Can't view the contents correctly? Click Here >>

சங்க இலக்கியத் தனித்தன்மை

தமிழனின் அறிவுத்திறனை பறைசாற்றும் கட்டுரையொன்றின் நினைவுக் குறிப்பேட்டிலிருந்து…

திருமணமான ஓருவர் தேன் நிலவுக்கு பாலைவனத்துக்கோ, கடல் பகுதிக்கோ, காட்டுப் பகுதிக்கோ செல்வதில்லையே ஏன்? ஊட்டி, கொடைக்கானல், சிம்லா என்பன போன்ற மலைப்பாங்கான பகுதிகளைத்தானே இன்றும் தேர்ந்தெடுக்கின்றனர். அப்படியானால் மலையும் மலைசார்ந்த இடமுமான குறிஞ்சிக்கே புணர்தலும் புணர்தல் நிமித்தமும் உரிமையுடையது என்பது தெளிவாகிறது. அந்தத் தட்பவெப்பம் மனதுக்கு மகிழ்வையும் இன்பத்தையும் தரும் என்பது உண்மை.

காட்டுக்கு வேட்டையாடச் செல்பவன் தனித்துச் செல்வதுண்டு. அப்படி காட்டுக்கு வேட்டையாடச் செல்பவன் மீண்டு வருவதில் சில சங்கடங்கள் உண்டு. அவன் பத்திரமாகத் திரும்பி வர வேண்டும் என்று இல்லுறை தெய்வத்தை வேண்டிக்கொண்டு கற்புக்கடம் பூண்டவளாய் இருத்தல் காட் டுப்பகுதியாகிய முல் லைக்கு உரிய இருத்தலும் இருத்தல் நிமித்தமுமாகிய உரிப்பொருள்.

வயலும் வயல் சார்ந்த இடங்களிலும் இருவரும் வேலை செய்வர். அலுத்துப் போய் இருவரும் வீடு வருதல் உண்டு. அலுப்பின் காரணம் இருவர் மனத்திலும் அன்பை மறைத்து கசப்பை ஏற்படுத்தலும் உண்டு. எனவேதான் பரத்தையிற் பிரிவும் ஊடலும் விளைவதற்கான நிலமாக மருதம் அமைகிறது.

நெய்தல் நிலத்தவர்கள் கடலுக்குள் தனியாகச் செல்வதில்லை. கூட்டமாகவே செல்வர். கரைமேல் இருக்கும் தலைவியர்களும், மக்களும், உறவினர்களும் கடல்மேல் விழிவைத்து அவர்களைக் காணக் காத்திருப்பர். அந்நிலையில் ஓருவருக்காக ஓருவர் இரங்கல் இயல்பாக நடப்பதொன்றாகும். எனவே தான் இரங்கலும் இரங்கல் நிமித்தமும் நெய்தலுக்கு உரியதாயிற்று.

மணலும் மணல் சார்ந்த இட முமான பாலை வெப்பமானது; தலைவியை உடன் அழைத்துச் செல்ல இயலாது. இதனால் குடும்ப நலன் கருதி, பொருள் வேண்டி, இல்லறத்தை நல்லற மாக்கப் பல துன்பங்களையும் தலைவன் அனுபவித்து வருகி றான். நீரில்லாப் பாலை நிலத்தைப்போல தலைவனில்லா இல்லம் வெறுமையாய்த் தலைவிக்குத் தெரியும். தலைவியின் மன வெறுமையைக் காட்டுவதாக நிலம் அமைகிறது. எனவே பிரிதலும் பிரிதல் நிமித்தமும் பாலைக்கு உரியதாகிறது.

குறிஞ்சி, முல்லை, பாலை ஆகியவற்றின் உரிப்பொருள் தலைவன் தலைவியின் மன உணர்வைப் பொறுத்தது. அவர்கள் இருவருக்கு மட்டுமே உரியது. மருதத்தில் பரத்தை இடைப்படுகிறாள். நெய்தல், சுற்றத்தார்க்கு தொடர்புடைய உரிப்பொருளாக அமைகிறது.

நிலத்தை முதற்பொருளாகக் கொண்டு விளையும் பொருள்களைக் கருப்பொருளாக்கி சூழலுக்கு உரிமையுடைய மனித மனவுணர்வுகளை அடிப்படையாக வைத்து உரிப்பொருளாக்கி அறம் பிறழா அகவாழ்வைப் படைத்துள்ள தமிழரின் நுண்ணறிவு வியக்கத்தக்கதுதானே! இந்த அகநூல்களும், புறநூல் களும் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ் மக்களைக் கண்முன்னே காட்டுகின்றன. போர் பற்றிய செய்திகளைக் கூறுவதாகப் புறத்திணை இலக்கணம் அமைந்துள்ளது. இனால் புறஇலக்கியங்கள் அகவாழ்க்கையல்லாத அனைத்தையும் பேசுகின்றன. எனவே அகமல்லாத அனைத்தும் புறப்பொருள் எனக் கொள்வதே ஏற்புடையது. இதனால் அவை அனைத்தும் தொல்காப்பியரின் புறத்திணைத் துறைகளுக்குள்ளேயே அடங்கிவிடுகின்றன.

நாகரிகம், பண்பாடு, வரலாறு, பட்டறிவு, போர், வீரம், புகழ், கொடை, கல்வி, அறிவுரை போன்ற பல்வேறு செய்திகள் புறப்பாடல்களில் இடம்பெற்று சங்ககாலச் சமுதாய வாழ்க்கையைத் திறம்படக் காட்டுகின்றன.

"யாதும் ஊரே யாவரும் கேளிர்', என்றும் நஞ்சும் உண்பர் நனி நாகரிகர் என்றும், தீதும் நன்றும் பிறர் தர வருவதில்லை; அவரவர் செயலால் வருவதே என்றும், புகழெனின் உயிரும் கொடுப்பர், பழி எனின் உலகையே கொடுத்தாலும் பெற மாட்டார்கள் என்றும் அவை பண்பாடு கூறும். மூத்தோன் வருக என்னாது கல்வி கற்ற இளையோனை வருக என அழைத்துக் கல்விக்குச் சிறப்புக்கொடுப்பன.

ஓரு நாள் இருநாள் அல்ல பல நாள் பலரொடு சென்றாலும் முகம் சுளிக்காது கொடைதரும் அரசும், தனக்கென வாழாது பிறர்க்கென முயலுநர் உள்ளதால் உலகுநிலை நிற்கும் பண்பும் பேசுகின்றன. யான் போரில் தோற்றால் புலவர் பாடாது என் நிலம் அழியட்டும் எனச் சூளுரைத்த போதும், முரசு கட்டிலிலே புலவன் தூங்க, வெகுளாது கவரி வீசியும் தமிழ் வ ளர் த்த பாங்கினைக் காட்டுகின்றன.

என் புலமைக்குப் பரிசுதர நீ விரும்பினால், பிரிந்திருக்கும் உன் மனைவியைச் சென்று சேர் என அறநெறிப்படுத்திய விதமும், உன்னிடம் தோற்றுப் போனவன் வடக்கிருந்து உயிர் நீத்தான், அவன் உன்னினும் நல்லன் என அறிவுறுத்திய திறமும் காட்டுகின்றன.

பிற இலக்கியங்களில் நாம் படித்துப் பயனடைய இன்னும் எவ்வளவோ செய்திகளும், நல் வாழ்வுக்குப் பாதைகாட்டும் அறங்களும், படித்துச் சுவைக்க இனிமையான வருணனைகளும், கற்பனைக்கு எட்டா கவினுறு வனப்பும், உணர்வுமிக்க பாடல்களும் நிரம்பிக் கிடக்கின்றன. அவை பகுப்பிலும், பொருளிலும் அக்காலத் தமிழரின் அறிவுத்திறத்தைக் காட்டுகின்றன. சங்க இலக்கியங்கள் எப்படி வாழவேண்டும் என்பதற்கு எழுதப்பட்டவை. எப்படி வாழக்கூடாது என்று அவை கூறவில்லை. எனவே இப்படித்தான் வாழவேண்டும் என்ற நெறிப்பட்ட வாழ்வு காட்டி, வளரும் சமுதாயம் சிறக்கத் துணைசெய்யும் சங்க இலக்கியங்கள் பொருள் புரிந்து படிக்க வேண்டியவை.

நன்றி : தினமணி

 

free hit counters
பதிப்புரிமை © TAMILCAFE. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை / IP கொள்கை 
Disclaimer: This site does not store any files on its server. We only index and link to content provided by other sites.