்காலாமே? உண்மை நிலையை புரிய வைத்திருக்கலாமே? ஆக,
இவருக்கும் அதைப்பற்றி ஒன்றும் தெரியாது வெளியுறவுத்துறை செயலர்,
அணுசக்தித்துறை அதிகாரிகள் எவருக்காவது தெரியுமா என்பது கூட சந்தேகமே.
தொலைநோக்குப்பார்வையுடன் செயல்படுத்தப்படும் இந்த திட்டம் இந்திய
வரலாற்றின் முக்கிய பகுதியாகத் திகழும் என்று வார்த்தை ஜாலங்களைத்தான்
திரும்பக் திரும்பக் ஆளுங்கட்சியினரும், அணுசக்தி ஒப்பந்தத்தை ஆதரிப்பவரும்
தெரிவிக்கன்றனரே தவிர, வேறு எதனையும் அவர்கள் தெரிவிப்பதில்லை. நாட்டு
மக்கள் நலன் கருதி செயல்படுத்தப்படும் திட்டமிது எனில், முதலில்
நாட்டுமக்களுக்கு அத்திட்டத்தைப் பற்றியதான விளக்கங்களை அளிப்பது தானே
நியாயம்? இதன் மர்ம முடிச்சுகளை அவிழ்க்காமல் ஒப்பந்தத்தில் கையெழுத்து
இடுவது எந்த வகையில் ஏற்கக்கூடியது?
"ஈரானிலிருந்து
குறைந்த விலையில் எண்ணெய் பெறும் திட்டம் கைவிடப்பட்டு, அதற்கு மாறாக
அணுசக்தி ஒப்பந்தம் நிறைவேற்றப்பட உள்ளது" என்றும் கூறப்படுகிறது.
03.07.2008 - தினமணி தலையங்கத்தில் முன்னாள் தலைமைச்செயலர் திரிபுரா
சர்வதேச அணுசக்தி முகமையின் ஹைட் சட்டமானது “அமெரிக்காவின் தேர்க்கால்களில்
இந்தியாவைக் கட்டி சவாரி செய்வதற்கு ஒப்பானது” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அதே தினமணி 11.07.2008- தலையங்கத்தில் கீழ்க்கண்டவாறு
குறிப்பிடுகிறது. “ஆரம்பம் முதலே இந்த ஓப்பந்தத்தை எதிர்த்து வருவதற்குக்
காரணம் இது அமெரிக்காவுடனான ஓப்பந்தம் என்பதால் அல்ல. அணுசக்தி மூலம் நாம்
அடையப்போகும் எரிசக்தி ஆதாயம் மூன்று சதவிகிதம் முதல் ஆறு சதவிகிதம்வரைதான்
என்பதால். அதற்கான முதலீடு பல்லாயிரம் கோடி என்பதும், அத்தனையும் அன்னிய
முதலீடு என்பதும், என்ரான்போல அந்த பன்னாட்டு நிறுவ னங்கள் நமக்குத் தரும்
மின்சாரத்திற்கு மிகப் பெரிய கட்டணம் வசூலிக்கும் என்பதும்தான்
எதிர்ப்புக்குக் காரணம். இன்னொரு காரணம். இதனால் வருங்காலச் சந்ததியினர்
சந்திக்க இருக்கும் ஆபத்து கொஞ்சநஞ்சமல்ல என்பது. நமது மூதாதையர்கள் நமக்கு
நல்லதொரு பூமியை விட்டுச் சென்றனர். அணுசக்தி கதிரியக்கத்தால் மூளை
வளர்ச்சியடையாத உடல் ஊனமுற்ற சந்ததியினர் உருவாகும் ஆபத்து நிறையவே உண்டு.
அணுசக்தியைப் பயன்ப டுத்தி எரிசக்தியைத் தயாரித்து உபயோகித்து விட்டு,
அணுசக்திக் கழி வுகளால் ஏற்படும் கதிரியக்க விளைவுகளை வருங்காலச்
சந்ததியினருக்கு விட்டுச்செல்லும் மாபாதகத்தை செய்யலாகாது ”. இந்த அபாய
எச்சரிக்கைக்கு மன்மோகன்சிங் அரசு இதுவரை பதில் அளிக்காதது ஏன்? தமிழக
முதல்வர் கருணாநிதிக்கு இதைப்பற்றி ஏதாவது தெரியுமா? கேளிக்கை விழாக்களிலும்,
குடும்ப குதூகலங்களிலும் உறைந்துவிட்ட இவருக்கு தமிழக மக்களைப்பற்றியும்,
இந்திய நாட்டைப்பற்றியும் என்றைக்காவது கவலை இருந்ததுண்டா?
நாட்டின்
டீசல் கொள்முதலில் சுமார் 40% ரயில்வேத்துறையே கொள்முதல் செய்து
கொள்கிறது. இதற்கு மாற்றாக, அனைத்து இருப்புபாதைகளையும் மின்சாரப்பாதைகளாக
மாற்றிவிட்டால், பெருமளவுக்கு டீசலின் தேவையை குறைத்துக்கொள்ளலாம். ஆகவே
அணுசக்தி ஒப்பந்தத்தில் மன்மோகன் சிங் அரசு, முதலில் வெளிப்படையான தன்மையை
மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொரு கட்டமும் நாட்டு மக்களுக்கு தெரிவிக்கப்பட்ட
பின்னரே அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும். இவ்விஷயத்தில் ஒளிவு மறைவு
என்ற பேச்சுக்கே இடமிருக்கக் கூடாது. “அடுத்தது தாட்டும் பளிங்கு போல”
பிரதமர் மன்மோகன் சிங்கின் நடவடிக்கைகள் இருக்க வேண்டும். தேவையேற்படின்
தன்னிலை விளக்கமும் அளிப்பது அரசின் கடமையாகும். அணுசக்தி ஒப்பந்தத்தின்
பாதகங்களை ஆதாரங்களுடன் வெளியிடுவதுதான் உண்மையான எதிர்க்கட்சியின்
செயல்பாடாக இருக்கும். உண்மை என்பது கண்ணுக்குத் தெரிய வேண்டும். காதுக்கு
அல்ல என்பதை இந்நேரத்தில் அணுசக்தி ஒப்பந்தத்தை எதிர்ப்பவர்களுக்கு
எடுத்துரைக்க விரும்புகிறேன். வறட்டு குற்றச்சாட்டுகளை தெரிவிப்பதை விடுத்து,
ஆதாரபூர்வமான, அறிவியல்பூர்வமான குற்றச்சாட்டுகளை மக்கள் மன்றத்தில்
தெரிவிப்பது எதிர்க்கட்சிகளின் ஜனநாயகக் கடமையாகும்.
தேர்தலில் வெற்றி என்பது ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளின்
வெளிப்படையான செயல்பாட்டை பொறுத்தே அமையும் என்பதை இவர்கள் மறந்து
செயல்பட்டால், மக்கள் நிச்சயம் அதனை நினைவுபடுத்துவர்.
|
|