எங்கே இனவெறி?
ஆஸ்திரேலியாவில்
தொடங்கிய இந்தியர்களுக்கெதிரான இனவெறித் தாக்குதல்கள் தற்போது கனடாவிலும்
தலைக்காட்டத் தொடங்கியுள்ளது. ‘பிரிவினை’ என்னும் சிறுமைத்தனத்தை மனிதன்
எத்துணை நூற்றாண்டுகளானாலும் விட்டுக்கொடுக்கப்போவதில்லை என்பது
நிருபணமாகியுள்ளது. மனித இனம் தன்னை எப்போதும் ஒரே இனமாக நினைப்பதில்லை.
தற்போது இந்தியர்களுக்கெதிராக அரங்கேறி வரும் இந்த இனவெறித் தாக்குதல்கள்
எல்லா காலகட்டங்களிலும் அங்கொன்று இங்கொன்றுமாக நடந்து வந்து கொண்டுதான்
இருக்கின்றது. இத்தகைய இனவெறித் தாக்குதல்கள், என்னைப்பொறுத்தவரை
இந்தியாவிற்குள்ளேயே பரவலாக நிகழ்கின்றது.
எப்பொழுதெல்லாம்
காவிரி பிரச்சனை தலையெடுக்கின்றதோ அப்பொழுதெல்லாம் கர்நாடத் தமிழர்கள்
தாக்கப்படுவது வாடிக்கைதானே?! அவர்களின் உடைமைகள் சூறாயாடப்படுவதும்,
வீடுகள் தாக்கப்படுவதும் வெகு சாதாரண நிகழ்வுகளாகிவிட்டது எதனைக்
காட்டுகிறது? இதனை நானே என் அனுபவத்தில் நேராக கண்டிருக்கிறேன். நவம்பர்
2006 காவிரிப் பிரச்சனை காரணமாக கர்நாடகமும் தமிழகமும் பிளவுபட்டிருந்தது.
தமிழகத்திலிருந்து எந்த பேருந்தும் பெங்களூர் செல்லவில்லை. (ஆனால் கர்நாடக
அரசு பேருந்துகள் மட்டும் தமிழகம் வந்து சென்றுகொண்டிருந்தன.)
தமிழகப்பேருந்துகள் தமிழக-கர்நாடக எல்லையான அத்திப்பள்ளியிலேயே (சற்று
அதற்கு முன்பாகவே) நின்றுவிடும்.
பின்
அங்கிருந்து சுமார் 1 கி.மீ நடந்து சென்றுதான் கர்நாடக பேருந்துகள்
பிடித்துச் செல்லவேண்டும். இப்படித்தான் நானும் அன்று என்னுடைய பணி உத்தரவு
பெறுவதற்காக சென்றேன். அப்பொழுது நான் நினைத்துக் கொண்டேன், “நாம் இருப்பது
இந்தியாவில் தானா?” என்று. ஒரு நாட்டு எல்லையிலிருந்து இன்னொரு நாட்டு
எல்லையினை கடப்பது போலத்தான் இருந்தது அன்று. தமிழர்கள் என்றாலே
கிள்ளுக்கீரையாக எண்ணிக்கொண்டு இனவெறித் தாக்குதல்கள் நடத்தும் நிலை இந்த
நிமிடமும் இருப்பதை யாராலும் மறுக்கமுடியுமா? அண்டை மாநிலத்துக்காரனே நம்மை
வேற்றுகிரகவாசிகளைப் போல நடத்துவதும், கடுமையாக தாக்குவதும் தொடரும்போது
ஆஸ்திரேலியர்கள் இந்தியர்களை தாக்குவதில் ஆச்சரியமென்ன இருக்கிறது?
தமிழக-கர்நாடக
பிரச்சனையை வைத்து காலம்காலமாக அரசியல் குளிர்காயும் திராவிடத்தலைவர்களின்
குள்ளநரித்தனத்தை அப்படியே நகல் எடுத்திருக்கிறார் மகாராஷ்டிரா நவநிர்மான்
சேவா தலைவர் உத்தவ் தாக்கரே. “பீகாரிகள் தங்களது வேலைவாய்ப்பினை
பறித்துக்கொள்வதாகக் கூறி அவர்களை கடுமையாக தாக்கியதோடு பெரும்பான்மை மக்களை
அம்மாநிலத்தைவிட்டே விரட்டியும் விட்டனர். இதற்கு மூலகாரணமான உத்தவ் தாக்கரே
மீது இதுவரை எந்த தேசியப் பாதுகாப்புச் சட்டமும் பாய்ந்ததாகத்
தெரியவில்லை.அவர் விரலசைவுக்கு ஆடும் ஆட்டுமந்தைகள் கண்ணில் படும் வேற்று
மாநிலத்தவர்களையெல்லாம் கடுமையாக தாக்குகின்றனர். இது இனவெறித் தாக்குதல்
இல்லையா?
ஒரு
மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்துக்குச் சென்று வாழவும், சொத்துக்களை
வாங்கவும்/விற்ககவும் முழு சுதந்திரமிருப்பதை இந்திய அரசியலைமைப்புச்
சட்டத்தில் மிகத்தெளிவாக வரையறைத்திருப்பினும் மக்கள் தாக்கப்படுவது ஏன்?
இந்தியா குடியரசு நாடுதானா என்கிற ஐயம் எழுகிறதல்லவா?
இவன்
தமிழன், இவன் தெலுங்கன், இவன் மலையாளி என்கிற பாகுபாடுகள் தொடரும்வரை
இந்தியர்கள் தாக்கப்படுவதும் தொடரத்தான் செய்யும். “இந்தியா என் தாய்நாடு;
இந்தியர் யாவரும் என் உடன்பிறந்தோர்” என்ற பள்ளி காலைவணக்கக் கூட்ட
உறுதிமொழி வாசகங்கள் வெறும் சடங்குகளாகவே தொடரும்வரை இந்தியர்கள்
தாக்கப்படுவதும் தொடரத்தான் செய்யும்.தேசிய ஒருமைப்பாடு, தேசிய உணர்வு
என்பதெல்லாம் வெறூம் வார்த்தைகளாகவே தொடரும்வரை இந்தியர்கள் தாக்கப்படுவதும்
தொடரத்தான் செய்யும். சத்குரு அவர்கள் அடிக்கடி வலியுறுத்திக் கூறுவது
“எல்லா உயிர்களும் உனக்குள் அடக்கும்” என்று. எல்லாம் எனக்குள்ளேயே
இருக்கும்போது, எல்லாம் நானாகவே இருக்கும்போது என்னிலிருந்து மற்றவனை எப்படி
பிரித்துப்பார்க்க முடியும்?. ஆம், இந்த நிலை ஏற்படும் நாள்தான்
உலகத்தைவிட்டு இனவெறி மறையும்.
|